நம்முடைய பாவங்களை போக்கிக் கொண்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்காகவே கோவில்களில் குளங்கள், தீர்த்தங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அந்தவகையில் மாசிமகம் அன்று புனித நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன்களையும், பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்கான பலன்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.
அதேபோல நாம் விடும் பாவங்களால் நிரம்பியிருக்கும் நதிகள் தங்களை சுத்தம் செய்யும் ஒரு நாளாகவும் இந்த நாள் உள்ளது. அத்தகைய சிறப்புமிக்க நாளில் எந்த நேரத்தில், எந்த முறையில் விரதம் இருந்து, வழிபாடு நடத்துவது சிறப்பு என்று தேச மங்கையர்கரசி ஆத்ம ஞான மையம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வழிபடும் நேரம்:
2025ஆம் ஆண்டு மாசி மகம் மார்ச் 12ஆம் தேதி வருகிறது. அந்த நாளில் அதிகாலை 3.53 மணி துவங்கி, மார்ச் 13ஆம் தேதி காலை 5.09 மணி வரைக்கும் மகம் நட்சத்திரம் இருக்கிறது.
மாசிமகம் அன்று கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு சென்று நீராடுவதால் வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி செல்வம் பெருகும், கடன் தொல்லை ஒழியும், குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும்.
கும்பகோணம் சென்று நீராட முடியாதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று நீராடலாம். இது எதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும்.வீட்டில் கங்கை நீர் அல்லது ஏதாவது தீர்த்தம் இருந்தாலும் கலந்து வைக்கலாம்.
மாசி மகம் 2025 - புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும் வழிபாடு, விரத முறை & நேரம் | Masi Magam 2025
அதோடு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, வீட்டின் பூஜை அறையில் வைத்து, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளின் பெயர்களை சொல்லி, பாவங்களை போக்கி அருள வேண்டும் என வேண்டிக் கொண்டு, குளிக்கும் தண்ணீரில் அந்த தீர்த்தத்தை சிறிது கலந்து குளிக்கலாம். அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விடலாம்.
விரதம் முறை:
மாசிமகம் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நாள் முழுவதம் விரதமாக இருக்கலாம். திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள் அம்பிகையை வேண்டி, காலையில் அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வர வேண்டும்.
பெருமாளுக்கு அன்றைய தினம் மாலையில் சத்யநாராயண பூஜை செய்து வழிபடலாம். சிவ பெருமானை மனதார நினைத்து வழிபடலாம். மேலும் இந்த நாளில் குலதெய்வத்திற்கும் பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.