Pepper Rasam Milagu Rasam Recipe Tamil: உலகெங்கிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்துவரும் நிலையில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்பு வேண்டாம் என்று ஒதுக்கிய ஆரோக்கிய உணவு வகைகளை தற்போது தினமும் வீட்டிலேயே செய்து உண்ணுகின்றனர். அந்த வரிசையில் தென்னிந்திய மக்கள் ஆரோக்கிய உணவு லிஸ்ட்டில் முதலில் இருப்பது மிளகு ரசம்.
கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அப்படிப்பட்ட மிளகு மற்றும் பூண்டு வைத்து எளிமையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான ரசம் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
Milagu Rasam making tamil video: மிளகு ரசம்
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்
புளி கரைசல் – 2 மேசைக் கரண்டி
தக்காளி- 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை
சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஓர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு தக்காளி குழைய வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.
புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான் சூடான மிளகு ரசம் ரெடி! இறக்கியதும் அதன்மேல் கொத்தமல்லித் தழைகளைத் தூவி விடலாம். தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.
சூடான சாதத்தோடு இந்த ரசத்தை ஊற்றிச் சாப்பிடலாம்! மொறுமொறு அப்பளம் இதற்கு பெஸ்ட் காம்போ.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.