”உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை. அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை!
உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை.”
இப்படி ஏராளமான அன்னையர் தின வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் உங்களுக்கும் வரத் தொடங்கியிருக்கலாம்.
சில நாடுகள் வெவ்வேறு தேதிகளில் இந்நாளைக் கொண்டாடினாலும், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதில், அமெரிக்க அன்னையர் தினம் பிரபலமாகிவிட்ட நிலையில், மற்ற நாடுகள் இந்த நாளை எவ்வாறு அனுசரிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் அன்னையர் தினம்

அமெரிக்காவில் அன்னையர் தினம் ஒரு குறிப்பிடத்தக்க பெண்ணின் அயராத முயற்சிக்கு கடமைப்பட்டுள்ளது: அன்னா ஜார்விஸ். 1854 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது பிறந்த அன்னா, தட்டம்மை, டைபாய்டு மற்றும் தொண்டை அழற்சி நோய் போன்ற நோய்களால் பல உடன்பிறப்புகள் இழந்ததைக் கண்டார்.
இந்த சம்பவங்களால் தாக்கப்பட்ட அவரது தாயார், ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் தாய்மார்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அமைதியை மேம்படுத்தவும், குழந்தை இறப்பைத் தடுக்க உதவும் சுகாதார நடைமுறைகளை கற்பிக்கவும் உள்நாட்டுப் போரின் இரு தரப்பிலிருந்தும் தாய்மார்கள் குழுவை உருவாக்கினார்.
1905இல் அன்னாவின் தாய் இறந்துவிட்டார். தன்னுடைய அன்னையின் நினைவாக 1908ஆம் ஆண்டு மே மாதத்தில், அவரது சொந்த ஊரான கிராஃப்டனிலும் பிலடெல்பியாவிலும் பெண்களைத் திரட்டி முதன் முதலாக அன்னையர் தினத்தை அன்னா கொண்டாடினார்.
மேலும் தாய்மார்களைக் கொண்டாடும் ஒரு நாளுக்காக அவர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தேவாலயத் தலைவர்களுக்கு அயராது கடிதங்கள் எழுதினார்.
அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகவும், மேலும் அன்றைய சின்னமாக தனது தாய்க்கு விருப்பமான வெள்ளை கார்னேஷன் பூக்ககளைத் தேர்ந்தெடுத்தார்.
இது தொடர்பாக அன்னா முன்னெடுத்துச் சென்ற போராட்டங்களுக்கு இறுதியாகப் பலன் கிடைத்தது. ஆம், அமெரிக்காவின் 28வது அதிபராகப் பொறுப்பு வகித்த தாமஸ் உட்ரோ வில்சன் அன்னாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதற்கான பிரகடனத்தில் 1940ம் ஆண்டு மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரிட்டன்

பிரிட்டனில் அன்னையர் ஞாயிறு பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் இது நவீன அன்னையர் தினத்தை விட பழமையானதாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு நாள் தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அன்னையர் ஞாயிறு அன்று, மக்கள் தங்கள் “தாய் தேவாலயத்திற்கு” அல்லது அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற தேவாலயத்திற்குச் சென்றனர். கூடுதலாக, தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியே வேலை செய்பவர்களுக்கு, இது அவர்களின் தாய்மார்களைப் பார்க்க ஒரு வாய்ப்பாக இருந்தது.
கான்ஸ்டன்ஸ் அடிலெய்ட் ஸ்மித், இங்கிலாந்தில் அன்னையர் ஞாயிறு புதுப்பிக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார். 1913 ஆம் ஆண்டில், அவர் அன்னா ஜார்விஸின் அன்னையர் தினத்தைக் கண்டார், மேலும் அமெரிக்க விடுமுறையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இங்கிலாந்து அதன் சொந்த பாரம்பரியத்தை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்பினார்.
கான்ஸ்டன்ஸ், அன்னையர் ஞாயிறு முக்கியத்துவத்தை விளக்க புத்தகங்கள், நாடகங்கள், கவிதைகளை எழுதினார். மேலும் சிம்னல் கேக்குகள் மற்றும் வேஃபர் கேக்குகள் போன்ற பாரம்பரிய உணவுகளை வழங்குவதை ஊக்குவித்தார். 1938 வாக்கில், பிரிட்டன் மற்றும் அதன் பேரரசு முழுவதும் உள்ள ஒவ்வொரு திருச்சபையிலும் அன்னையர் ஞாயிறு கொண்டாடப்பட்டது.
மற்ற நாடுகளில் அன்னையர் தினம்
ரஷ்யாவிலும் அருகிலுள்ள நாடுகளிலும் அன்னையர் தினம் சர்வதேச மகளிர் தினத்துடன் ஒத்துப்போகிறது, இது பெண்களின் உரிமை இயக்கங்களில் வேரூன்றியுள்ளது. தாய்லாந்து, ராணி அன்னை சிரிகிட்டின் பிறந்தநாளான ஆகஸ்ட் 12 அன்று இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறது.
அதே நேரத்தில் எத்தியோப்பியாவில், தாய்மையின் கொண்டாட்டமான ஆன்ட்ரோஷ்ட் தினத்தில் குடும்பங்கள் இலையுதிர் காலத்தில் கூடிவருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”