இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கிய 4 படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் தான் பிறந்து வளர்ந்த பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் பகுதி மக்களின் வாழ்க்கையையும் காட்சிப்படுத்தி இருப்பார். மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என எல்லா திரைப்படங்களிலும் விலங்குகளையும் ஒரு கதாபாத்திரமாக கொண்டு வந்திருப்பார்.
அந்த வகையில், இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கருப்பி என்று பெயர் கொண்ட ஒரு நாய் கதாபாத்திரமாக இருக்கும். இந்த கருப்பி நாய், படத்தில் ரயில்பாதையில் கட்டி வைக்கப்பட்டு கொல்லப்படும். நாயகன் பரியேறும் பெருமாள் தன்னை கருப்பியுடன் அடையாளம் காண்பான். கருப்பி அந்த படத்தில் ஒரு மெட்டாஃபராக மாறும். உண்மையில், கருப்பியின் இறப்பு பார்வையாளர்களின் மனதைப் பிசைவதாக இருக்கும்.
மாரி செல்வராஜ் பரியேறும் படத்தை தான் பிறந்து வளர்ந்த புளியங்குளம் பகுதி மற்றும் திருநெல்வேலியில் படமாக்கியிருப்பார். அதனால், பரியேறும் படத்தில் நடித்த கருப்பி என்ற நாய் அந்த படத்தில் நடித்த விஜயமுத்து என்பவரின் வளர்ப்பு நாய்.
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய்க்கு தீபாவளி அன்று நிஜ வாழ்க்கையிலும் ஒரு விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பலரின் மனதைப் பிசைவதாக உள்ளது.
தீபாவளி அன்று ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாடியதால், பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டுபோன கருப்பி சாலையில் ஓடியுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி கருப்பி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த விஜயமுத்து நண்பர்களுடன் சேர்ந்து கருப்பி உடலை அடக்கம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“