/indian-express-tamil/media/media_files/2025/06/24/canker-sores-will-2025-06-24-13-20-48.jpg)
நல்லெண்ணெய் உடன் இதை சேர்த்து ஆயில் புல்லிங் பண்ணுங்க… வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும்; டாக்டர் நித்யா
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் வாட்டி வதைக்கும் முக்கியப் பிரச்னை பல் சம்பந்தப்பட்ட நோய்கள். பற்களில் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பல் ஆட்டம், பல் உடையுதல், நிறம்மாறுதல், வாய் துர்நாற்றம் எனப் பல பிரச்னைகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கு என்ன காரணம், இயற்கையான முறையில் எப்படி தீர்க்கலாம் என்பது குறித்து மருத்துவர் நித்யா கூறிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பல் பிரச்னைகளுக்கான முக்கிய காரணங்கள்: நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பற்களில் ஒட்டிக்கொண்டு, பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். இது சொத்தைப் பல் ஏற்பட முக்கியக் காரணமாகும். வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாகி, உணவுக்குழாய் வழியாக மேலே வரும்போது (Acid Reflux), அது பற்களின் எனாமலைப் பாதித்து, பல் சிதைவுக்கு வழிவகுக்கும். ஈறுகள் பற்களை விட்டு கீழ்நோக்கி இறங்குவதால், பற்களின் வேர்ப்பகுதி தெரிய ஆரம்பிக்கும். பல் ஆட்டத்திற்கும், இறுதியாகப் பல் விழுவதற்கும் காரணமாக அமையும். கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துக்களின் குறைபாடு பற்களின் பலவீனத்திற்கும், நிற மாற்றத்திற்கும் வழிவகுக்கும். இரத்த சோகை (அனிமியா) உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். முறையான வாய் சுகாதாரத்தைப் பேணாதது, வாய் துர்நாற்றம் (ஹலிடோசிஸ்) மற்றும் பல்வேறு வாய் தொற்றுகளுக்குக் காரணமாகும்.
பல் பாதுகாப்பிற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:
மூலிகை பற்பொடிகள்: கிராம்பு, கொட்டைப்பாக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், காய்ச்சுக்கட்டி ஆகியவற்றைச் சம அளவில் உப்புடன் சேர்த்துப் பொடித்துப் பயன்படுத்தலாம். இந்தப் பற்பொடிகள் பற்களைப் பாதுகாப்பதுடன், தொண்டை வலி, காது பிரச்சனைகள், வாய் தொற்று கிருமிகள் ஆகியவற்றையும் நீக்க உதவுகின்றன. குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பது நல்லது.
நாயுருவி வேர்: வயல் ஓரங்களில் காணப்படும் நாயுருவி செடியின் வேரை எடுத்து, வாரம் ஒரு முறை பல் துலக்கப் பயன்படுத்தலாம். ஆலங்குச்சி, வேப்பங்குச்சி போல இதுவும் பற்களுக்கு வலிமை சேர்க்கும்.
நல்லெண்ணெய் ஆயில் புல்லிங்: ரசாயனம் கலந்த மவுத் வாஷ்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழித்து, எனாமலைப் பாதிக்கலாம். இதற்குப் பதிலாக, நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் (Oil Pulling) செய்வது சிறந்ததாகும். நல்லெண்ணெயுடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாயில் ஊற்றி கொப்பளிப்பது, ஈறுகளில் உள்ள வீக்கம், புண்கள், வாய்ப் புண்கள் (Mouth Ulcers) ஆகியவற்றைக் குணப்படுத்த உதவும்.
திரிபலா சூரணம்: திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து, வாய் கொப்பளிக்கும் திரவமாகப் பயன்படுத்தலாம். இது வாய்ப் புண்கள், பல் எனாமல் பாதுகாப்பு மற்றும் பல் நிற மாற்றத்தைக் குணப்படுத்த உதவும்.
படிகார நீர்: சித்த மருத்துவத்தில் உள்ள படிகார நீரை வாங்கி, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிப்பது வாய் மற்றும் ஈறுகளில் உள்ள புண்கள், தொற்றுகள் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவும்.
கிராம்பு எண்ணெய்: கிராம்பு எண்ணெயை 10 மில்லி ஆலிவ் ஆயிலுடன் 10 மில்லி கலந்து, காட்டனில் தொட்டு பல் வலி உள்ள இடத்தில் வைப்பது அல்லது பட்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது பல் வலியைக் குறைத்து, வேர் வரை தொற்று பரவாமல் தடுக்கும்.
மாசிக்காய் சூரணம்: துவர்ப்பு சுவை கொண்ட மாசிக்காய் சூரணமும் பல் வீக்கம் மற்றும் வாய்ப் புண்களுக்குச் சிறந்த மருந்தாகும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம் என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.