தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாட்டு பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், விவசாயத்திற்கு உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளை எவ்வாறு வழிபட வேண்டும்? மாட்டுப் பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்ன? இதை கொண்டாடுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பன போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.
தமிழகர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படும் பொங்கல் நாளில் புத்தாடை உடுத்தி, புதுப் பானையில் பொங்கல், கரும்பு வைத்து, விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தி, வழிபடும் நாளாக பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.
அடுத்த படியாக உழவு தொழிலுக்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக, பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் தை 2ம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். முதல் நாள் பொங்கல் வீட்டில் வைக்கப்படும் நிலையில், மாட்டுப் பொங்கல் மாட்டுத் தொழுவத்தில் வைக்கப்படுகிறது. சில கிராமங்களில் ஊரே ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்து பொங்கல் வைத்து மிகப்பெரிய விழாவாக கொண்டாடுவார்கள்.
மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே மாடுகளை சுத்தமாக குளிக்க வைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, அதன் கொம்புகளுக்கும் வண்ணங்கள் தீட்டி அலங்கரிப்பார். மாட்டின் கொம்பில் பரிவட்டம் போல் வேட்டி, துண்டுகளை கட்டி கெளரவிக்கும் வழக்கமும் சில பகுதிகளில் உண்டு. பொங்கல் அன்று வாசலில் மாவிலை தோரணங்கள், கரும்பு வைத்து கொண்டாடுவதைப் போல், மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுத் தொழுவத்தை கோலமிட்டு அலங்கரித்து, சாம்பிராணி காட்டி, மாடுகள் வசிக்கும் இடத்தில் பொங்கல் வைத்து, வாழை இலை பரப்பி மாடுகளுக்குச் சர்க்கரைப் பொங்கலைப் படைப்பார்கள். சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து படைத்து, மாடுகளுக்கு கற்பூரம் காட்டி வழிபடுவதுண்டு.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பகல் 1 மணி வரை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரமாக கூறப்படுகிறது. மாடுகளுக்கு பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மற்றும் 11 மணி முதல் 12 மணி வரை ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“