டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு பிரபலமான நீரிழிவு எதிர்ப்பு மருந்து (anti-diabetic medicine) ரத்த புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது.
மக்கள் Metformin என்ற மருந்தைப் பயன்படுத்தும்போது, அது மைலோபிரோலிஃபெரேடிவ் நியோபிளாம்ஸை (MPN- myeloproliferative neoplasms) உருவாக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.
MPN என்பது எலும்பு மஜ்ஜையானது அதிகப்படியான சிவப்பு ரத்த அணுக்கள், சில வெள்ளை ரத்த அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகளை உருவாக்கும் ஒரு கோளாறு ஆகும்.
டைப் 2 நீரிழிவு நோய்க்கான மெட்ஃபோர்மின், கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ரத்த குளுக்கோஸ் அளவை திறம்பட குறைக்கிறது. இது குடல் உறிஞ்சுதலைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
மக்கள் எவ்வளவு காலம் மெட்ஃபோர்மினைப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு MPNs உருவாகும் அபாயம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹெமாட்டாலஜியின் பிளட் அட்வான்ஸ்டு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு வருடத்திற்கும் குறைவான சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக மெட்ஃபோர்மினை எடுத்துக் கொண்டவர்களில் வலுவான விளைவைக் கண்டோம், என்று டென்மார்க்கில் உள்ள அல்போர்க் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டேனியல் டி. கிறிஸ்டென்சன், தெரிவித்தார்.
MPN ஆனது நாள்பட்ட மைலோஜெனஸ் லுகேமியா, சிவப்பு ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் அல்லது ஈசினோபில்ஸ், நியூட்ரோபில்ஸ் எனப்படும் சில வகையான வெள்ளை ரத்த அணுக்களை உள்ளடக்கிய பல அரிய புற்றுநோய்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோளாறுகள் ரத்த சோகை, நோய்த்தொற்றுகள், ரத்தப்போக்கு பிரச்சினைகள் மற்றும் சோர்வு போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம்.
MPN வளர்ச்சிக்கு எதிராக மெட்ஃபோர்மின் ஏன் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் குழுவால் சரியாக மதிப்பிட முடியவில்லை என்றாலும், இது ஏன் என்பதை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி நடத்தப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்கால ஆய்வுக்கான மக்கள்தொகை அளவிலான தரவுகளில் மைலோடிஸ்பிளாஸ்டிக் நோய்க்குறிகள் மற்றும் கடுமையான மைலோயிட் லுகேமியா ஆகியவற்றுடன் ஒத்த போக்குகளை அடையாளம் காண்பதை ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர், என்று ஆய்வு கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“