மோட்டார் சைக்கிள் டைரி

காஷ்மீர் லே லடாகிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அனுபவத்தை, மோட்டார் சைக்கிள் டைரி தலைப்பில் சுவராஸ்யமாக தருகிறார், சங்கர்.

By: Updated: July 24, 2017, 12:22:08 PM

சங்கர்

உலகப் புரட்சியாளர் சே குவாரா எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் பெயர் மோட்டார் சைக்கிள் டைரிகள். 1952ம் ஆண்டு, அர்ஜென்டினாவிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கிளம்பிய சே குவாரா, தென் அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சுற்றிப் பார்த்தார். அவர் சென்ற நாடுகளில் சந்தித்த மக்கள் மற்றும் சூழ்நிலைகளே பின்னாளில் அவரை ஒரு மிகப்பெரும் புரட்சியாளராக உருவாக்கியது. இதுவும் மோட்டார் சைக்கிள் பயணம் பற்றிய கட்டுரை என்பதால், அவரிடம் இருந்து அந்த தலைப்பை கடன் வாங்கிக் கொள்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் “வயதான நபரிடம் வழி கேட்காதீர்கள்” (Don’t ask any old bloke for directions) என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தின் ஆசிரியர் பிஜி.டென்சிங். அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. சிக்கிம் மாநிலத்தை சொந்த ஊராக கொண்டவர், கேரளா கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 22 வயதில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அவர், 20 ஆண்டுகள் பணியை முடித்து விட்டு விருப்ப ஓய்வில் பணியிலிருந்து வெளியே வந்தார்.

ஐஏஎஸ் பணியிலிருந்து வெளியேறியதும் அவர் செய்த காரியம், 350 சிசி என்ஃபீல்ட் தன்டர்பேர்ட் பைக் ஒன்றை வாங்கி, இந்தியா முழுவதும் பைக்கில் தன்னந்தனியாக சுற்றுப்பயணம் செய்ததே. 9 மாதங்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்தார் டென்சிங். அவரது பயண அனுபவங்களே அந்த புத்தகம். ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ஒரு நபர் பல்வேறு பலன்களையும், சொகுசுகளையும் தரும் அந்த பணியை விட்டு விட்டு 25 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக சுற்றத் தூண்டியது எது என்ற வியப்பு இன்று வரை அடங்கேவேயில்லை. எதற்காக பணியை ராஜினாமா செய்தீர்கள் என்ற கேள்விக்கு டென்சிங், “என் உயர் அதிகாரிகளுக்கு சார், சார் என்று சலாம் போட்டது போதும் என்று முடிவெடுத்தேன். என் மனது சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ராஜினாமா செய்தேன்” என்று கூறினார். அவரது புத்தகம் வெளியான ஒரு வருடத்திலேயே புற்றுநோய் காரணமாக டென்சிங் உயிரிழந்தார்.

அந்தப் புத்தகத்தை படித்தது முதலாகவே இது போல பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. புதிய புதிய அனுபவங்கள், புதிய சவால்கள் ஆகியற்றை தேடும் மனிதனின் தோற்றம், மனிதகுலம் தோன்றியது முதலாகவே தணியாமல்தான் இருந்து வருகிறது. மனிதனுக்கு இந்த தேடல் உணர்வு இல்லாமல் போயிருந்தால் உலகத்தின் பல பாகங்கள் கண்டுபிடிக்கப் படாமலேயே போயிருக்கும். மனிதன் நிலவில் கால் பதித்திருக்க மாட்டான். ஆழ் கடல் ரகசியங்களை அறிந்திருக்க மாட்டான். புதிய கண்டுபிடிப்புகளை தேடியிருக்க மாட்டான். அவனின் தணியாத தேடல் மட்டுமே மனிதனின் வாழ்வை சுவராஸ்யமானதாக்கி அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

உலகம் முழுக்க பைக் ஓட்டுபவர்களின் கனவாக லே-லடாக் பகுதியின் இமயமலை இருந்து வருகிறது. உலகின் உயரமான வாகனத்தில் செல்லக் கூடிய சாலை அந்தப் பகுதியில் இருப்பதால், அந்த இடத்துக்கு தேடிச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு பைக் ஓட்டுனரின் கனவாகவே இருக்கும். ஆனால் அனைவருக்கும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் அமைவதில்லை. வாய்ப்புகள் தானாக ஒரு போதும் அமையாது. நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்கள் இது போன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறியபோது இது நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் இருந்தே வந்தது. லே லடாக் பைக் பயணத்துக்கு தனியாகவும் செல்லலாம். ஆனால் ட்ராவல் நிறுவனங்கள் மூலமாக செல்வதில் ஒரு வசதி இருக்கிறது. பைக்குகளை அவர்களே தருவார்கள். நமது லக்கேஜ்கள் அனைத்தையும் ஏற்றிச் செல்ல தனியாக ஒரு வாகனம் வரும். செல்லும் வழியில் உடல்நிலை சரியில்லை என்றாலோ, அல்லது பைக் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டாலோ, நாம் பின்னால் வரும் வாகனத்தில் ஏறிக் கொள்ளலாம். பைக்கை அவர்கள் ஓட்டி வருவார்கள்.

இது போல பைக் ட்ரிப் ஏற்பாடு செய்வதற்கென்று பல்வேறு ட்ராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்ததாக ஒன்றை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் அவர்களது இணையதளத்தில் பயணம் மற்றும் கடந்தகால அனுபவங்கள் குறித்து அவர்கள் விரிவாக பதிவு செய்திருப்பார்கள். என்னதான் பதிவு செய்தாலும், நடைமுறையில் சில பல சிக்கல்கள் எழத்தான் செய்யும். அதையெல்லாம் நாம் சமாளித்து முன்னேறுவதற்கு நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு 2 லட்சம் வாங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. ஒரு நபருக்கு 20 ஆயிரம் வாங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. நாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்றபடி வசதிகள் இருக்கும். 2 லட்ச ரூபாய் செலுத்தினால் சொகுசு ஹோட்டலில் தங்க வைப்பார்கள். 45 ஆயிரம் என்றால் அதற்கு ஏற்றபடி தங்கும் இடமும் வசதிகளும் அமையும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள பலர் வருகிறார்கள். அவர்கள் தேவைக்கென்றே ஏராளமான பைக் ட்ராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. அது போன்ற ஒரு நிறுவனத்தை நண்பர்கள் தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தியிருந்தார்கள்.

மொத்தம் தமிழ் ஆட்கள் 10 பேர் செல்வதாக திட்டம். தனியாக செல்வதென்றால் ஒரு நபருக்கு 45 ஆயிரம் ரூபாய். பின்னால் பைக்கில் அமர்ந்து வருபவர் உண்டென்றால் ஒரு நபருக்கு 38 ஆயிரம் ரூபாய். பாதிப் பணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்திய பிறகு, பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் பாதி தொகையை அபாண்டமாக பிடித்துக் கொள்கிறார்கள்.

இறுதி நேரத்தில் இருவர் வர இயலாது என்று கூறி விட்டனர். அதனால் அவர்களுக்கு கட்டிய முன்பணத்தில் பாதி போய் விட்டது. நாங்கள் மொத்தம் எட்டு பேர். பெங்களுரில் இருந்து மென்பொறியாளர் தம்பதியுடன் டெல்லிக்கு செல்வது மீதம் உள்ளவர்கள் சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்து அனைவரும் டெல்லியில் சந்திப்பது என்று ஏற்பாடு. என்னையும் ஒரு குழந்தைகள் நல மருத்துவரையும் தவிர மீதம் உள்ள அனைவரும் மென் பொறியாளர்கள். விமான டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவு செய்து முடித்தாகி விட்டது.

பயணத்துக்கு தேவையான பல பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. சென்னை மற்றும் பெங்களுரில் இருந்த டெக்கத்லான் மற்றும் இதர கடைகளில் தேவையான கோட்டுகள், கை உறைகள், காலணிகள், காலுறைகள் போன்றவற்றை வாங்கி முடித்தும், இறுதி நேரத்தில் சில பொருட்கள் வாங்கப்பட வேண்டியதாக இருந்தது. பெங்களுரில் வாங்கிக் கொள்ளலாம் என்று நண்பர் வீட்டுக்கு முதல் நாளே சென்று தங்கினேன்.

முதல் நாள் இரவு, நண்பர் மேலும் சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கடைக்கு அழைத்தபோதுதான் எனது பர்ஸ் தொலைந்த விபரம் தெரிய வந்தது. பர்ஸில்தான் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பணம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தன. வீட்டில் பல இடங்களிலும் தேடி பர்ஸ் இருப்பதற்கான தடயமே இல்லை. அடையாள அட்டை, ஆவணங்கள் இல்லாமல், விமான நிலையத்துக்குள் கூட செல்ல முடியாது. ஏடிஎம் கார்டுகள், பணம் அனைத்தும் போய் விட்டது.

வேறு வழியே இல்லாமல், பயணத்தை ரத்து செய்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன்.

பயணங்கள் தொடரும்…

படம் : ஏ.சுஜாதா

(கட்டுரையாளர் சங்கர், பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடிக்கடி பயணம் மேற்கொள்பவர். அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டவர். அரசியலில் நடக்கும் முறைகேடுகளை தனது பிளாக் மூலம் வெளி கொண்டு வந்தவர், வருபவர்.)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Motor cycle dairy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X