சங்கர்
ஜிஸ்பாவிலிருந்து சர்ச்சுவை நோக்கிய பயணமும் கரடு முரடான சாலைகளிலேயே தொடங்கியது. ஒரு 30 கிலோ மீட்டருக்கு மிதமான வேகத்தில் பயணம் செய்தோம். ஏற்கனவே வந்தது போன்ற முரட்டு சாலைகள். பாறைகள். அனைத்தயும் கடந்து வந்தோம். சாலைகள் கரடு முரடாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாலை நெடுகவே நடுவில் ஒரு கோடு போல சிறு சிறு கற்கள் சீராக அடுக்கப்பட்டிருக்கும்.

மலைப்பாதை என்பதால், மலையிலிருந்து கற்கள் விழுந்து கொண்டே இருக்கும். பெரும் கற்கள் இருந்தால் பயணமே தடைபடும். தொடர்ந்து விழும் சிறு கற்களின் மீது கனரக வாகனங்கள் செல்வதால், அந்த கற்கள் பெரும் வாகனங்களின் இரு டயர்களுக்கு நடுவே சிக்கி, ஒரு நேர் கோடாக சாலையில் குவிந்து கிடக்கும். நாம் பைக்கில் பயணிக்கையில் அந்த கற்களின் மீது நமது வாகனம் செல்லாமல் கவனமாக பயணிக்க வேண்டும். சிறு கற்கள் கூட சறுக்கி விடும் வாய்ப்பு உள்ளது. சாதாரண சாலையாக இருந்தால், சறுக்கி விழுந்து காலில் சிராய்ப்போடு தப்பிக்கலாம். மலைப்பாதை ஆகையால், எலும்பு கூட மிஞ்சாது. இது போக, மலையிலிருந்து பனி உருகி, ஆங்காங்கே சிறு சிறு ஓடைகள் சாலை ஓரமாக பயணித்துக் கொண்டிருக்கும். பார்டர் ரோட் ஆர்கனைசேஷனின் பணியாளர்கள், ஜேசிபி இயந்திரம் மற்றும் மனிதர்களின் உதவியோடு, சாலையின் ஓரத்தில் ஓடைகளை மலைப் பாதை நெடுக ஏற்படுத்தியுள்ளனர். இதில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீர், சில நேரங்களில் சாலையின் மீதும் ஓடும். அப்போதெல்லாம், முன் ப்ரேக்கை பிடிக்காமல் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும்.
பைக் ஓட்டுகையில் மற்றொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் குழுவில் உள்ளவர்களே உங்களை முந்தி வேகமாக செல்லுவார்கள். அவர்களுக்கும் உங்களுக்குமான தூரம் அதிகரிக்கும். சில நேரம் கழித்து, அவர்கள் உங்கள் கண் பார்வையிலிருந்தே மறைவார்கள். அந்த நேரத்தில் நம்மை விட்டு போய் விடுவார்களே, அவர்களை பிடிக்க வேண்டுமே என்று துளியும் பதற்றமடையக் கூடாது. அந்த பாதையில் வேகமாக உங்களை விட்டு செல்லவே முடியாது. உங்களை முந்திச் செல்பவர்கள், சிறிது தூரத்தில் சாலையில் ஏற்பட்டிருக்கும் தடை காரணமாக நின்று கொண்டிருப்பார்கள். அல்லது உணவருந்தவோ, தேநீர் குடிக்கவோ காத்திருப்பார்கள். இதுவும் இல்லாவிட்டால் கூட, அது ஒற்றைச் சாலை. நீங்கள் எங்கும் வழிதவறிச் செல்ல வாய்ப்பே கிடையாது. ஆகையால் நிதானமாக அந்த மலைப்பாதையின் அழகை, ரசித்துக் கொண்டே செல்லுங்கள். அந்த பயணம்தான் சுகம். எழில் கொஞ்சும் அந்த பாதையும், ஆபத்து நிறைந்த அந்த ஏற்ற இறக்கங்களும், உங்களை கவர்ந்திழுக்கும் இமயமலையும்தான் அந்த பயணத்தின் சிறப்பு. வேகம் அல்ல.
கரடு முரடான பாதைகளில் பயணித்துக் கொண்டே சென்றோம். ஒரு இடத்தில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. நாங்களும் சென்று அந்த வாகனங்கள் பின்னே காத்திருந்தோம். வாகனங்கள் செல்ல தாமதமாகும் என்று தெரிந்ததால் வண்டியிலிருந்து கீழே இறங்கி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நடந்து சென்று முன்னே சென்றால், மலைத்துப் போய் நின்றோம். இடது புறம் இருந்த மலையிலிருந்து பனி உருகி அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. அந்த அருவி வழிந்து சாலை மீது ஓடிக் கொண்டிருந்தது. முழங்கால் அளவு தண்ணீர் இருக்கும். அதில் பைக்கில் கடந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களே சிரமப்பட்டு கடந்து சென்றதை பார்த்தோம். நாங்கள் பைக்கில் எப்படி செல்வது என்று மலைப்பாக இருந்தது.

எங்களது ரோட் கேப்டன் அந்த ஓடையை எங்கள் முன்பாகவே கடந்து அடுத்த கரைக்கு சென்றார். தடுமாறித்தான் கரையேறினார். தண்ணீர் முழங்கால் அளவுக்கு இருந்தாலும் தண்ணீருக்கு கீழே சரளைக் கற்கள் சிறிதும் பெரிதுமாக நிறைந்து இருந்தன. ஒரு கல் பைக்கின் பின் வீலிலோ, முன் வீலிலோ மாட்டினால் தடுமாறி சாய வேண்டியதுதான். எங்கள் குழுவில் இல்லாமல் தனியாக வந்திருந்தவர்களுக்கு இதற்கு முன்னால் இது போன்ற ஓடைகளை கடந்த அனுபவம் இருந்திருக்கும் போலிருக்கிறது. கவலையே படாமல் எளிதாக கடந்தார்கள். அவர்கள் கடந்ததைப் பார்த்த பிறகும் எனக்கு அடி வயிறெல்லாம் கலக்கியது. ஏனென்றால், தண்ணீர் திடீரென்று அதிகமாகி நம்மை சாய்த்து விட்டதென்றால் அதள பாதாளத்தில் பைக்கோடு விழ வேண்டியதுதான்.
நேரம் வேறு ஆகிக் கொண்டே இருந்தது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். நாம் இந்த பைக் பயணத்துக்கு தயாராகுகையில் தேவையான பொருட்கள் என்று கூறப்பட்ட பொருட்களில் ஒன்று, முழங்கால் வரை இருக்கக் கூடிய ரப்பர் பூட்ஸ்கள். கம் பூட்ஸ் என்று இதை அழைக்கிறார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இது பைக் ஓட்டுவதற்கு ஏற்றதல்ல. கட்டிட வேலைகள் செய்பவர்கள் மற்றும் கடினமான தளங்களில் பணியாற்றுபவர்களுக்கானது இந்த கம் பூட்ஸ். இந்த பூட்ஸை அணிந்து கொண்டு, காலில் கியர் போடுவது கடினம்.
இதற்கு மாற்று வழி, காலில் போடும் ஷுவோடு சேர்த்து முழங்கால் வரை கவர் செய்யும் ரெயின் கோட் போன்ற கவர் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 3500 ரூபாய். ஒன்றிரண்டு இடங்களில் ஷு நனைந்து விடுமே என்பதற்காக இதை வாங்குவதா என்று எங்கள் குழுவில் ஒருவரும் வாங்காமல் தவிர்த்து விட்டோம். கம் பூட்ஸை எங்கள் ட்ராவல் குழுவினரே வாடகைக்கு கொடுத்தார்கள். ஆனால் இது எதற்கு தேவைப்படப் போகிறது என்று நாங்கள் யாரும் அதை வாங்கவில்லை. ஆனால் எங்கள் குழுவில் இருந்த வட இந்தியர்கள் அதை கவனமாக எடுத்து பைக்கில் கட்டி வந்திருந்தார்கள். ஓடையை கடக்கும் நேரத்தில் ஷுவை மாற்றி கம் பூட்ஸை போட்டுக் கொண்டு கால் நனையாமல் ஓடையை கடந்தார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களிடம் கம் பூட்ஸும் இல்லை. ஷுவும் நனைந்து விடுமோ என்ற அச்சம். எங்கள் குழுவினர் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஓடையை கடக்கத் தொடங்கினார்கள். ஏற்கனவே ஓடையை கடந்தவர்கள், அந்தக் கரையில் நின்று கொண்டு, பைக்கில் கடக்க இருப்பவர்களுக்கு தைரியம் கூறி உற்சாகப் படுத்தினார்கள். ஒவ்வொருவராக கடக்கத் தொடங்கினோம்.
இது போல ஓடைகளை கடக்கையில் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம். வண்டி முதல் கியரில் இருக்க வேண்டும். க்ளட்சில் கை இருக்க வேண்டும். ப்ரேக்கை தேவை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முன் ப்ரேக்கை தொடவே கூடாது. இதுதான் அடிப்படை. இந்த அடிப்படைகளையெல்லாம் தாண்டிய முக்கிய விஷயம், பயப்படக் கூடாது. ஆனால் சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. கடக்கும்போதுதான் தெரியும். பயம் நெஞ்சை அடைக்கும்.
எங்களில் சிலர் ஷு நனைந்தால் பரவாயில்லை என்று அப்படியே கடந்தார்கள். இன்னும் பல தூரம் குளிரில் கடக்க வேண்டும் என்பதால், எனக்கு ஷு நனையக் கூடாது என்ற கவலை. எங்கள் குழுவில் ஒருவர் ஓடையை கடக்கையில் பைக்கின் பின் வீலில் கல் மாட்டிக் கொண்டதால் தடுமாறினார். நல்ல வேளையாக பைக்கை அப்படியே விட்டு விட்டு, இறங்கி விட்டார். எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து பைக்கை தூக்கி தள்ளி விட்டு அவரை கரையேற்றினர்.
எனது முறை வந்தது. எனக்கு கடக்கையில் ஷு நனையாமல் கடக்க வேண்டும் என்ற கவலையால், ஷு மற்றும் சாக்ஸை அவிழ்த்து, பைக்கில் கட்டி விட்டு, தயாரானேன். பேன்ட்டை முழங்கால் வரை மடித்துக் கொண்டேன். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. உடலெங்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. எங்கள் ரோட் கேப்டன் அந்தக் கரையில் நின்று கொண்டு, ஓடையின் குறுக்கே ஒரு கோடு போல காற்றில் வரைந்து காட்டி, அதே கோட்டின் மீது வரச் சொன்னார்.
அந்த பதற்றம், பயம் அனைத்தையும் தாண்டி, கடந்து சென்றே ஆக வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு இறங்கினேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன். ரோட் கேப்டன் காட்டிய கோட்டின் படி நான் வரவில்லை. ஆனால் கீழே விழாமல் அடுத்த கரையை ஏறி, வண்டியை நிதானப்படுத்தி ஓரமாக நிறுத்தி வண்டியை ஸ்டேன்ட் போட்டபோது ஏற்பட்ட நிம்மதி இருக்கிறதே… !!!!!
சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம். மீண்டும் கிளம்பினோம். பெரிய ஒரு துன்பத்தை கடந்து விட்டோம் என்று நம்பியே பைக்கை ஓட்டத் தொடங்கினோம்.
ஆனால்….
பயணங்கள் தொடரும்.
படங்கள் : ஏ.சுஜாதா