/tamil-ie/media/media_files/uploads/2017/07/part-4-1.jpg)
சங்கர்
இந்தியாவை தடுமாற வைத்த ஒரு திடீர் தாக்குதல்தான் பாகிஸ்தான் 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் தொடுத்த திடீர் போர். முதலில் சாதாரணமான தீவிரவாத ஊடுருவலாக பார்க்கப்பட்டது. பின்னர் முழு வேகப் போராக மாறியது. அப்போது கார்கில் பகுதியில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவப் படைகளுக்கு, ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், லே மலைப் பாதை வழியாக சென்று சேர்க்கும் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தது பார்டர் ரோட் ஆர்கனைசேஷன்தான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் மூடப்படும் லே மலைப் பாதை, அடுத்த ஆண்டு பனிப் பொழிவை பொறுத்து, மே இறுதி அல்லது ஜுன் தொடக்கத்தில்தான் திறக்கப்படும். போர் காரணமாக, இந்த சாலைகளில் இருந்த பனிப் பாறைகளை அகற்றி, ராணுவ வாகனங்கள் செல்லும் வகையில் இந்த பாதைகளை செப்பனிட்டு தந்தது, இந்தியா கார்கில் போரில் வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/4-2-300x200.jpg)
பார்டர் ரோட் ஆர்கனைசேஷனின் நகைச்சுவை உணர்வு முக்கியமாக குறிப்பிடத்தக்கது. மலைப்பாதைகளில் செல்லும் வழியெங்கும் எச்சரிக்கை மற்றும் அறிவுரை பலகைகளை வைத்திருப்பார்கள். "வளைவுகளை அனுபவியுங்கள். சோதிக்காதீர்கள்", "டார்லிங். உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால் இவ்வளவு வேகமாக அல்ல". இது போன்ற எச்சரிக்கை பலகைகளை வழியெங்கும் காண முடியும்.
இந்த நிறுவனம் மலைச் சாலைகள் திறந்திருக்கும் நான்கு மாதங்களும் இடைவிடாமல் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இந்த மலைப் பகுதிகளின் தட்பவெட்பம், மற்றும் தன்மை, மலைகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பணிகளை தொடர்ந்து நடைபெற வைக்கின்றன.
மணாலி அருகே இருந்த சோதனைச் சாவடியை கடந்து எங்கள் பயணம் தொடங்கியது. பாதைகள் கரடு முரடாக தென்படத் தொடங்கின. கற்களும் மேடு பள்ளங்களும் சர்வ சாதாரணமாக இருந்தன. ஒரு வழியாக வேகத்தை குறைத்தும் ஏற்றியும் ரோத்தங் பாஸ் என்ற இடத்தை வந்தடைந்தோம்.
ரோத்தங் பாஸ் என்ற இடம், மணாலியில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 13,050 அடி உயரத்தில் உள்ள ஒரு இடம். சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு முக்கிய ஸ்தலமாக கருதப்படுகிறது. பைக்கில் லே-லடாக் வரை செல்ல விரும்பாதவர்கள், மணாலியில் இருந்து கிளம்பி, ஒரு முறை ரோத்தங் பாஸ் என்ற இடத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் மணாலி சென்று விடுகின்றனர். இந்த இடம், இமாச்சல பிரதேசத்தின் குள்ளு பள்ளத்தாக்கு மற்றும் எழில் கொஞ்சும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு ஆகிய இடங்களை இணைக்கும் இடமாக இருக்கிறது.
அந்த இடத்தில் ஒருவர் பன்னும், பட்டாணி மசாலாவும் விற்றுக் கொண்டிருந்தார். அதை உண்டு விட்டு, சிறிது இளைப்பாறி, மீண்டும் பயணத்தை தொடங்கினோம். இந்த 53 கி.மீ. பயணத்துக்குள் அனைவருக்கும் மலைப்பாதையில் பயணிப்பது என்றால் என்ன என்பது புரிந்து விட்டது. ஆகையால் அடுத்து எதிர்கொள்ளவிருந்த பாதையை எளிதாக கடந்து விடலாம் என்றே நம்பி பயணத்தை அந்த இடத்திலிருந்து தொடங்கினோம்.
ஆனால் எங்கள் மதிப்பீடு எவ்வளவு தவறானது என்பதை அடுத்து எங்களை எதிர்கொண்ட பாதை நிரூபித்தது. அது வரை வந்த பாதை ஒன்றுமே இல்லை என்பதாக இருந்தது புதிய பாதை. ஏறக்குறைய சாலைகளே இல்லை. வெறும் கற்களும், மண் குவியல்களுமே சாலைகள் என்று இருந்தன. அந்த பாதையில் நாங்கள் செல்லும் பைக்குகள் மட்டுமல்லாமல், ராணுவ வாகனங்கள், பார்டர் ரோட் ஆர்கனைசேஷனின் வாகனங்கள், சரக்கு லாரிகள் என்று அனைத்தும் சென்றன.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/4-3-300x200.jpg)
மலைப்பாதைககளில் எங்கள் முன்னால் செல்லும் லாரி ஓட்டுனர்கள் அனைவரும் பைக்குகளுக்கு முன்னுரிமை அளித்தனர். ஒரே ஒரு முறை ஹார்ன் அடித்தால் போதும், உடனடியாக முந்துவதற்கு வழி விட்டனர். இந்தப் பாதையில் அடுத்து என்ன என்பது சற்றும் தெரியாத வகையில், பல்வேறு திருப்பங்கள் இருந்தன. பல திருப்பங்கள் மிகவும் நெருக்கடியானவை. குறுகலான திருப்பங்களில் செல்கையில் ஒலி எழுப்பியபடி, இடது ஓரமாக செல்வது மிகவும் அவசியம். சற்றே வலதுபுறம் ஏறினால், எதிரில் வாகனம் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம்.
நமக்கு முன்னால் பைக்கில் செல்பவர்கள், இத்தகைய திருப்பங்களில், வாகனம் வருகிறது என்பதை கைகளை அசைத்து சைககைகள் காட்டியபடியே சென்றனர். எங்களைப் போலவே எதிரில் பைக்குகளில் வருபவர்கள் தங்கள் கையை உயர்த்தி வெற்றிச் சின்னத்தை காட்டியபடி சென்றது நமக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். செல்லும் வழி நெடுக பைக்குகளில் இது போல வருபவர்களை காண முடியும். நம்மோடு பயணிப்பவர்களும் இருப்பார்கள், எதிரில் பயணம் முடித்து விட்டு வருபவர்களும் இருப்பார்கள். நாம் மட்டும்தான் பைக்கில் இப்படி வந்திருக்கிறோம் என்று நினைத்தால், நம்மைப் போல நூற்றுக்கணக்கானவர்கள், பைக்கில் பறந்து கொண்டிருப்பதை பார்க்கையில் நமக்கும் உற்சாகம் ஏற்படும்.
ரோத்தங் லா முதல் நீங்கள் பயணிக்கும் பாதைகள் நெடுக, உங்களோடு செனாம் நதி பயணித்துக் கொண்டே இருக்கும். செனாப் நதி, இமாச்சல பிரதேசத்தில் உருவாகி, பஞ்சாப் வழியாக பாகிஸ்தான் வரை செல்கிறது. அந்த சாலையில் பயணிக்கையில் செனாப் நதியை நாம் சில நேரங்களில் மலை உச்சியில் இருந்த பார்த்தபடியே பயணிப்போம். சில நேரங்களில் உங்கள் அருகாமையிலேயே தவழ்ந்தோடும். எங்கேயாவது நிறுத்தி அந்த நதியில் கால் வைக்க வேண்டும் என்று எனக்கு பல முறை ஆர்வம் தோன்றினாலும், எங்கள் குழுவினரின் பைக்குகள் எந்த இடத்திலும் நிறுத்தப்படாத காரணத்தால் அந்த வாய்ப்பு ஏற்படவேயில்லை.
நீங்கள் பயணிக்கையில் தட்பவெப்பம் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும். சில நேரத்தில் சுள்ளென்று வெயில் அடிக்கும். வியர்ப்பது போல இருக்கும். போட்டிருக்கும் ஜெர்க்கினை கழற்றி விடலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் வரும் நேரத்தில் அப்படியே பருவநிலை மாறும். குளிரடிக்கும். நல்ல குளிர் காற்று வீசும். சட்டென்று ஒரு இடத்தில் மேகத்தினுள் நுழைந்து பயணிப்பீர்கள். இதுதான் இந்த பயணத்தின் சிறப்பே. நீங்கள் காரிலோ, வேனிலோ பயணித்தால் இந்த பருவநிலை மாற்றத்தை அனுபவிக்க முடியாது. இந்த பருவநிலையையும், அருகில் ஓடும் நதியின் ரீங்கார ஓசை மற்றும் அதன் வடிவையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் சாலையின் மீது நமது கவனம் சற்று தவறக் கூடாது. நீங்கள் கவனிக்காத ஒரு சிறு கல் உங்கள் பைக்கை தூக்கியடிக்கக் கூடும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/part-4-3-300x200.jpg)
சிஸ்ஸு என்ற இடத்தில் மதிய உணவுக்காக நிறுத்தினோம். மதிய உணவு என்றதும், நீங்கள் வழக்கம்போல சாப்பிடும் உணவு என்று நினைத்து விடாதீர்கள். மணாலி - லே நெடுஞ்சாலை முழுக்க நீங்கள் பயணிக்கும் பாதையில் அமைந்திருக்கும் உணவகங்கள் அனைத்தும் தற்காலிகமாக, சுற்றுலாப் பயணிகளுக்காக நான்கு மாதத்துக்காக மட்டும் அமைக்கப்பட்ட உணவகங்கள். பெரிய டெண்டுகளில் அந்த உணவகங்கள் அமைந்திருக்கும்.
அந்த டெண்டுகளில் பெரும்பாலும் பெண்மணிகளே சமைத்து பரிமாறுகிறார்கள். அந்த உணவகங்களில், பிஸ்கட், சாக்லேட்டுகள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், போன்றவை கண்டிப்பாக கிடைக்கும். உண்பதற்கு அனைத்து உணவகங்களிலும் தவறாமல் கிடைப்பவை, மேகி நூடுல்ஸ். ஆம்லேட், ப்ரெட் ஆம்லேட். சில உணவகங்களில் அரிசி மற்றும் பருப்பு சமைத்திருப்பார்கள். சில உணவகங்களில் ரொட்டி கிடைக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் கிடைப்பது மேகி நூடுல்ஸ் மட்டுமே.
மேகி நூடுல்ஸ் கிடைப்பதற்கான காரணம் ஒன்று இருக்கிறது. வரும் பயணிகள் அனைவரும் குளிரில் வருவார்கள். அவர்கள் கேட்பது சூடான உணவு மட்டுமே. அரிசிச் சோறோ, ரொட்டியோ அவசரத்துக்கு தயாரித்து வழங்க இயலாது. உடனடியாக சுட சுட பரிமாறக் கூடிய உணவு நூடுல்ஸ் மட்டுமே. இதனால்தான் அனைத்து உணவகங்களிலும் நூடுல்ஸ் தவறாமல் கிடைக்கிறது. வழி நெடுக கிடைக்கும் நூடுல்ஸ் மேகி மட்டுமே. இன்னும் பாபா ராம்தேவின் பதஞ்சலி அந்தப் பகுதியில் கால் பதிக்கவில்லை. அனேகமாக அடுத்த ஆண்டு பதஞ்சலி கால் பதித்து, மேகி காணாமல் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அதன் பிறகு ஏற்கனவே வந்தது போன கரடு முரடான சாலைகளில் நான்கு மணி நேர பயணம். நடு நடுவே, பல இடங்களில் சாலைகளின் மீது சன்னமாக நீர் ஓடிக் கொண்டிருந்தது. அனைத்தையும் கடந்து ஜிஸ்பாவில் தங்குமிடத்தை வந்து சேர்ந்தோம்.
மணாலியில் சுடு நீர் வசதியோடு ஓரளவுக்கு வசதியான ஹோட்டலில் தங்கியிருந்தோம். பயணக் களைப்பு வேறு வேகமாக படுக்கையில் விழ வேண்டும் என்று உந்தியது. தங்குமிடத்தை வந்ததும் பயணக் களைப்பை விட அதிர்ச்சிதான் மேலிட்டது.
பயணம் தொடரும்...
படங்கள் : ஏ. சுஜாதா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.