/indian-express-tamil/media/media_files/nlo60hH9afwvbBsJnmZR.jpeg)
Mayiladuthurai
சீர்காழி அருகே 76 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், பள்ளியின் முன்னாள் ஆசிரியை தமது சொந்த செலவில் பள்ளியை சீரமைத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பண்ணக்காரகோட்டகம் கிராமத்தில் வசந்தலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. 1948 -ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளி தற்போதும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பழமையான இப்பள்ளியின் கட்டடம் மிகவும் சிதிலமடைந்திருந்ததால் மாணவ, மாணவியர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்தும், அருகிலிருந்த அங்கன்வாடியிலும் கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியை கலைச்செல்வி தனசேகரன், பள்ளியின் நிலை குறித்து அறிந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் பள்ளி கட்டடத்தினை சீரமைக்க விரும்பினார்.
அதன்படி தனது மகள் செளமியா, மருமகன் விமல் ஆகியோர் ஒத்துழைப்புடன் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடத்தை சீரமைத்து, அதனை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
பள்ளி கட்டடத்தை பயன்பாட்டிற்கு வழங்கி நிகழ்ச்சியில் பேசிய கலைசெல்வி தனசேகரன், ‘தமிழ் வழியில் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை அடைய முடியும். தமிழ் வழி கல்வி கற்பவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள், திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ் வழி கல்வி கற்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்’ என கூறினார்.
இதனைத்தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் சௌமியா விமல் பேசுகையில்; மாணவர்கள் நன்னெறி கல்வி, வாழ்க்கை கல்வி ஆகிய இரண்டையும் கற்பதினால் வாழ்க்கையில் சிறப்படையலாம். நேரம் தவறாமை, நேர்மை இந்த இரண்டையும் மாணவர்கள் கடைபிடித்தால் வாழ்வில் உயரலாம் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரிதா, நல்லமணி செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மாலை தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வஜ்ரம் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, விமல்ராஜ், ஆசிரியர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, ஆசிரியர் ரவி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.