scorecardresearch

மன்மதன் வந்தானடி

மன்மதனாக ஒருவர் இருப்பதற்கும் அவருடைய உடல், முக அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை. கிரக நிலைகள்தான் ஒருவரை மன்மதனாக மாற்றும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

மன்மதன் வந்தானடி

சரவணக்குமார்

இன்றைய நாளிதழை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை புரட்டிப்பாருங்கள். இதில் பெண் பாலியல் தொல்லை, பலாத்காரம் என்பது போன்ற செய்திகள் குறைந்தது பத்தாவது இருக்கும். இத்துடன், தங்கள் ஆசைகளை எளிதில் தீர்த்துக்கொள்ள ஆசிரமங்கள் அமைத்திருக்கும் போலிச்சாமிகளின் செய்திகளும் கிளுகிளுப்பூட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கும். இதை ஜொள் ஒழுக படித்துவிட்டு, ‘பல் உள்ளவன் பட்டாணி தின்கிறான்’ என்று சொல்லும் ஆசாமிகளும் உண்டு. வாய்ப்புகள் வந்து சேராதவரை பூனைக்குட்டியாய் இருக்கும் மனசு, தேவையான களம் கிடைத்ததும் புலிக்குட்டியாய் மாறிவிடும்.

ஆனால் மன்மதன் டைப் ஆசாமிகள் இந்த வாய்ப்புகளுக்காக காத்திருக்க மாட்டார்கள். தாங்களே வாய்ப்புகளை உருவாக்குவார்கள். கண்ணுக்கு தெரியாத காமபாணம் எப்பொழுதும் அவர்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும்.

எப்பொழுது? எப்படி? யார் மீது? வீச வேண்டும் என்கிற வித்தை இவர்களுக்கு அத்துபடி.
குறி தவறாமல் காதல் அம்பு வீசி, கன்னிகளை கவந்திழுக்கும் இந்த மன்மதன்கள் ஹீரோ அம்சத்துடனும் இருக்கலாம், அல்லது காமெடியனின் முகவெட்டோடும் காட்சியளிக்கலாம். இதற்கு உடல் ஒரு பொருட்டே அல்ல. கிரகங்களே காரணம்.

ஒருவருடைய ஜென்ம லக்கினத்தையும், அதில் இருக்கும், பார்க்கும் கிரகங்களைக்கொண்டும் அவர் எந்த மாதிரியான குணங்களைக் கொண்டவர் என்பதை எளிதில் கணித்துவிடலாம். அவருடைய ராசியை அடிப்படையாக வைத்து உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் அத்தனை விஷயங்களையும் தோண்டி எடுத்துவிடலாம்.

ஒரு பொருளை பார்த்தவுடன் மனது பல்வேறு கற்பனைகளுக்கு உட்படுகிறது. இந்த மனதிற்கும் கற்பனைக்கும் அதிபதி திருமதி சந்திரன் (இவர் பெண் கிரகம் என்பதாலே இந்த ‘திருமதி’)
மூளையை குறிக்கும் ராசி மேஷம், பிறப்பு உறுப்பை குறிப்பது விருச்சிகம். இவ்விரு ராசிகளுக்கும் அதிபதியாக இருந்து ரத்த ஓட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மிஸ்டர். செவ்வாய்.

மன்மதனின் நேரடி பிரதிநிதியாக இருப்பவர் மிஸஸ். சுக்கிரன் (இவரும் பெண் கிரகம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்). கலைகளுக்கு மட்டுமல்லாமல் காதலுக்கும் அதிபதி. காம லீலைக்களுக்கு சொந்தக்காரர். சிற்றின்ப சுகத்தை வாரி வழங்கும் வள்ளல்.

ராசி, லக்கினம், 3, 7, 8 , 12 ஆகிய பாவங்களைக் கொண்டே ஒருவர் ‘அந்த’ விஷயங்களில் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் இதற்கு மேற்குறிய கிரகங்களையும் ஆராய வேண்டும்.

பொதுவாக, செவ்வாய் சுக்கிரன் சம்மந்தம் காமத்தில் கரை கண்டவராக ஒருவரை இருக்க வைக்கும். இவர்கள் சனி பகவானின் பார்வையிலோ சேர்க்கையிலோ இருந்துவிட்டால் வேலி தாண்டிய வெள்ளாடு கதை தான்.
சுக்கிரன், சனி, ராகு, கேதுக்கள் சம்மந்தம் கீழ் குலத்தவரோடு தொடர்புகளை ஏற்படுத்தும்.

உடல் மற்றும் மனதிற்கு அதிபதியாகிய சந்திரனோடு சுக்கிரன் செவ்வாய் சம்மந்தப்படும் பொழுது கண்டவரை எல்லாம் கட்டிலில் தள்ளும் எண்ணமே தலை தூக்கும். மரத்திற்கு புடவை கட்டினாலும் உற்றுப்பார்ப்பார்கள்.
மேற்சொன்னது போன்ற கிரக நிலைகள் அமைந்தவர்கள் சாதாரண கேட்டகிரியை சேர்ந்தவர்கள்.
இதில் ஸ்பெஷல் கேட்டகிரியை சேர்ந்தவர்தான் இந்த கட்டுரையின் கதாநாயகன். இவர்களது ஜாதகத்தில் ‘மதனகோபால யோகம்’ அமைந்திருக்கும்.

அதென்ன மதனகோபால யோகம்?

லக்கினாதிபதி, புதன், சுக்கிரன் இணைந்து 1, 7, 8 ல் இருப்பது இந்த யோகத்தை அளிக்கும்.
இவர்கள் பெண்கள் விஷயத்தில் படு கில்லாடியாக இருப்பார்கள். ‘வச்ச குறி தப்பாது’ என்பது போல் செயல்படுவார்கள். ‘அப்படி என்னதான் இந்த மனுஷன்கிட்ட இருக்கோ தெரியலையே?’ என மற்றவர்களை புலம்ப வைக்கும் அளவிற்கு பெண்களை கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

அட… கொஞ்சம் இருங்க. கட்டுரை முடியறதுக்குள்ளே உங்க ஜாதக நோட்டை புரட்ட ஆரம்பிச்சுட்டிங்களே.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Manmathan will come