/indian-express-tamil/media/media_files/2025/08/24/puducherry-temple-2025-08-24-15-13-15.jpg)
Puducherry
புதுச்சேரி என்றாலே அதன் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சாரமும், அமைதியான கடற்கரைகளும், ஆன்மிக மையங்களும் தான் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில், புதுச்சேரியின் ஆன்மிக அடையாளமாகத் திகழும் மணக்குள விநாயகர் கோயில் ஒரு தனி இடம் பிடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டுகிறது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டினரின் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத விடுமுறைகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஒரே நேரத்தில் வருவதால், பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தங்க விமானக் கோபுரத்தின் தனித்துவம்
இந்தியாவிலேயே மணக்குள விநாயகருக்கு மட்டும்தான் மூலஸ்தானத்தின் மேல் தங்கத்தால் ஆன விமானக் கோபுரம் உள்ளது. இது இக்கோயிலின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றாகும். பொதுவாக, பிரம்மச்சாரியாகக் கருதப்படும் விநாயகருக்கு, இங்கு மட்டும் சித்தி, புத்தி என்ற மனைவிகளுடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்தக் கோயில், புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐந்து வெளிநாட்டு ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பைக் கண்ட இக்கோயில், நான்கு போர்களின் முற்றுகைக்குப் பிறகும் எந்தவித சேதமும் அடையாமல் தப்பிப் பிழைத்தது. இதனால், இவருக்கு "வெள்ளைக்கார பிள்ளையார்" என்ற பெயரும் உண்டு.
பாரதியாரின் ஆன்மிகப் பிணைப்பு
1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் வாழ்ந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார், மணக்குள விநாயகரின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அவர் இந்த விநாயகரைப் போற்றி 'நான்மணிமாலை' என்ற தலைப்பில் 40 பாடல்களைப் பாடியுள்ளார். யாழ்ப்பாணம் கந்தையாபிள்ளை உட்பட ஏராளமான தமிழ் அறிஞர்கள், இக்கோயில் மீது பாடல்களையும் பதிகங்களையும் இயற்றியுள்ளனர். சிவமதி சேகர் எழுதிய 'புதுவையும் மணக்குள விநாயகரும்' என்ற நூலில், நெசவாளர்கள் எவ்வாறு இந்த கோயிலைப் போற்றிப் பாதுகாத்தனர் என்பது பற்றிய அரிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோயிலின் பிரம்மோற்சவம் மற்றும் பிற திருவிழாக்கள்
மணக்குள விநாயகர், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் இடம்புரி விநாயகர் ஆவார். இக்கோயில் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் பிரம்மோற்சவம், ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சமூகத்தினர் இணைந்து இந்த விழாவை நடத்துவது மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இங்குள்ள மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு என்றும், அதன் அருகே உள்ள சிறிய குழியின் ஆழத்தை இன்றுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்தக் குழியில் வற்றாத நீர் எப்போதும் இருப்பது ஒரு அதிசயமாகும். உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்கக் கவசம், 5 கிலோ தங்கத்தில் 91.66 தரத்தில், ஹால்மார்க் சான்றிதழுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மதத்தினரின் நம்பிக்கை மையம்
மணக்குள விநாயகர் இந்து மதக் கடவுளாக இருந்தாலும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகள் கூட இங்கு அதிக அளவில் வருவது வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி, விநாயகரின் ஆசியுடன் புத்தாண்டைத் தொடங்குகின்றனர். மணக்குள விநாயகர், கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கு வைக்கப்படும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, திருமண வரம், குழந்தை வரம், புதிய தொழில் தொடங்கும் முன் வாகன வழிபாடு போன்றவற்றுக்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.
விழா ஏற்பாடுகள் மற்றும் தரிசன நேரம்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, வரும் புதன்கிழமை, ஆகஸ்ட் 27 அன்று விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடங்க உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
தரிசன நேரம்:
காலை: 5:45 முதல் 12:30 மணி வரை
மாலை: 4:00 முதல் 09:30 மணி வரை
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.