/indian-express-tamil/media/media_files/2025/08/22/moon-phases-really-affect-your-blood-sugar-levels-2025-08-22-19-57-11.jpg)
Can the moon’s phases really affect your blood sugar levels? An expert explains
நிலவு முழுமையாக ஒளிவீசும் பெளர்ணமி நாள்களில் தூக்கமின்மை ஏற்படுவது, மனநிலையில் மாற்றங்கள் வருவது போன்ற சில அனுபவங்களை பலர் உணர்ந்திருக்கக்கூடும். நிலவின் இந்த சுழற்சி நமது உடலியல் செயல்பாடுகளிலும், குறிப்பாக ரத்த சர்க்கரை அளவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.
நமது உடலின் ரத்த குளுக்கோஸ் அளவு, தினசரி சுழற்சியான சர்க்காடியன் ரிதம் (circadian rhythm) எனும் உயிரியல் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், நிலவின் நிலைகளுக்கும் ரத்த சர்க்கரைக்கும் தொடர்பு உண்டா என்பது இதுவரை முழுமையாக ஆராயப்படாத ஒரு விஷயம். ஒரு சிலரின் தனிப்பட்ட அனுபவங்கள், நிலவின் சுழற்சியின்போது ஆற்றல் மட்டங்கள், பசி உணர்வு போன்ற விஷயங்களில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாகச் சொல்கின்றன. ஆனால், இவை வெறும் தற்செயல்கள்தானா அல்லது ஒரு உயிரியல் தொடர்பு உள்ளதா?
இது குறித்து, சர்க்கரை நோய் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான கனிக்கா மல்ஹோத்ரா கூறியதாவது:
"பௌர்ணமி அல்லது அமாவாசை போன்ற நிலவின் சுழற்சி மனிதனின் ரத்த சர்க்கரை அளவை நேரடியாகப் பாதிக்கிறது என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. பல கலாச்சார நம்பிக்கைகள் நிலவுக்கும் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால், பெரிய அளவிலான ஆராய்ச்சிகள், நிலவின் சுழற்சிக்கும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும் இடையே தெளிவான தொடர்பைக் காட்டவில்லை. ரத்த சர்க்கரை அளவு முக்கியமாக உணவு, உடல் செயல்பாடு, மன அழுத்தம், மருந்துகள் மற்றும் ஹார்மோன்களால் பாதிக்கப்படுகிறது.
நீங்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்றால், நிலவின் தாக்கங்களை நம்புவதற்கு பதிலாக, இந்த காரணிகளை கவனிப்பது முக்கியம். பெரும்பாலான மக்களுக்கு, நிலவின் சுழற்சியை கவனிப்பதை விட, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது," என்று அவர் மேலும் கூறினார்.
நிலவின் சுழற்சி ரத்த சர்க்கரை அளவை பாதிக்க முடியுமா?
சர்க்காடியன் ரிதம் எனப்படும் நம் உடல் கடிகாரம், இன்சுலின் உட்பட ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. தூக்கமின்மை அல்லது முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சர்க்காடியன் ரிதம் பாதிக்கப்படும்போது ரத்த சர்க்கரை அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என மல்ஹோத்ரா கூறுகிறார்.
நிலவு சிலரின் தூக்கத்தைப் பாதிக்கலாம் என்றாலும், நிலவின் சுழற்சிக்கும் ரத்த சர்க்கரை அளவிற்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டா?
நிலவின் சுழற்சி ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்குமானால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என மல்ஹோத்ரா நம்புகிறார். ஏனெனில், அவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஏற்கனவே சமரசம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய அறிவியல் ஆய்வுகள், நிலவின் சுழற்சியின் போது சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் ரத்த சர்க்கரை அளவில் தெளிவான வித்தியாசத்தைக் காட்டவில்லை.
எனவே, சர்க்கரை நோய் மேலாண்மைக்கு, மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது, குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது போன்ற அறிவியல் பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதே மிகவும் சிறந்தது என்று மல்ஹோத்ரா கூறுகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.