நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தார்கள். உணவு உங்கள் மருந்தாகவும், மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும் என அறிஞர்கள் கூறியுள்ளனர். மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு காரணமும், மருந்தும் உணவாக அமைகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனப்படுவது போல், நல்ல உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் பாதிப்பு தான்.
தினசரி ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது நாம் பார்க்கலாம். பூண்டுகளை பச்சையாக சாப்பிடுவதும் நல்லது தான். தினமும் காலை ஒரு பல் பூண்டுவை நசுக்கி காற்றோட்டமாக சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பின்னர், சாப்பிட்டால் பூண்டின் முழு மருத்துவ நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
பூண்டில் அலிசின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது நம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைட் உற்பத்தியை அதிகப்படுத்தும். இந்த நைட்ரிக் ஆக்ஸைட் உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால், இரத்த கொதிப்பு கட்டுக்குள் இருக்கும். இதன் மூலமாக மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.
நம் குடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. உணவு செரிமானம் ஆவதில் நல்ல பாக்டீரியாக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ப்ரீ பையோடிக் தேவைப்படும். பூண்டில் ப்ரீ பையோடிக் இருப்பதால் இவை குடலுக்கு நல்லதாக விளங்குகிறது. தினசரி பூண்டு சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்யும்.
பூண்டில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அன்டி இன்ஃப்ளமேட்ரி இருக்கிறது. இவை உடலில் ஃப்ரீ ரேடிகல்ஸ் உருவாவதை குறைக்கும். இவை நம் உடலின் செல்களை பாதுகாக்க உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு பல மருத்துவ நன்மைகளை பூண்டு கொண்டிருக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.