/indian-express-tamil/media/media_files/2025/04/06/U9zjfA4HkxNjSBbmGew1.jpg)
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உணர்ச்சி மிகுந்த தருணமாக இருக்கும். குறிப்பாக, உற்சாகம், எதிர்பார்ப்பு, அசதி என பலதரப்பட்ட உணர்ச்சிகள் இருக்கும். இப்படியான சூழலில் அப்பெண்ணின் கணவருக்கும் கர்ப்பத்திற்கான அறிகுறிகளான குமட்டல் மற்றும் பசி போன்றவை இருந்தால் எப்படி இருக்கும்? இது நகைச்சுவை தொடரின் காட்சி அல்ல; உண்மையான நிகழ்வு.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Even men can experience pregnancy-like symptoms
கூவேட் சிண்ட்ரோம் (couvade syndrome) என்றால் என்ன?
கூவேட் சிண்ட்ரோம் (couvade syndrome) குறித்து சண்டிகரில் உள்ள க்ளவுட்னைன் குழும மருத்துவமனைகயின் மகளிர் மருத்துவத் துறையின் இணை இயக்குநர் மருத்துவர் ரிதம்பர பல்லா விளக்கம் அளித்துள்ளார்.
கர்ப்பத்திற்கான அறிகுறிகளை ஒரு ஆண் அனுபவிக்கும் போது லேசான தொல்லையிலிருந்து, வெளிப்படையான சங்கடம் வரை சில உணர்ச்சிகள் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அறிகுறிகள் குமட்டல், எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள் மற்றும் பிரசவ வலி போன்றவற்றையும் உள்ளடக்கும். மருத்துவ ரீதியில் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், கர்ப்பமாக இருக்கும் பெண்களின் கணவர்களிடம் கூவேட் சிண்ட்ரோம் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவர் ரிதம்பர பல்லா தெரிவித்துள்ளார்.
அறிகுறிகளின் தோற்றம் மற்றும் காரணங்கள்:
"மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில், முதல் மூன்று மாதங்களின் போது கூவேட் சிண்ட்ரோமின் அறிகுறிகள் பொதுவாக தொடங்கும். பிரசவ நாள் நெருங்கும் போது இவை அதிகரிக்கலாம். அவை உடல் மற்றும் உளவியல் அனுபவங்களின் கலவையாக இருக்கலாம். பெண்ணுக்கு என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை பிரதிபலிப்பதை போன்று தோன்றக் கூடும்" என மருத்துவர் ரிதம்பர பல்லா கூறுகிறார்.
காலை நேரத்தில் உடல் பலவீனம்: சில கர்ப்பிணிகளுக்கு காலை நேரத்தில் குமட்டல் போன்ற தொல்லைகள் இருக்கும். அந்த சமயத்தில் அப்பெண்ணின் கணவருக்கும் இதே பிரச்சனை இருப்பதை போன்ற உணர்வு இருக்கும்.
எடை அதிகரிப்பு: கூவேட் சிண்ட்ரோம் இருந்தால் விவரிக்க முடியாத வகையில் ஆண்களுக்கு எடை அதிகரிப்பு இருக்கும்.
உடல் அசௌகரியம்: வயிற்று வலி மற்றும் வீக்கம் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு இருப்பதை போன்று ஆண்களுக்கும் இருக்கும்.
அதீத உணர்ச்சிகள்: கூவேட் சிண்ட்ரோமின் போது ஆண்களுக்கு எரிச்சல், பதற்றம் மற்றும் மனநிலை மாற்றம் இருக்கும். இவை கர்ப்பிணிகளுக்கு இயல்பாகவே இருக்கும்.
உணவு மீது நாட்டம் மற்றும் வெறுப்பு: ஊறுகாய் போன்றவற்றின் மீது ஆண்களுக்கு திடீரென நாட்டம் அதிகரிக்கும். திடீரென அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் மீது வெறுப்பு உருவாகும். இவை கர்ப்பிணிகளிடம் காணப்படும் உணவு பழக்கத்தை பிரதிபலிக்கும்.
தூக்கம்: தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் ஆகியவை தந்தையாகப் போகிறவர்களிடம் இருக்கும்.
மருத்துவர் ரிதம்பர பல்லாவின் கூற்றுப்படி, கூவேட் சிண்ட்ரோமிற்கான காரணம் இன்று வரை புதிராகவே இருக்கிறது. ஆனால், சில கோட்பாடுகள் இதனை விளக்க முயற்சிக்கின்றன.
உளவியல் காரணிகள்: கர்ப்பிணி பெண்ணின் கணவருக்கு, தான் விரைவில் தந்தை ஆகப்போவதை நினைத்து ஏற்படும் கவலைகள் மற்றும் மனநல மாற்றங்கள் உள்ளிட்டவற்றின் வெளிப்பாடாக இது தோன்றலாம்.
உயிரியல் காரணிகள்: விரைவில் தந்தை ஆகப்போகும் நபரின் ஹார்மோன்கள் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கக் கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
கலாச்சார காரணிகள்: சில கலாச்சாரங்களில், கர்ப்பத்தின் போது ஆண்கள் பங்கேற்பின் சடங்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த கலாச்சார தாக்கங்கள் கூவேட் சிண்ட்ரோமிற்கு வழிவகுக்கலாம்.
மேலும் சில விளக்கத்தை மருத்துவர் ரிதம்பர பல்லா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, "கூவேட் சிண்ட்ரோமிற்கு மருத்துவ தலையீடுகள் தேவையில்லை என்றாலும், அதன் அறிகுறிகள் கவலை அளிக்கும். இதனை சில அணுகுமுறைகள் மூலமாக கட்டுப்படுத்தலாம். உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றின் மூலம் உடல் நலத்தை மேம்படுத்தலாம். மனநல ஆலோசனை, ஆதரவு குழுக்கள் மற்றும் வெளிப்படையான உரையாடல் போன்றவற்றின் மூலமாக உளவியல் காரணிகளை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர்களுக்கான பயிற்சிகள் இதற்கு பலன் அளிக்கும். குழந்தை பிறப்பிற்கு பிறகு இந்த அறிகுறிகள் பெரும்பாலும் குறையும். இவை ஒவ்வொரு நபர்களுக்கு மாறுபட்ட வகையில் இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.