கி.பி.8-ம் நூற்றாண்டு மூத்த தேவி சிற்பம்: விழுப்புரத்தில் கண்டெடுப்பு

சிற்பத்தின் அமைப்பை காணும் போது இதன் காலம் கி.பி.8-9 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி தெரிவித்தார்.

சிற்பத்தின் அமைப்பை காணும் போது இதன் காலம் கி.பி.8-9 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Mootha Devi 8th century idol found in Viluppuram Tamil News

மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் இறுதி பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கால சிற்பக்கலை பாணியில் உள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி தலைமையில் அதன் அமைப்பினர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பம் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரில் பழமையான சிற்பம் ஒன்று உள்ளதாக  ஊர்த் தலைவர் மணி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள அரச மரத்தின் கீழ் மூத்த தேவி எனப்படும் தவ்வை சிற்பம் இருப்பதைக் கண்டு அதனை ஆய்வு செய்தனர்.

Advertisment

சுமார் 3 அடி உயரமும்  2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள மூத்த தேவியின் தலை கரண்ட மகுடத்துடன் காதில் மகர குண்டலம் அணிந்து காணப்பட்டது. கழுத்து ஆபரணங்களுடன்,தோல் வளைவிகளும் கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும், மார்புக்கு கீழே சன்ன வீரம் அணிந்து, வலது கையில் தாமரை மொட்டும்  இடது கை திண்டின் மீது வைத்தபடி இருந்தது. மேலும், இரண்டு கால்களையும் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையில் இந்த  தவ்வை காட்சியளிக்கிறது. வலது புறம் மகன் மாந்தனும் அவரது கையில் சிதைந்த நிலையில் துடைப்பமும் இடது புறம் மகள் மாந்தியும் அவரது கையில் காக்கை கொடியை ஏந்தியவாறு இருவரும் சுகாசன கோலத்தில் அமர்ந்தவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் இறுதி பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கால சிற்பக்கலை பாணியில் உள்ளது. சிற்பத்தின் அமைப்பை காணும் போது இதன் காலம் கி.பி.8-9 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான தமிழ் இனத்தின் தாய் தெய்வ வழிபாட்டில் மூத்த தேவி எனப்படும் இந்த தவ்வை பொதுவாக  வேளாண்மை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக வழிபட்டதாக சங்க இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள மூத்த தேவி சிற்பம் இந்த பகுதியில் காணப்படுவது சிறப்பானது என மணியன் கலியமூர்த்தி கூறினார். இந்த மேற்பரப்பு கள ஆய்வின்போது தந்திராயன்குப்பம் ஊரைச் சேர்ந்த தரணி, ரமேஷ், முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம். 

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: