/indian-express-tamil/media/media_files/2025/05/12/5ClTuFebItnL4Q9tE23m.jpg)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களின் போது தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் விழா இன்று காலை 6.39 மணிக்கு நடைபெற்றது.
இதற்காக நேற்று இரவு வீர அழகர் கோயில் அருகே எதிர்சேவை மண்டகப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிகள் அங்கிருந்து அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு இன்று அதிகாலை வீர அழகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சுவாமி வீதி உலா வந்து பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே காலை 6.39 மணிக்கு வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வெள்ளை குதிரை வாகனத்தில் வீரழகர் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்.
அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகள் வீர அழகர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார். அங்கிருந்து ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் சுவாமிகள் அப்பன் பெருமாள் கோவில் மண்டகப்படிக்கு சென்றடைந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.