குங்குமப்பூவின் பல்வேறு மருத்துவ நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மிகவும் விலை உயர்ந்த நறுமண பொருளாக குங்குமப்பூ கருதப்படுகிறது. சுத்தமான ஒரிஜினல் குங்குமப்பூ ஒரு கிராம் ரூ. 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க சில வழிமுறைகள் உள்ளது. நீரில் ஊறவைத்த குங்குமப்பூவை கைகளில் தேய்த்துப் பார்த்தால், அந்த இடம் தங்க நிறமாக மாறும். ஆனால், குங்குமப்பூவின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இதன் மூலம் அதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறியலாம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு மருந்தாக குங்குமப்பூ அமைகிறது. செரோடோனின் குறைவாக சுரப்பதால் மனச்சோர்வு ஏற்படுகிறது. அதற்கு மருந்தாக குங்குமப்பூ அமைகிறது. இருதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் பிரச்சனைகளை தடுக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிஎம்எஸ்-ஐ குங்குமப்பூ தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குங்குமப்பூ மருந்தாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் இது பயன்படுகிறது. சில ஆண்களுக்கு வரக்கூடிய விந்தணு பிரச்சனைகளுக்கும் இது மருந்தாக செயல்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு இதனை கொடுப்பதால் இரத்த அழுத்தம் குறையும் எனவும், ஜீரணம் சீராக இருக்கும் எனவும், வாந்தி மற்றும் வயிற்று வலி போன்றவை குறையும் எனவும், இரும்பு சத்துகளை அதிகரிக்கும் எனவும் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். எனினும், குழந்தை தங்க நிறத்தில் பிறப்பதற்கும், குங்குமப்பூவிற்கும் சம்பந்தம் இல்லை என அவர் கூறியுள்ளார். நிறம் என்பது தாய் மற்றும் தந்தையரின் மரபு வழியை சார்ந்தது எனவும் மருத்துவர் கார்த்திகேயன் விவரித்துள்ளார். குங்குமப்பூவை 30 மில்லி கிராம் அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும் எனவும், அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“