பிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி, மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தம் ஏற்றும் முறை குறித்து தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
‘மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதால், நினைத்த பலன்கள் உடனே கிடைக்கும். மார்கழி மாதம் கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த மாதம். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், இன்னொரு ஆறு மாத காலம் அவர்களுக்கு இரவு பொழுதாகவும் இருக்கும்.
மார்கழி மாதம் முன் வரை தேவர்கள் உறங்கக் கூடியது. இந்த மார்கழி மாதம் முழுவதும் அவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம். இதுதான் கடவுள்கள் எழும் நேரம். அதனால் தான் மார்கழி மாதங்களில் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும்.
இவ்வளவு சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் கடவுள் எழுந்ததும் நம்முடைய குரலை கேட்க வேண்டும், நம்முடைய வழிபாட்டை அவர் காண வேண்டும். இதனால் அவர் மனமகிழ்ந்து உடனே நமது வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பார்.
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து, குளித்த பிறகுதான் இந்த பிரம்ம முகூர்த்த விளக்கை ஏற்ற வேண்டும். மொத்தம் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும். நெய் விளக்கு ஏற்றினால் ரொம்ப சிறப்பு. இல்லையெனில் நல்லெண்ணெய்யில் ஒரு சொட்டு நெய் சேர்த்து விளக்கு ஏற்றலாம். பஞ்ச முகூர்த்த எண்ணெய் என்று சொல்லப்படும் ஐந்து விதமான எண்ணெய் கொண்டும் நீங்கள் விளக்கு ஏற்றலாம்.
விளக்கு ஏற்றும் போது, உங்கள் வேண்டுதலை நினைத்து கடவுளிடம் உருக வேண்டுங்கள். இப்படி செய்வதால், கைமேல் பலன் கிடைப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். வேலை தேடுபவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப்பேறு இல்லாமல் இருப்பவர்கள் கூட கூட கண்களை மூடி, தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து இந்த மார்கழி முழுவதும் விளக்கு ஏற்றலாம்.
ஏன் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும்?
நமக்குள் பஞ்ச பூதங்கள் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது. அந்த இயற்கையின் ஆளுமைக்கு உட்பட்டுத்தான் நாம் வாழ்கிறோம். இயற்கையில் தான் இறைவன் கலந்திருக்கிறார். அதை உணர்த்தும் விதமாகவே ஐந்து விளக்கு ஏற்றப்படுகிறது. ஐந்து விளக்கு கிழக்கு முகம் நோக்கி வைக்க வேண்டும். அதுவும் மார்கழி மாதம் பூஜையறையில் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது.
ஆண்கள், பெண்கள் அனைவருமே இந்த விளக்கை ஏற்றலாம்.
ஒருவேளை பெண்களுக்கு மாதவிடாய் இருந்தால், உங்கள் கணவர், குழந்தைகள் அல்லது வீட்டில் யாரிடமாவது சொல்லி விளக்கு ஏற்றலாம். அப்படி முடியவில்லை என்றால் பூஜையறையில் நீங்கள் ஏற்றும் விளக்கை வெளியே எடுத்து வைத்து கிழக்கு முகம் நோக்கி ஏற்றலாம்.
பிரம்ம முகூர்த்த நேரம்
அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். 3 மணிக்கு எழ முடியாதவர்கள், 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 4 முதல் 6 மணிக்குள் விளக்கு ஏற்றலாம் என அனிதா குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.