/indian-express-tamil/media/media_files/2025/05/12/gHB60OQ4vWyxI1tqYhsm.jpg)
லைஃப்ஸ்டைல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருவிழாவில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியை சேர்ந்த சக்தி தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும்வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சி கள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில், திருநங்கை அழகிப்போட்டியான 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இதன் முதல் சுற்றில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு வண்ண வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து தங்கள் அழகை காண்பித்தனர். மற்ற திருநங்கைகள் இவர்களை கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3பேருக் கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விஷால் மயக்கம்
இதனிடையே, திருநங்கைகளுக்கான அழகிப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகர் விஷால், மேடைக்கு வந்ததும் திருநங்கைகளை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். பின்னர் திருநங்கைகளை போற்றி புகழ்ந்து பேசி அவர் திருநங்கைகளுடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்படுவதற்காக மேடையில் இருந்து நடிகர் விஷால் கீழே இறங்கினார். அப்போது அவரைப் பார்த்து கைகுலுக்கி மகிழ்வதற்காக ரசிகர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டு அவரை சூழ்ந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட விஷால் திடீரென மயங்கி மேடையிலேயே சரிந்து கீழே விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அருகில் இருந்த திருநங்கைகள் விஷாலை தாங்கிப்பிடித்து விழா மேடையிலேயே படுக்க வைத்து ஆசுவாசப்படுத்தினர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினரை வரவழைத்து நடிகர் விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு குடி தண்ணீர் வழங்கி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு சுமார் 10 நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த நடிகர் விஷால் தனது காரில் ஏறி சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.