மிஸ் யுனிவர்ஸ் 2021: கீரிடத்தை வென்ற ஹர்னாஸ் சந்து சொன்ன “சக் தே பட்டே”! என்ன அர்த்தம் தெரியுமா?

21 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹர்னாஸ் மிஸ் யுனிவர்ஸ் கௌரவத்தை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். சந்து உட்பட இதுவரை மூன்று இந்தியர்கள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர்.

நடிகை-மாடல் அழகி ஹர்னாஸ் சந்து 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி 2021 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை, லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் இந்த பட்டத்தை வென்றார். அதற்கு முன் நடிகை சுஷ்மிதா சென் 1994-ல் பட்டம் பெற்றார். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹர்னாஸ் இந்த கௌரவத்தை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். சந்து உட்பட இதுவரை மூன்று இந்தியர்கள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர்.

பராகுவேயின் நடியா ஃபெரீரா முதல் ரன்னர்-அப் இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் லலேலா ம்ஸ்வானே இரண்டாவது ரன்னர்-அப் இட்த்தையும் பிடித்தனர்.

இஸ்ரேலின் ஈலாட்டில் நடைபெற்ற 70வது பிரபஞ்ச அழகி போட்டியில், மெக்சிகோவைச் சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் 2020 ஆண்ட்ரியா மெசாவால் சந்து முடிசூட்டப்பட்டார்.

கிரீடத்தை வென்ற பிறகு, உற்சாகமாக சந்து’ தனது தாய்மொழி பஞ்சாபியில் சொன்ன முதல் விஷயம், “சக் தே பட்டே”,  ஆதாவது ஆங்கிலத்தில் டு-பிக்-அப்( to pick up) என்பதாகும்.

போட்டியின் இறுதிச் சுற்றின் போது, ​​அழகி சந்துவிடம்’ இளம் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து என்ன அறிவுரை கூறுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழுத்தம், தங்களை நம்புவதுதான், நீங்கள் தனித்துவமானவர், அதுதான் உங்களை அழகாக்குகிறது. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், உலகளவில் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுவோம். இது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, வெளியே வாருங்கள், உங்களுக்காக பேசுங்கள், ஏனென்றால் நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் தலைவர், நீயே உன் குரல். நான் என்னை நம்பினேன் அதனால்தான் இன்று இங்கு நிற்கிறேன்.”

சந்து-வின் இந்த பதிலுக்கு அரங்கம் முழுவதும் இடியுடன் கூடிய கைதட்டல் ஒலித்தது.

முதல் 5 கேள்வி பதில் சுற்றில், சந்துவிடம், “பலர் காலநிலை மாற்றம் ஒரு புரளி என்று நினைக்கிறார்கள், அவர்களை நம்ப வைக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?”என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சந்து’ “இயற்கை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பார்க்கும்போது என் இதயம் உடைகிறது, இதற்கு எல்லாம் நமது பொறுப்பற்ற நடத்தைதான் காரணம். இது பேச்சை குறைத்து நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் என்று நான் முழுமையாக உணர்கிறேன். ஏனெனில் நமது ஒவ்வொரு செயலும் இயற்கையைக் காப்பாற்றலாம் அல்லது கொல்லலாம். வருந்துவதையும் பழுதுபார்ப்பதையும் விட தடுப்பதும் பாதுகாப்பதும் சிறந்தது, இதைத்தான் நான் இன்று உங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறேன்,” என்று அவர் கூறினா. இந்த பதில் தான் அவரை டாப் 3 சுற்றுக்கு எடுத்து சென்றது.

போட்டியின் தேர்வுக் குழுவில் நடிகையும், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2015 ஊர்வசி ரவுடேலா, அடமரி லோபஸ், அட்ரியானா லிமா, செஸ்லி கிரிஸ்ட், ஐரிஸ் மிட்டனேரே, லோரி ஹார்வி, மரியன் ரிவேரா மற்றும் ரெனா சோஃபர் ஆகியோர் அடங்குவர்.

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற பிறகு, செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஹர்னாஸ் சந்து,  “நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க என் மனதில் இருக்கும் ஒரே வார்த்தை நம்பமுடியாதது(unbelievable). அந்த மேடையில் (வெற்றியாளர் அறிவிக்கப்படும் போது) என் நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்று கேட்டபோது, ​​என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வு. நான் அழுதேன், என்னைச் சுற்றியுள்ள அனைவரும் அழுதனர். இந்த நாளுக்காக நாங்கள் 21 வருடங்கள் காத்திருந்தோம், அது உண்மையில் நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இன்னும் என்னால் நம்பமுடியவில்லை என்று கூறினார்.

சண்டிகரை சேர்ந்த மாடல் அழகி அக்டோபர் மாதம் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 கிரீடம் வென்றார். தனது 17வது வயதில் சண்டிகரை பிரதிநிதித்துவப்படுத்தி, 2017 இல் ”டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ்” பட்டத்தை வென்றதன் மூலம் ஹர்னாஸ்’ தனது அழகுப் போட்டி பயணத்தைத் தொடங்கினார். 21 வயதான அழகி, தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 போன்ற பல போட்டி பட்டங்களை அவர் பெற்றுள்ளார். மேலும் சில பஞ்சாபி படங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Miss universe 2021 harnaaz sandhu this is the meaning of chak de phatte

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express