Advertisment

காசு பணம் துட்டு மணி

எல்லோருக்கும் தேவை பணம். பணக்காரராக எந்தெந்த கிரகங்கள் சாதகமாக இருக்க வேண்டும் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலம் எடுத்து சொல்லப்படுள்ளது.

author-image
WebDesk
Sep 19, 2017 10:49 IST
New Update
rupee

சரவணக்குமார்

Advertisment

பணமில்லாத மனிதன் பிணத்திற்கு சமமானவனாகி விடுகிறான். இச்சமுதாயமும் பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்தே ஒருவரை எடை போடுகிறது. இன்றைய காலகட்டத்தில் நல்ல மனதிற்கு இருக்கும் மதிப்பை விட பணத்திற்கு இருக்கும் மதிப்பே அதிகம்.

பணத்திற்காக நம்மை சுற்றி இருக்கும் கூட்டம், பாக்கெட் காலி என்பது தெரிந்தால் அடுத்த நொடியே காணாமல் போய்விடுகிறது.

இவ்வளவு ஏன்... காசு இருந்தால் மட்டுமே இன்றைய தினம் கடவுளை தரிசிக்க முடியும். இல்லையென்றால், இருந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டியது தான்.

செல்வத்தை நோக்கி நாம் சென்றாலும், அது நம்மை தேடிவரும் அமைப்பு நம் ஜாதகத்தில் இருக்க வேண்டும். இதையே பெரியவர்கள், ‘எவ்வளவு தான் எண்ணையத் தடவிக்கிட்டு உருண்டு புரண்டாலும் ஓட்றது மட்டுமே ஓட்டும்’ என்பார்கள்.

இப்படி செல்வம் நம்மை வந்து சேர்வதற்கான கிரக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை காண்போம்.

தனஸ்தானம் என்றழைக்கப்படும் இரண்டாமிடம் சுப பலம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதாவது, இங்கு சுபகிரகங்கள் அமர்ந்திருப்பதோ, பார்ப்பதோ சிறப்பானது. மேலும் இவ்வீட்டிற்குரிய கிரகம் நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

பணம் பல வழிகளிலும் வந்து சேர, தனகாரகன் எனப்படும் குருவின் நிலையையும், சுபிட்சத்தை கொடுக்கும் சுக்கிரனையும், அவருடைய வீடுகளாகிய ரிஷபம், துலாம் இரண்டையும் கவனிக்க வேண்டும். இவர்களோடு சேர்த்து சம்பாத்திய காரகனாகிய சூரியனையும், அவரது வீடான சிம்மத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது முதலிய கிரகங்கள் இரண்டாமிடத்தில் இருந்தால் பொருள் சேர்க்கையில் தடை ஏற்படும் அல்லது வருவது நிலைக்காமல் போகலாம். சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்றால் பணம் நல்ல முறையில் வந்து சேரும். கடினமான நேரத்திலும் திடீரென ஏதாவது வழியில் பணம் பாக்கெட்டை நிரப்பிவிடும்.

சரி... இரண்டாமிட அதிபதி ஒரு தீய கிரகம் என வைத்துகொள்வோம். அப்பொழுது எப்படி பலன்கள் நிகழும்?

இதை ஒரு உதாரணத்துடன் கூறினால் உங்களுக்கு விளங்கிவிடும். நீங்கள் துலாம் லக்கினத்தில் பிறந்தவர் என வைத்துக்கொள்வோம். இப்பொழுது இரண்டாம் இடமாக விருச்சிகம் வரும். இதன் அதிபதி செவ்வாய் ஒரு தீய கிரகம். இவரே இரண்டாமிடத்தில் ஆட்சியாக இருந்தால் நீங்கள் செல்வ நிலையில் கொடிகட்டி பறப்பீர்கள்.

இரண்டாமிடம் தீய கிரகத்தின் வீடாக இருந்து, அக்கிரகமே அவ்வீட்டில் இருந்தால், மைனஸ் ப்ளஸ்ஸாக மாறி ஆகா ஓஹோவென யோகத்தை கொடுத்துவிடும். இந்த சிறிய நுணுக்கத்தை புரிந்துகொண்டால் பலன்களை நிர்ணயிப்பது எளிது.

தனஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்றால், பெரும் பணக்காரராக நிச்சயம் இருப்பார். அதே சமயம் அவ்வீட்டிற்கு ஆறாமிடமாகிய களத்திர ஸ்தானம் பாதிக்கப்படும். எந்த ஒரு கிரகம் உச்சம் பெற்றாலும் அவ்வீட்டிற்கு ஆறாமிடம் பாதிப்படையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இரண்டாம் வீட்டில் நீச்சம் பெற்ற கிரகம் (பலம் இழந்த நிலை) இருந்தால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் அம்மனிதர் இருப்பார். மற்ற கிரக அமைப்புகளின்படி நிதி நிலை நன்றாக இருந்தாலும், விதி அவர்களை விட்டுவைக்காது. அக்கிரகத்தின் தசா புக்திகளின் பொழுது பெரிய பணச்சரிவை அவர் சந்திக்க நேரிடும்.

ஒரு ஜாதகத்தில் யோகம் தரும் அமைப்பில் ராகு இருந்தால், அம்மனிதரை உச்சத்தில் கொண்டுபோய் உட்கார வைத்துவிடுவார். அவருடைய தசா புக்திகள் நடக்கும் வேளையில் அம்மனிதரின் காட்டில் பண மழைக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் அது நேர் வழியில் வந்த பணமாக இருக்காது. குறுக்கு வழியிலும் நேர்மையற்ற முறையிலும் வந்ததாகவே இருக்கும். அடுத்து வரும் சனி தசையில் இதற்கான தண்டனையை அளவு குறையாமல் அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்.

கிரகங்கள் கொடுக்கும் நேரத்தில் பணத்தை சேமித்தால், கடினமான கிரக நிலைகள் நடைபெறும் வேளையில் காசிற்காக கையை பிசையும் நிலை வரவே வராது.

#Saravanakumar #Jothidam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment