தவறுகள் நம் தகுதியை உயர்த்தும்

தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது. அதே நேரத்தில் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், இரா. குமார்.

Raman - ravanan - seethai

இரா.குமார்

தவறு செய்துவிட்டோமே என்று சில நேரங்களில் வருந்துகிறோம். இப்படி செய்திருக்க வேண்டாம். செய்யாமல் இருந்திருந்தால், இந்தக் கஷ்டம் வந்திருக்காது என்று புலம்புகிறோம்.

தவறு செய்தால்தான் மனிதன். தவறுகளில் இருந்துதான் பாடம் படிக்கிறோம். “தவறு செய்ய வேண்டும். அப்போதுதான் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒரே தவறை திரும்பச் செய்யக் கூடாது. புதுப் புது தவறாக செய்ய வேண்டும்” என்று என் நண்பர் ஒருவர் சொல்வார்.

தவறுகள்தான் நம்மை பக்குவப்படுத்துகின்றன. தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்தால்தான் மனிதன். ஆனால், செய்த தவறில் இருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி, பாடம் படிக்காமல் போகும்போது, அடுத்தடுத்து ஒரே தவறை செய்யும்போது பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறோம்.

தவறே செய்யாமல் இருக்க முடியாது. செய்த தவறால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்காமலும் தப்ப முடியாது. அந்தக் கஷ்டத்தில் இருந்து மீள, போராட வேண்டியதும் அவசியமான ஒன்று.

இதைத்தான் நம் முன்னோர்கள் புராணங்கள் மூலமும், இதிகாசங்கள் மூலமும் நமக்கு விளக்கிச் சென்றிருக்கின்றனர்.

இராமயணமும் மகாபாரதமும் இதை நமக்குச் சொல்கின்றன. இராமன் எவ்வளவு பெரிய அறிவாளி. புத்தி கூர்மை உள்ளவன். மனம் பக்குவப்பட்டவன். எந்த நேரத்திலும் பதற்றப்படாதவன். எல்லாவற்றுக்கும் மேலாக அவதார புருஷன். அவனே தவறு செய்கிறான்.

சீதை கேட்டாள் என்பதற்காக, மானைப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் செல்கிறான். அது உண்மையான மான்தானா? அல்லது மாயமானா என்று ஆரயாமல், மாயமானைத் துரத்திச் செல்கிறான். இராமன் செய்த இந்த தவறால்தான், சீதையை இரவணனால் கவர்ந்து செல்ல முடிந்தது.

சரி… இராமன்தான் தவறு செய்தான். சீதை என்ன செய்தாள்? அவளும் தவறு செய்தாள். கோட்டை கிழித்துவிட்டு, இதைத் தாண்டி வரவேண்டாம் என்று லட்சுமணன் சொல்லிவிட்டுப் போகிறான். கோட்டைத் தாண்டுகிறாள். இரவணன் அவளைக் கவர்ந்து செல்ல எளிதாகிவிட்டது.

மாயமான் பின்னால், இராமன் செல்லாமல் இருந்திருந்தாலோ, கோட்டை சீதை தாண்டாமல் இருந்திருந்தாலோ, சீதையை இராவணன் கடத்திச் சென்றிருக்க முடியது. இராமாயணப் போருக்கும் அவசியம் இருந்திருக்காது. சொல்லப் போனால் இராமாயணமே இருந்திருக்காது.

மகாபாரதத்தில் நடந்தது என்ன? சூதாடுகிறார் தர்மர். தர்மத்தின் வழி தவிர வேறு எதுவும் அறியாதவர் அவர். தனது நாட்டைக் கவர்ந்துகொள்ள துரியோதனன் செய்யும் சூழ்ச்சி இது என்று தருமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? தெரிந்திருந்தும், சூதாடுகிறார். சூடாட்டத்தில் எல்லாவற்றையும் இழக்கிறார். தர்மர் செய்த இந்த தவறுதான், பஞ்சபாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது. மகாபாரதப் போருக்கு வழி ஏற்படுத்தியது. சூதாடிய தவறை தர்மர் செய்யாமல் இருந்திருந்தால் மகாபாரதப் போருக்கு வேலை இல்லை, மகாபாரதமும் இல்லை.

இராமயாணக் கதையில் திருப்பம் ஏற்படக் காரணம் இராமனும் சீதையும் செய்த தவறுதான். மகாபாரதக்கதையில் திருப்பம் ஏற்பட தர்மர் செய்த தவறு காரணமாக இருந்தது. அதுபோலத்தான், நாம் செய்யும் தவறுகள், நம் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் திருப்பங்கள் நம்மை பக்குவப்படுத்தும். திருப்பங்களை, கஷ்டங்களை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படி ஆக்கிக்கொள்ளும் வல்லமையும் மனப்பக்குவமும் பெற்றவர்களே சாதனையாளர்களாக, தலைவர்களாக உயர்கிறார்கள்.

எனவே, தவறு செய்துவிட்டோம் என்று வருத்தப்பட அவசியமில்லை. வருத்தப்படுவதால் பயனும் இல்லை. தவறு செய்வதில் இருந்து அவதார புருஷர்கள்கூட தப்பவில்லை. நாம் எம்மாத்திரம் என்பதை உணர வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் படித்து நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் வழியைக் காண வேண்டும். அதுதான் நம்மை உயர்த்தும். இந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் போதும். தவறுகள் ஒவ்வொன்றும் நம் தகுதியை உயர்த்தும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mistakes will increase our status

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com