மிட்நைட் பிரியாணி பிரியரா? இளம் வயது சர்க்கரை வியாதி வரும் ஆபத்து இருக்கு; டாக்டர் வேணி எச்சரிக்கை
ஒரு பத்தாண்டுகளுக்கு முன் நமது வாழ்க்கைமுறை முற்றிலும் வேறுபட்டிருந்தது. இரவு 10 மணி கடந்துவிட்டால் கடைகள் அடைக்கப்பட்டு, வீதிகள் அமைதியாகிவிடும். ஆனால் இரவு 10 மணிக்குத் திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி வரை இயங்கும் கடைகளும், "மிட்நைட் பிரியாணி" போன்ற கவர்ச்சிகரமான பெயர்களில் விற்கப்படும் உணவு வகைகளும் பெருகிவிட்டன. "மிட்நைட் மன்சீஸ்" (Midnight Munchies) என்ற இந்த புதிய கலாச்சாரம், உண்மையிலேயே பசியோடு சாப்பிடுவதை விட, ஆசைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் நள்ளிரவில் சாப்பிடும் வழக்கத்தை ஊக்குவிக்கிறது.
Advertisment
"வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்" என்று கூறி நண்பர்களுடன் கூடி ஐஸ்கிரீம், இனிப்புகள் அல்லது நள்ளிரவு பிரியாணி என்று உணவைத் தேடிச் செல்லும் இந்தப் போக்கு ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று கேட்டால், ஒரு சதவீதம் கூட பலனில்லை என்றுதான் சொல்ல முடியும். நம் வயிறு என்பது எப்போதும் வேலை செய்யக்கூடிய உறுப்பு அல்ல. சூரியன் அஸ்தமித்தவுடன் உணவை முடித்துக்கொண்டு, மறுநாள் காலை 4 அல்லது 5 மணி வரை எதுவும் சாப்பிடாமல் இருந்த நமது முன்னோர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்ட இந்த உணவுப் பழக்கம், கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் புரட்சிகரமாக மாறிவிட்டது. நாம் உண்ணும் உணவுகளின் வகை பெருகிவிட்டன. ஒரு விசேஷத்திற்குச் சென்றால் கூட, அளவுகடந்த உணவு வகைகளை அள்ளிப் போட்டு, ஆரோக்கியத்திற்குப் பதிலாக நோயை தான் பரிசாகக் கொடுக்கிறோம் என்பதை உணருவதில்லை. இந்த நள்ளிரவு உணவுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்கள்தான் என்கிறார் டாக்டர் வேணி.
பெரியவர்கள் இந்தப் பழக்கத்தை கேவலமாகப் பார்க்கும்போது, இளைஞர்கள் இதை ஸ்டைலாக, "நான் foodie" என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான கலாசாரம் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
Advertisment
Advertisements
நள்ளிரவு உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள்:
நள்ளிரவு பிரியாணி போன்ற உணவுப் பழக்கங்களால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கிறார் டாக்டர் வேணி.
சர்க்கரை வியாதி: 20, 25 வயதிலேயே சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தாமதமாக இரவில் சாப்பிடும்போது இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நமது உடலின் சர்க்கேடியன் கடிகாரம் (Circadian Clock) எனப்படும் இயற்கையான தாளம் சீர்குலைகிறது.
ஞாபக சக்தி குறைபாடு: மூளைக்கு இரவு நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 4 மணி வரை விழித்திருப்பவர்களுக்கு ஞாபக சக்தி குறைபாடுகள் ஏற்படும்.
ஹார்மோன் பிரச்னைகள்: தூக்கமின்மை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம்: இளைஞர்கள் உணவை மன அழுத்த நிவாரணியாக (Stress Buster) பார்க்கிறார்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உணவை நாடிச் செல்வது மிகவும் தவறான அணுகுமுறை.
நல்ல ஞாபக சக்தி, ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் பயமில்லாத, தன்னம்பிக்கையான வாழ்க்கை வாழ, இரவு நேரத்தில் சரியான தூக்கம் அத்தியாவசியம். உயிர் வாழ்வதற்காக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அல்ல. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டு, சரியான நேரத்தில் உறங்கி, பணியை நல்லபடியாக கடைசிநாள் வரை செய்ய முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.