குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தை இந்த சமூகம் எல்லா மனிதர்களிடத்திலும் விதைக்கிறது. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அந்த தம்பதிகளின் தேர்வாகத்தான் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எந்த கட்டாயத்திற்காகவும் நாம் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்கள். எனவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஒருசேர முடிவு எடுத்தால் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். இது மருத்துவர் ஜெயஸ்ரீ பேசிய வீடியோவில் இருந்து தொகுக்கப்பட்டது.
“நான் கருவுற்றிருக்கிறேன் என்று பெண்களுக்கு, மாதவிடாய் தள்ளிப்போகும்போதுதான் தெரியும். இந்நிலையில் கருவுற்றிருப்பதை வீட்டில் பரிசோதனை செய்யும்போதுதான் உறுதியாகும். இந்நிலையில் நாம் கருவுற்றிருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு பெண்களுக்கு சில நாட்கள் எடுக்கும். நம்மில் ஒரு கரு உருவாகி, வளர்வதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் குழம்பிவிடுவார்கள். இந்நிலையில் ஒரு கரு உருவானால் அதற்கு ஆண்கள்தான் காரணம் என்றும் அது உருவாக வில்லை என்றால் பெண்கள்தான் காரணம் என்று கருதுவது மிகவும் தவறு. கர்ப்பமாவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது. வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் என்பதுபோல குழந்தை பெற்றுக்கொள்ளவும் இது முக்கியம். கணவனும், மனைவியும் ஒரு மருத்துவரிடம் சென்று உடல் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.
உடல் அளவிலும் மனதளவிலும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதற்கு தயாராக வேண்டும். இதுதான் முக்கியம். 35 வயதுக்குள் இருக்கும் தம்பதிகள் ஒரு வருடம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் குழந்தை இல்லை என்றால், அவர்கள் மருத்துவரிடம் வருவது அவசியம். இதுபோல 35 வயதிற்கு பிறகு இருக்கும் கணவன் மற்றும் மனைவி ஒரு 6 மாத காலம் குழந்தைக்கு முயற்சி செய்துவிட்டு அப்போதும் குழந்தை பிறக்கவில்லை என்றால் மருத்துவரிடம் வர வேண்டும். கருவுறுவதை நாம் திட்டமிட வேண்டும். மேலும் பொருளாதார ரீதியாகவும் திட்டமிடுதல் முகவும் தேவை. ஐ.வி.ஐ மற்றும் ஐ.வி.எப் ஆகிய சிகிச்சைக்கு செல்பவர்கள் உடலை கவனித்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அப்போதுதான் நாம் உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நமது உடலில் என்ன நடப்பது என்ற விழிப்புணர்வு பெண்களுக்கு இல்லை. ஆண்களுக்கும் இல்லை. இதை யாரும் அவர்களுக்கு கற்றுதருவதில்லை. கருமுட்டை வெளிவரும் நேரத்தை நாம் ‘ovulation “ என்று சொல்கிறொம். ஒரு பெண் மாதத்தில் சில நாட்கள்தான் கருவுற தயராக இருப்பார்கள். fertile period என்று இதை சொல்வார்கள். இதனால் பெண்களுக்கு கருமுட்டைகள் வெளி வரும் நாட்களில்தான் நாம் உடலுறவு கொள்ள வேண்டும். மேலும் கருமுட்டைகள் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம். மேலும் உடல் உறவு வைத்துக்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பெயரில் வைத்துக்கொண்டால் மன அழுத்தம்தான் வரும். கரு உருவாகாது. மேலும் கரு முட்டை வெளியே வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும், சர்விக்கல் மூக்கஸ் (cervical mucus) வெளியாகும். அதாவது இது வெள்ளைபடுதல் போல் இருக்கும். மேலும் வெள்ளைபடுதலை நாம் எப்போதும் சரியாக புரிந்துகொள்வதில்லை. அதன் நிறம் வெள்ளையாக இல்லாமல் நிறம் மாறி இருந்தால் கண்டிப்பாக மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். மேலும் யோனியில் கட்டிகள் போலவோ அல்லது எரிச்சல் மற்றும் அடிக்கடி அரிப்பு இருந்தாலும் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும்.
இந்த சர்விக்கல் மூக்கஸ் வெளியாகும் அறிகுறிதான் “ கருமுட்டை வெளியாகும் “ நாள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த திரவம், முட்டையின் வெள்ளை கருவைப் போல வழவழப்புதன்மையுடனும். விரிவாகும் தன்மை கொண்டிருக்கும். 2 விரல்களை வைத்து இழுத்து பார்த்தால் அது 2 இஞ்ச் வரை இழுக்க முடியும். ஆனால் இந்த அறிகுறையை கண்டுபிடிக்க நாம் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த திரவமே தண்ணீரில் ஆனதுதான் என்பதால் நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் பெண்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். நமக்கு கருமுட்டை வெளியாகும் போதுதான் நமது உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இந்நிலையில் இந்த நாட்களில்தான் பெண்கள் உடலில் புரோஜெஸ்டிரோன் அதிகரிக்கும். இந்த ஹார்மோன்தான் குழந்தையை வளர்க்க உதவும். இப்போது கருவுற்றால், புரோஜெஸ்டிரோன் அளவு தொடர்ந்து நீடிக்கும். ” என்று அவர் கூறினார்.