தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு இந்த உடைதான் பெஸ்ட் - ஆண்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்
Mens Fashion Tips for belly, straight body types இறுக்கமான உடை, புகைப்படங்கள் போடப்பட்ட உடை, கிடைமட்ட கோடுகளிட்ட ஆடை, க்ரூ நெக், போலோ டீ-ஷர்ட், வெள்ளை சோல் கொண்ட ஷு போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.
Mens Fashion Tips for belly, straight body types Tamil News
Mens Fashion Tips for belly, straight body types Tamil News : ஆண்களுக்காகக் கடைகளில் விற்கும் உடைகள் ப்ளெயின், செக்டு எனக் குறைந்த வெரைட்டிகளில் இருந்தாலும், அதனை உடுத்தும் விதத்தில் அணிந்தால் மட்டுமே ஸ்மார்ட் லுக் பெற முடியும். சில ஆண்களுக்குக் குறுகிய தோள்பட்டை இருக்கும், சிலருக்கு வயிற்றுப்பகுதி சிறியதாக இருக்கும் ஆனால், தோள்பட்டை அகன்று இருக்கும். இதனால்தான் ஒருவர் அணியும் உடை மற்றொருவருக்கு அதேபோன்ற தோற்றத்தைத் தருவதில்லை.
Advertisment
ஆனால், உங்கள் உடலமைப்பைப் பற்றி தெரிந்துகொண்டால், உங்களுக்கு ஏற்ற சரியான உடைகளைத் தேர்வு செய்வது மிகவும் எளிது. பொதுவாக ஆண்களின் உடலமைப்பை முக்கோணம் (Triangle), தலைகீழ் முக்கோணம் (Inverted Triangle), செவ்வகம் (Rectangle), சரிவகம் (Trapezoid) மற்றும் ஓவல் (Oval) என வகைப்படுத்தலாம். ஆடை வாங்குவதற்கு முன்பு உங்கள் உடலமைப்பு என்னவென்று தெரிந்துகொண்டால், ஸ்மார்ட் லுக் உங்களுக்கு சொந்தம். அதற்கான வழிகாட்டியைப் பார்க்கலாம்.
முக்கோண உடலமைப்பு:
வயிற்றுப்பகுதி பெரிதாகவும் தோள்பட்டை குறுகியும் காணப்படுபவர்கள் முக்கோண உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களின் தோள்பட்டை சற்று சாய்ந்து இருக்கும். அதனால், செக்ட் (கட்டம்போட்டது) உடைகள், செங்குத்து (vertical) கோடுகளிட்ட உடைகள், தோள்பட்டைகளில் பிரின்ட் அல்லது ஏதாவது வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள், அடர்த்தி அல்லது டார்க் வண்ணங்கள், க்ரூ நெக் உடைகள், கழுத்தை ஒட்டியிருக்கும் ஆடைகள், சிம்பிள் பெல்ட், ஸ்ட்ரெய்ட் கட் பேன்ட் மற்றும் சிங்கிள் பிரெஸ்ட்டேட் ஜாக்கெட் (Single Breasted Jacket) போன்றவை முக்கோண உடலமைப்பு கொண்டவர்களுக்கான பெர்ஃபெக்ட் உடைகள். உடலை இறுக்கிக்கொண்டிருக்கும் போலோ டீ-ஷர்ட், பிரின்ட், எம்ப்ராய்டரி போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள், பெரிய பக்குள் பெல்ட் வகைகள், ஸ்கின்னி பேன்ட்டுகள் முதலியவற்றை இவர்கள் நிச்சயம் தவிர்க்கவேண்டும்.
தலைகீழ் முக்கோணம்:
முக்கோண உடலமைப்பிற்கு அப்படியே எதிர்மறை உடலமைப்புதான் தலைகீழ் முக்கோணம். இவர்களின் தோள்பட்டை அதிகமாக அகன்றும், இடைப்பகுதி மிகவும் குறுகியும் காணப்படும். கிடைமட்ட (Horizonatal) கோடுகளுடைய ஆடைகள், உடலை ஒற்றிய உடைகள், எலாஸ்டிக் மெட்டீரியல், V -நெக் டீ-ஷர்ட், ஸ்லிம் ஃபிட் ட்ரவுசர், ஷர்ட், பெரிய பக்குள் வைத்த பெல்ட், பிரின்ட் பேன்ட் போன்றவை சரியான தேர்வு. ஸ்கின்னி வகை உடைகள், தோள்பட்டைகளில் எம்ப்ராய்டரி, பிரின்ட் போன்ற வேலைப்பாடுகள் உள்ள உடைகள், அகன்ற கழுத்துடைய ஆடைகள் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
செவ்வகம் உடலமைப்பு:
பொதுவாகவே ஒல்லியான தேகம் உடையவர்கள்தான் செவ்வக உடலமைப்பில் இருப்பார்கள். இவர்களின் தோள்பட்டை முதல் இடுப்பு வரை ஒரே அளவைக் கொண்டிருப்பார்கள். அதனால், தோள்பட்டை சற்று அகன்றிருப்பதுபோல் மாயை தரும் உடையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கிடைமட்ட கோடுகளுடைய டீ-ஷர்ட், ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட் (டீ-ஷர்ட் அணிந்து அதன் மேல் சட்டை அணிந்துகொள்வது), க்ரூ நெக் ஜம்ப்பர், கழுத்தில் ஸ்கார்வ்ஸ், பிரைட் வண்ண உடைகள், போன்றவற்றை அணிவதன் மூலம் மெலிந்த தேகம் சிறிது தடித்ததைப்போல் தோற்றம் பெரும். டபுள் பிரெஸ்ட்டேட் ஜாக்கெட், புகைப்படங்கள் போடப்பட்ட டீ-ஷர்ட் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும்.
சரிவகம் உடலமைப்பு:
சரிவக உடலமைப்பு கொண்டவர்களுக்குக் கடைகளில் விற்கப்படும் அனைத்து உடைகளும் பக்காவாகப் பொருந்தும். விலா எலும்புகள் சீராக காலர் எலும்பு வரை சென்று அளவான அல்லது சரியான அகன்ற தோள் பட்டைக்கொண்டிருப்பவர்கள் சரிவகம் உடலமைப்புக்காரர்கள். எந்தவிதமான உடைகளும் இவர்களுக்குப் பொருந்தும். அதிலும், உடலை ஒத்தியிருக்கும் உடைகளைத் தாராளமாக இவர்கள் அணியலாம். செங்குத்தான கோடுகள் கொண்ட ஆடைகள் உயரமாகவும், கிடைமட்ட கோடுகள் கொண்ட ஆடைகள் சிறிது பருமனாகவும் காண்பிக்கும் மாயை ஏற்படுத்தும். அதனால், உயரத்துக்கு ஏற்றபடி பேட்டர்ன்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தளர்வான உடைகளை உடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
ஓவல் உடலமைப்பு:
இடுப்பு மற்றும் தோள்பட்டைவிட வயிற்றுப்பகுதி தடித்திருப்பவர்கள் ஓவல் உடலமைப்பில் சேர்வார்கள். சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால் தொப்பை கொண்டவர்கள். அடர்த்தியான சாலிட் வகைதான் இவர்களுக்கான சரியான சாய்ஸ். அதேபோல இறுக்கமாக பெல்ட் அணிவதைத் தவிர்ப்பது சிறந்தது. சஸ்பெண்டர் வகை உடைகள், ப்ளீட் வைத்த பேன்ட், அகலமான காலர், நெக்டை (Tie), பின் ஸ்ட்ரைப் அல்லது வெர்டிகள் கோடுகள் கொண்ட உடைகள் போன்றவற்றை அணிவதன் மூலம் தடித்த உடலமைப்பைக் குறுக்கிக் காண்பிப்பதைப்போல் மாயை உருவாக்கலாம். இறுக்கமான உடை, புகைப்படங்கள் போடப்பட்ட உடை, கிடைமட்ட கோடுகளிட்ட ஆடை, க்ரூ நெக், போலோ டீ-ஷர்ட், வெள்ளை சோல் கொண்ட ஷு போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil