gandhi jayanti, gandhi ji, october 2, mahatma gandhi quotes, gandhi quotes, காந்தி ஜெயந்தி
Gandhi Jayanti Essay: எனக்கு எழுதப்படிக்கத் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை தினமும் பத்திரிகைப் படித்து வருகிறேன். அப்படி நான் படிக்கும் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் குற்றவாளிகளுக்குப் பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதைப் படித்துக்கொண்டேயிருக்கிறேன். அவற்றில் எத்தனைத் தீர்ப்புகள் இன்று வரை என் இதயத்தில் பதிந்திருக்கிறது என்றால் அது கேள்விக்குறியே.
Advertisment
ஆனால் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், ஓர் எம்.எல்.ஏ.வுக்கு விதித்த நூதனமானத் தண்டனை ஒன்று, இன்றும் என் இதயத்தில் பசுமரத்தாணிபோல் இதமாய் இடம் பிடித்திருக்கிறது. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகேயுள்ள மதுரவாயல் என்ற இடத்தில் ஒரு விவசாயியை கொலை செய்ய முயன்றதாக புரசைவாக்கம், ரங்கநாதன் எம். எல். எ மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ரங்கநாதன். அந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
அதற்கு அந்த நீதிபதி, ரங்கநாதன் மக்கள் பிரதிநிதியானதினால் இந்த வழக்கிலிருந்து அவர் தெளிவு பெற்றாக வேண்டும். அதற்காக அவர் தொடர்ந்து ஐந்து நாள்கள் மதுரையிலுள்ள காந்தி மியூசியத்தில் அமர்ந்து, காந்தியடிகளின் சத்திய சோதனை நூலைப் படிக்க வேண்டும். அதன் பின்னர் சென்னை தி.நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி போதனா மையத்தில் பத்து நாள்கள் அமர்ந்திருந்து சத்திய சோதனை உள்ளிட்டக் காந்தியடிகளின் புத்தகங்களைப் படித்து, தனது மனதையும், அறிவையும் சரி செய்து கொண்டால்தான், தனது தொகுதி மக்களுக்கு அவரால் சேவை செய்ய முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்தத் தீர்ப்பிலிருந்து நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஓர் அற்புதமான உண்மையுள்ளது. இவ்வுலகில் பகவத்கீதையிலிருந்து தொடங்கி… பைபிளில் தொடர்ந்து… குரான் வரை எத்தனை எத்தனையோ புனித நூல்கள் உள்ளன. ஆனால், ஒரு குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒவரிடம், அந்தப் புனித நூல்களெயல்லாம் படிக்கச் சொல்லாமல், ஒரு மனிதனால் எழுதப்பட்ட சுயசரிதை நூலைப் படித்துப் புத்தி தெளிவுற, ஒரு நீதிபதி உத்தரவிடுகிறார் என்றால், அந்த மனிதன் எவ்வளவு பெரிய மாமனிதனாக… அவரது ஆத்மா எவ்வளவு தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
அப்படிப்பட்ட மாமனிதனாகிய மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளைதான் நம் தேசம் உச்சத்தில் வைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கிறது, அவரின் வாழ்க்கை மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஒரு திறந்த புத்தகம். இல்லையில்லை புனிதப் புத்தகம். அப்புத்தகம் படித்து மகிழ்வதற்குரியதல்ல. படித்துத் தெளிவதற்குரியது. படித்து மறப்பதற்குரியதல்ல, மாறுவதற்குரியது.
ஏன் நான் இதை உங்களோடு உரக்க உரைக்கின்றேன் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை பத்திரிகையாளர்கள் மகாத்மாவை பேட்டி கண்டுள்ளனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக அவர் பதிலளித்துள்ளார் மகாத்மா. பேட்டியின் இறுதியில் ஒரு பத்திரிகையாளர் மகாத்மாவைப் பார்த்து இப்படியொரு கேள்வியை முன்வைத்துள்ளார். அண்ணல் அவர்களே! இந்த தேசத்து இளைஞர்களுக்கு உங்களின் செய்தி என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்கு சற்றும் சிந்திக்காமல், ஒரு நொடிப்பொழுதுகூட தாமதிக்காமல் அந்த அண்ணல் அளித்த பதில் என்ன தெரியுமா? என் வாழ்க்கையே என் செய்தி (MY LIFE IS MY MESSAGE) என்பதுதான். நான் ஒரு தீவிரமான வாசிப்பை நேசிப்பவன் என்பதின் அடிப்படையில் உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன், இதுவரையிலும் இப்படியொரு பதிலுரைத்த எந்தவொரு தலைவரையும் நான் கேட்டதும் இல்லை, கண்டதுமில்லை. இனியும் என்னால் உறுதியாகக் கூற முடியும், இப்படி உரைப்பதற்கு தகுதியான ஒரு தலைவன் இந்த மண்ணில் இனி பிறப்பதற்கும் வாய்ப்பில்லை.
“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதுவே தர்மம்” என தர்மத்திற்கு ஆழமான ஓர் அர்த்தத்தை உணர்துகிறது அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஐயா வைகுண்டரின் வாழ்வியல் நூல். அந்த அடிப்படையில் தன்குலத்தோருக்கு எதிரே வரும் இன்னொரு குலத்தோரை எட்டிப்போ… எட்டிப்போ… எனச்சொல்லி, ஒதுங்கிப்போன தாழ்குலத்தோரை கட்டித்தழுவி, பூநூல் அணிவித்து புனிதராக்கிய உத்தமரல்லவா அண்ணல் காந்தி. அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் யார் இந்த மண்ணில் இருப்பார்.
எங்கு தொடங்கினேனோ அங்கேயே முடிப்பதற்கு விளைகின்றேன். நீதிபதி கற்பகவிநாயகத்தால் 15 நாள்கள் காந்தியடிகளின் சத்திய சோதனை உள்ளிட்ட நூல்களைப் படிப்பதற்குத் தண்டனைப் பெற்றாரே ரங்கநாதன் எம். எல். ஏ, அந்த 15 நாள்களும் முடிந்த பிறகு என்ன சொன்னார் தெரியுமா? இனி நான் என் வாழ்நாளில் இதுபோன்ற எந்த ஒரு தவறையும் செய்யமாட்டேன். மகாத்மாவின் சத்திய சோதனை என்னை ஆட்கொண்டது. அதன் மூலம் அறிவுற்றேன்… தெளிவுற்றேன்… நான் யார் என்பதை உணர்வுற்றேன்.. இனிதான் என் வாழ்க்கையைத் தொடங்கப்போகிறேன் என்று.
அண்ணலின் இந்த 150 வது பிறந்த நாளில் எப்படி நம் இல்லங்களில் நமக்குப் பிடித்தமான புனித நூல்களை வைத்திருக்கின்றோமோ அதுபோல் அவரின் சத்திய சோதனை நூலையும் வைத்திருப்போம். வரும் தலைமுறைக்கு அவரின் வாழ்க்கையையே பாடமாக்குவோம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)