/indian-express-tamil/media/media_files/2025/06/18/Menopause-223284d4.jpg)
பக்க விளைவுகள் இல்லாத மெனோபாஸ்… 40+ பெண்கள் நோட் பண்ணுங்க; டாக்டர் நித்யா
பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையானது. குறிப்பாக 40 வயதை நெருங்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடல்நலன் மற்றும் மனநலனில் பலவிதமான சவால்களை உண்டாக்கலாம். இவை என்னென்ன, அதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள் என்னென்ன? என்பது குறித்து டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் விளக்கி கூறி உள்ளார்.
மனநலனில் ஏற்படும் மாற்றங்கள்:
40 வயதை நெருங்கும் பெண்களின் மனநிலையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இதை 'மூட் ஸ்விங்ஸ்' எனலாம். திடீரென அதிக கோபம் கொள்வது, அல்லது எந்தக் காரணமும் இல்லாமல் வருத்தப்படுவது, தனிமை உணர்வு, ஏன் எதிர்மறை எண்ணங்கள் கூட தோன்றலாம். கணவன்மார்கள் தங்கள் மனைவியின் இத்தகைய மாற்றங்களைக் கண்டு குழப்பமடையலாம். இந்த மனநல மாற்றங்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளே முக்கியக் காரணமாகும்.
உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்: மனநல மாற்றங்களைத் தொடர்ந்து, உடலில் பல்வேறு அறிகுறிகளும் வெளிப்படலாம்:
- செரிமானக் கோளாறுகள்: நெஞ்செரிச்சல், வயிற்றில் உப்புசம், சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது, அல்லது அடிக்கடி மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஓய்வில்லாமல் மூளை சிந்திப்பதும், இனம் புரியாத பயம், அமிலச் சுரப்பை அதிகரித்து, வயிற்று உபசத்தை உண்டாக்கலாம்.
- உடல் வலி: காரணமே இல்லாமல் உடல் முழுவதும் வலிப்பதாகப் பலர் கூறுவார்கள். இது ஃபைப்ரோமையால்ஜியா (Fibromyalgia) என்ற நிலையாக இருக்கலாம். ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று வந்தாலும், உடலில் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இது உடலில் வாதம் அதிகமாகச் சுரப்பதன் ஒரு முக்கிய அறிகுறியாகும்.
- மலச்சிக்கல்: சில பெண்களுக்கு தீவிர மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படலாம். 4 அல்லது 5 நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பதும், இதனால் மன அமைதியின்மை ஏற்படுவதும் இயல்பு.
- மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்: ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods), அதிக இரத்தப்போக்கு (Heavy Bleeding) ஏற்படுவது பொதுவானது. சில சமயங்களில், 3 மாதங்கள் மாதவிடாய் வராமலும், பின்னர் வரும்போது அதிகப் பிளீடிங்குடன், உடல் வலி, தசை பிடிப்புகள், காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் வரலாம். கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கருப்பை வாயில் கட்டிகள் இருந்தால் இத்தகைய பிரச்னைகள் ஏற்படலாம்.
இந்த வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு புற்றுநோய் செல்கள் வளரவும் வாய்ப்புகள் இருப்பதால், மிகுந்த கவனம் தேவை என்று எச்சரிக்கிறார் டாக்டர் நித்யா.
சித்த மருத்துவத் தீர்வுகள் உள்ளதா?
உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கு பெண்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். 'இன்றைக்கு பார்த்துக்கொள்ளலாம், நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப் போடாமல், உடனடியாக தீர்வு காண்பது அவசியம். சித்த மருத்துவத்தில் இதற்கு சிறப்பான தீர்வுகள் உள்ளன.
- சிறுதானியங்கள்: கேழ்வரகு, கம்பு, வெள்ளை சோளம் போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்தவை. குறிப்பாக, வெள்ளை சோளத்தை சாதம், தோசை, இட்லி, பணியாரம் போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
- சத்தான பொருட்கள்: எள், கருப்பு உளுந்து, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது ஹார்மோன் சமநிலையின்மை சரிசெய்ய உதவும்.
வெளிப்புறப் பயன்பாடுகள்:
- எண்ணெய் தேய்த்தல்: கடுமையான தசை வலி மற்றும் ஃபைப்ரோமையால்ஜியா போன்ற நிலைகளுக்கு, எருக்குத் தைலம் அல்லது மயன தைலம் போன்ற சித்த மருந்துகளை உடலில் வலி உள்ள இடங்களில் தடவி, பின்னர் வெந்நீரில் குளிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும்.
உள்மருந்துகள்:
- மூலிகை மருந்துகள்: சதாவரி, தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் கரிசாலை போன்ற மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் நெய் மருந்துகள், கற்ப மருந்துகள் போன்றவை மனநல பாதிப்புகளையும், ஹார்மோன் சமநிலையின்மையையும் சரிசெய்ய உதவும். இவை பக்கவிளைவுகள் இல்லாதவை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.