காந்திஜியும், கன்னியாகுமரி ஆலயப் பிரவேசமும்!

Gandhi Jayanti Essay: காந்தியடிகளுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையிலான உறவு இப்படி சுவாரசியமும் நெருக்கமும் கலந்தது.

By: Updated: October 1, 2019, 06:49:50 PM

முனைவர் எஸ்.பத்மநாபன்

காந்தியடிகள் முதலில் கன்னியாகுமரி வந்தது 14-03-1925 அன்று! அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்கிற இடத்தில் ஆலயத்திற்கு செல்லும் சாலையை அரிஜனங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதற்காக நடைபெற்ற சத்தியாகிரகம் அண்ணல் காந்தியடிகளின் கவனத்தை கவர்ந்தது. இந்த சத்தியாகிரகத்தை அவர் ஆதரித்து கேரளா வந்தார். அப்போது கேரளம் தோன்றவில்லை, திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்தது. அந்நேரத்தில் காந்தியடிகள் சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் வருகை தந்தார்.

வைக்கம் சென்றுவிட்டு, 14-03-1925-ல் காந்திஜி கன்னியாகுமரிக்கு வந்தார். பிரிட்டீஷ் ரெசிடெண்டின் கீழ் இருந்த அரசு மாளிகையில் திருவிதாங்கூர் சமஸ்தான அரசின் விருந்தினராக அண்ணல் தங்கினார். சிறிது நேரம் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு, மூன்று கடல்களும் ஓடிவந்து பாரத்தாயின் புனித பாதங்களைத் தொடும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் படிகளில் நின்று கொண்டிருந்தார்.

ஒரு பெரிய அலை வந்து அண்ணலின் உடல் முழுவதையும் நனைத்துவிட்டது. அண்ணல் சிரித்துக்கொண்டே, ‘சமுத்திரத் தாய் என்னை நீராட்டி வரவேற்கிறாள் போலும்’ என்று சொன்னார். அண்ணலின் பக்தி உள்ளத்தை கன்னியாகுமரி மிகவும் நெகிழச் செய்திருந்தது. 29-03-1925 நவஜீவன் இதழில் அவர் எழுதிய கட்டுரை இதற்கு சான்றாக விளங்குகிறது.

அந்தக் கட்டுரைக்கு, ‘கன்னியாகுமரி தரிசனம்’ என்று அழகான தலைப்பிட்டு குமரித் துறையை சிறப்பித்திருந்தார் அண்ணல். ‘கம்பீரமாக சூரியன் மறையும் காட்சியை பார்த்துவிட்டு போகலாம் என அரசு விருந்தினர் மாளிகை வாயில் காப்போர் எங்களை எவ்வளவோ வலியுறுத்தினர். ஆனால் காலில் வென்னீரை ஊற்றிக் கொண்டு வந்துள்ள நாங்கள் இவ்வளவு பெரிய பாக்கியத்தை அனுபவிக்க எப்படி தங்க முடியும்? பாரத் தாயின் கால்களை கழுவி புனிதப்படுத்திய சமுத்திர அலைகள் பட்டு என்னுடைய பாதங்கள் புனிதமடைந்ததுடன் நான் மனநிறைவு அடைய வேண்டியதாயிற்று’ என்று கூறி தங்குமிடம் சென்றுவிட்டார் காந்தியடிகள்.

2-வது முறையாக 23-01-1934 அன்று இரவு காந்தியடிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து அங்குள்ள அருணாசலம் பண்டாரம் தர்ம சத்திரத்தில் தங்கினார். மறுநாள் அவருடைய மவுன தினம். அன்று அவர் கடலில் குளித்துவிட்டுச் சென்றார்.

3-வது முறையாக 14-01-1937-ல் குமரிக்கு வருகை தந்தார். அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சித்திரை திருநாள் மாமன்னர் ஆலய பிரவேச விளம்பரத்தை பிரகடனம் செய்தார். அதை வரவேற்று காந்திஜி திருவிதாங்கூரில் பயணம் மேற்கொண்டார். திருவனந்தபுரம் சென்றுவிட்டு, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வந்தார். அப்போதுதான் காந்தியடிகள் நாகர்கோவிலில் தங்கினார்.

15.01.1937 அன்று கன்னியாகுமரியில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசியது. காந்திஜி அமைதியாக அங்கே தூங்கினார். அதிகாலையில் எழுந்து மற்ற வழக்கமான வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு கடற்கரை ஓரமாக உலாவப் போனார். பயணத்தில் களைப்பெல்லாம் பறந்தோடிவிட்டது. உற்சாகமாக காணப்பட்டார். பிறகு காந்திஜி காலையில் ஆலய வழிபாட்டிற்குச் சென்றார். பஜனை பாடிக்கொண்டே காந்திஜி உட்பட எல்லோரும் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி விட்டு பிரதான வாசல் வழியாக ஆலயத்தினுள் நுழைந்தனர்.

இதற்கு முன்பு அவர் கன்னியாகுமரி வந்த போது அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கப்பால் இக்கோவிலில் அனுமதிக்கவில்லை என்பதற்காக காந்திஜி மிகவும் வருந்தினார். இப்பொழுதோ அறநிலை உதவி ஆணையர் மகாதேவ ஐயர் தலைமையின் கீழ் கோயில் அதிகாரிகளும், அர்ச்சகர்களும் வந்திருந்து அண்ணலை மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். கோவிலுக்குள் பிராமணர்கள் எதுவரை செல்லலாமோ அதுவரை காந்திஜி சென்றார்.
இந்தச் சமயத்தில் காந்திஜிக்கு ஓர் ஐயம் தோன்றிவிட்டது. தம்முடன் வந்திருப்பவர்களில் யாரெல்லாம் அரிஜனங்கள் என்று அவருக்குத் தெரியாது. இங்கே யாராவது அரிஜனங்கள் இருக்கிறார்களா? என்று அவர் கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார். அப்போது பஜனைக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் நாங்களெல்லாம் அரிஜனங்கள் தான் என்று சொன்னார்கள். காந்திஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பின்னர் மற்ற சன்னதிகளுக்கும் சென்று அவர் வந்த போது அங்கு போடப்பட்டிருந்த அற்புதமான கோலங்களை அவரிடம் காண்பித்தார்கள். அவற்றைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் விவேகானந்தா நூல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த புத்தகங்கள் சிலவற்றைப் புரட்டிப் பார்த்துவிட்டு நூல்நிலையத்தார் நல்ல இலக்கியங்கள் வைத்திருப்பதையும், நிலையத்தை நல்ல முறையில் பாதுகாத்து வருவதையும் பாராட்டினார்.

இங்கு ஒரு நிகழ்ச்சி: விவேகானந்தா நூல் நிலைய மேற்பார்வையாளர் காந்திஜியிடம் ஒரு தட்டில் நல்ல மாம்பழங்களையும் மட்டிபழத்தையும் வைத்து அவரிடம் கொடுத்து இந்த பழங்கள் மிகச் சிறந்தவை, வேறு எங்கும் கிடைக்காது என்று கூறினார். உடனே காந்திஜி சிரித்துக் கொண்டே அப்படியானால் நான் இங்கேயே தங்கிவிடட்டுமா? என்று கேட்ட போது பக்கத்தில் நின்றவர்கள் எல்லோருமே சிரித்தார்கள்.

பிறகு கன்னியாகுமரியில் இருந்து காந்திஜியும் அவர் குழுவினரும் கொட்டாரம் வழியாக சுசீந்திரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இது தான் காந்திஜி கன்னியாகுமரிக்கு கடைசியாக வந்தது.

இதை எல்லாம் மனதிற்கொண்டு குமரிக்கடலில் காந்தியடிகளின் அஸ்தி 12.02.1948 அன்று கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு 1956ம் ஆண்டு குமரிக்கடற்கரையில் அவர் நினைவாக ஒரு மண்டபம் எழுப்பப்பட்டது. அந்த மண்டபத்தில் ஒரு விஷேசம் என்னவென்றால் அவர் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள ஒரு துவாரம் வழியாக காந்தியடிகளின் அஸ்தி வைத்த இடத்தில் சூரிய ஒளி விழும். இந்நிகழ்ச்சியை வருடந்தோறும் அக்டோபர் 2 அன்று தமிழ் நாடு அரசு சிறப்பாக நடத்துகின்றது.

காந்தியடிகளைப் பற்றி கலாம்

மகாத்மா காந்தியின் மீது கொண்ட மரியாதை காரணமாக 120 நாடுகளில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. 70 நாடுகளில் காந்திக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் 40 இடங்களில் காந்திக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. காந்திக்கு 9 வயதான போது அவரது தாயார், ‘மகனே ஒருவர் துன்பத்தில் இருந்தால் அவருக்கு ஏதேனும் மாற்றத்தை உருவாக்கி அவரை முன்னேற்றினால், கடவுள் உனக்கு சிறப்பாக அருள்புரிவார் என்றார். இதை மனதிற்கொண்டு காந்தியடிகள் வாழ்க்கை நடத்தினார். இதை எடுத்துக்கூறி குடியரசுத் தலைவராக இருந்த முனைவர் எ.பி.ஜெ, அப்துல் கலாம் காந்தியடிகளைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

குமரித்துறைக்கு வருகை தந்த மூன்று முறைகளும் அவர் நாகர்கோவில் வந்தார். ஆனால், 1937ல் தான் நாகர்கோவிலில் அவர் தங்கி அங்கு நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

1937ல் காந்திஜி, நாகர்கோவில் வந்தபோது அரிஜன சேவா சங்கத்தலைவர் டாக்டர் நாயுடு, நகராட்சி தலைவர் சங்கரன் பிள்ளை மற்றும் பலர் மாலையிட்டு வரவேற்றார்கள். சிறிது நேரம் முசாபரி பங்களாவில் ஓய்வெடுத்துக்கொண்டு டாக்டர் நாயுடு ஜி.ராமச்சந்திரன் ஆகியோருடன் நாகராஜா கோயிலுக்கு சென்றார். சுசிந்திரம் உதவி தேவஸ்தான ஆணையரான மகாதேவ ஐயரும், அதிகாரிகளும் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒரு வெள்ளித்தட்டில் பழங்களை அளித்தபோது அதைத்தாம் அரிஜனங்களோடு பகிர்ந்து உண்ண விரும்புவதாக காந்தியடிகள் கூறினார். திருவிதாங்கூர் மன்னர், அரிஜன ஆலய பிரவேசத்தை அனுமதித்து ஆணை இட்டிருந்தததைப் போற்றிப் புகழ்ந்தார். ” நான் மகாத்மா அல்ல திருவிதாங்கூர் மன்னர்தான் மகாத்மா” என்று மகாத்மா கூறினார்.

காந்தியடிகளுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையிலான உறவு இப்படி சுவாரசியமும் நெருக்கமும் கலந்தது.

(கட்டுரையாளர் முனைவர் எஸ்.பத்மநாபன், கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர்)

Photo credit: Rajesh, kanyakumari

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Mahatma gandhi and kanyakumari bagavathi amman temple entry gandhi jayanti essay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X