மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.
மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில் சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்று வயது முதலான குழந்தைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இதில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கோட்டூர்,மலையாண்டி பட்டினம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி.குழந்தைகள் உட்பட மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம், ஆறு வெள்ளி, ஆறு வெண்கலம் என பதினேழு பதக்கங்கள் பெற்று அதிக புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியின் தாளாளர் கௌதமன், முதல்வர் கனகதாரா, பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் விரைவில் ஸ்ரீலங்கா, அந்தமான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளதாக தலைமை பயிற்சியாளர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“