கடலில் ஆபத்தான உயிரினங்கள் என்று நினைக்கும்போது, சுறாக்கள் அல்லது ஜெல்லிமீன்கள்தான் பொதுவாக நினைவுக்கு வரும். ஆனால், ஸ்டிங்ரே (stingray) எனப்படும் திருக்கை மீனும் அவற்றில் ஒன்று என்று மிகச் சிலரே கருதுவார்கள். 2006-ல், பிரபல வனவிலங்கு நிபுணரான ஸ்டீவ் இர்வின் (Crocodile Hunter) இதே உயிரினத்தால் கொல்லப்பட்ட சம்பவம் 21-ஆம் நூற்றாண்டின் மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்று. ஸ்டிங்ரேயின் முள்ளால் அவர் மார்பில் குத்தப்பட்டதால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது, ஆனால் இது அரிதான மற்றும் துரதிர்ஷ்டவசமான விபத்து, இது திருக்கை மீனின் உண்மையான குணத்தைக் காட்டுவது அல்ல.
ஸ்டிங்ரே என்றால் என்ன?
ஸ்டிங்ரே என்பது ஒருவகை குருத்தெலும்பு மீன். இதன் எலும்புகள், சுறா மீன்களைப் போல எலும்புகளுக்குப் பதிலாக குருத்தெலும்பினால் ஆனவை. இவை தட்டையான, வட்டமான உடலையும், நீளமான வாலையும் கொண்டிருக்கும். சில இனங்களுக்கு, வாலின் அடிப்பகுதியில் விஷமுள்ள முள் இருக்கும். இவை 'நீந்தும் தோசைகள்' போல தட்டையாகவும், அகலமான உடல்களுடனும், நீண்ட வால்களுடனும் காணப்படும். வாலில் மறைந்திருக்கும் முள், அதன் தற்காப்புக்கான ஆயுதம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மான்டா ரே (Manta ray) மற்றும் டெவில் ரே (devil ray) போன்ற சில திருக்கை இனங்களுக்கு முள் கிடையாது. இவை மனிதர்களுக்கு முற்றிலும் பாதிப்பில்லாதவை. ஸ்டிங்ரேக்கள் கடலின் அடியில் வாழும் உயிரினங்களை உணவாகக் கொள்கின்றன. நண்டுகள், இறால்கள் போன்ற ஓடுடைய உயிரினங்கள் மற்றும் சிப்பிகள், கிளாமு்கள் போன்ற மொல்லுஸ்காக்கள் இதன் உணவில் அடங்கும். கடினமான ஓடுகளை நொறுக்குவதற்கு ஏற்ற வலிமையான தாடைகளையும், மணலுக்குள் மறைந்திருக்கும் இரையை உறிஞ்சுவதற்கு ஏற்ற உறிஞ்சும் திறனையும் இவை பெற்றுள்ளன.
பெரும்பாலான ஸ்டிங்ரேக்கள் சிறிய அளவில் இருந்தாலும், சில மிகப்பெரியவையாக வளர்கின்றன. கடலில் காணப்படும் 'ஸ்மாலெய் ஸ்டிங்ரே' (smalleye stingray) மூன்று மீட்டர் நீளம் வரை வளரும். 2022-ல், மெகாங் நதியில் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன், நன்னீர் ஸ்டிங்ரே தான். அதன் வால் உட்பட சுமார் 4 மீட்டர் நீளமும், 300 கிலோகிராம் எடையும் இருந்தது. இது வயது வந்த ஆண் புலியின் எடைக்குச் சமம்.
இவை எங்கே வாழ்கின்றன?
ஸ்டிங்ரேக்கள் உலகெங்கிலும் உள்ள வெப்பமான, வெப்பமண்டல நீர்நிலைகளில் காணப்படுகின்றன. இவை ஆழமற்ற கடலோரப் பகுதிகளை விரும்புகின்றன. அங்கு மணலுக்கு அடியில் மறைந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். சில இனங்கள் இனப்பெருக்கத்திற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். அமேசான் மற்றும் மெகாங் போன்ற நதிகளில் நன்னீர் ஸ்டிங்ரேக்களும் வாழ்கின்றன.
இவை எவ்வளவு ஆபத்தானவை?
ஸ்டீவ் இர்வினின் மரணத்திற்குப் பிறகு இவற்றின் அபாயகரமான குணங்கள் அதிகம் பேசப்பட்டாலும், ஸ்டிங்ரே குத்துவது மிகவும் அரிது, மேலும் அது கிட்டத்தட்ட ஒருபோதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலான காயங்கள், மக்கள் ஆழமற்ற நீரில் நடக்கும்போது தெரியாமல் அதன் மீது கால் வைப்பதால் ஏற்படுகின்றன. குத்துவதால் கடுமையான வலி, வீக்கம், தசைப்பிடிப்பு அல்லது தலைச்சுற்றல் ஏற்படலாம், ஆனால் மரணம் மிகவும் அரிதானது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஸ்டிங்ரேக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, "ஸ்டிங்ரே ஷஃபிள்" (stingray shuffle) எனப்படும் முறையை டைவர்கள் பயன்படுத்துகின்றனர். நீரில் நடக்கும்போது காலைத் தூக்கி வைப்பதற்குப் பதிலாக, மெதுவாக மணலில் தேய்த்தவாறு நடப்பதாகும். இதனால், மணலில் மறைந்திருக்கும் திருக்கை மீன்கள் எச்சரிக்கையடைந்து, விலகிச் செல்ல அவகாசம் கிடைக்கும்.
அச்சுறுத்தல்
பல கடல்வாழ் உயிரினங்களைப் போலவே, ஸ்டிங்ரேக்களும் மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. அதிகப்படியான மீன்பிடித்தல், மாசுபாடு மற்றும் வாழ்விட அழிவு ஆகியவை சில ஸ்டிங்ரே இனங்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணங்களாகும். மெகாங் மற்றும் சீன திருக்கை போன்ற சில இனங்கள் தற்போது 'அபாயத்தில் உள்ளவை' அல்லது 'மிகவும் அபாயத்தில் உள்ளவை' என்று பட்டியலிடப்பட்டுள்ளன.