கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ரூ. 22.72 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா ஓய்வு இல்லம், பிச்சாவரம் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதனை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார்.
இதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது, "சுற்றுலா துறையை மேம்படுத்தவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த பகுதியாக பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகளை சுற்றி 400-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் உள்ளதால் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்ளும் வசதிக்காக 15 மோட்டார் படகுகள் மற்றும் 35 துடுப்பு படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் 8,13,080 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 2,230 வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்த்திடவும், அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் பொருட்டு கூடுதல் வசதிகள் செய்திடும் வகையில் பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், தங்கும் அறைகள் மற்றும் உணவகம் புனரமைக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ரூ. 14.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் தற்போதைய தேவைக்கேற்பவும், எளிதில் பாதுகாப்பான முறையில் வந்து சென்றிடவும், நியாயமான கட்டணத்தில் அனைத்து நவீன அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ஏற்படுத்திடும் பொருட்டு சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ரூ. 8.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.