முகமது நபி பிறந்த நாளான இன்று (செப்.28) உலகம் முழுவதும் மிலாது நபி விழாவாக இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். கோவையில் மிலாது நபி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள மதராசாக்களில் படிக்கும் இஸ்லாமிய சிறுவர்கள் தப்படித்து கொண்டு முகமது நபியின் பெருமையை விளக்கும் விதமாகவும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ஊர்வலமாக பாடல்கள் பாடியபடி சென்றனர்.
தொடர்ந்து உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புகடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. அதே வேளையில் மிலாது நபி விழாவை கொண்டாடும் விதமாகவும் , ஏழை, எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜமாத் சார்பில் இலவசமாக பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.
உக்கடம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று அதிகாலையிலேயே 50 அடுப்புகளில் சுமார் 1500 கிலோ பிரியாணி அரிசியை கொண்டு 8000 பேர் சாப்பிடும் வகையில் பிரியாணி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
இதே போல கோவையில் இன்று பல்வேறு இடங்களில் சுமார் 50,000 பேருக்கு பிரியாணி வழங்க சமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“