மோட்டார் சைக்கிள் டைரிகள் - 5 - நதிக்கரையோரம்.

லே லடாக் மோட்டார் சைக்கிள் பயணத்தில், பாகா நதிக்கரையில் டெண்டில் தங்கியிருந்த அனுபவத்தையும், இது போன்ற பயணத்துக்கு தேவையான பொருட்களையும் விவரிக்கிறார்.

சங்கர்

ஜிஸ்பா இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. 10,500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் இது. 2001ம் ஆண்டு மக்கள் கணக்குத் தொகையின்படி, ஜிஸ்பா நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 332 மட்டுமே. இங்கே உள்ள கேம்ப்புகள் மற்றும் உணவகங்கள் உட்பட அனைத்து பெரும்பாலான இடங்களில் பணியாற்றுபவர்கள் அனைவருமே வெளியூரைச் சேர்ந்தவர்களே.

இரவு தங்குமிடங்கள் அனைத்தும் ஒரு ஹோட்டலில்தான் அமையும் என்று யாரையும் கேட்காமல் நாங்களாகவே முடிவு செய்து கொண்டோம். ஆனால், நாங்கள் சென்று தங்குவதற்காக நிறுத்திய இடம் ஒரு நதிக்கரை. பாகா என்ற நதியின் கரையில் அந்த இடம் அமைந்திருந்தது. அந்த இடத்தில் அமைந்திருந்த அனைத்தும் வெறும் டென்ட்டுகள். ஹோட்டல் அறையில் தங்கப் போகிறோம் என்று எதிர்ப்பார்த்திருந்த எங்களுக்கு டென்ட்டை பார்த்ததும் பெரும் ஏமாற்றம். டென்ட்டுக்குள் சென்று இந்த குளிரில் தரையில் எப்படி படுப்பது என்று எரிச்சலாகவும் பயமாகவும் இருந்தது. இருப்பினும், வாகனம் நிறுத்தப்பட்டதும் எங்கள் உடைகளை எடுத்துக் கொண்டு, எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த டென்டுக்குள் நுழைந்தால் இன்ப அதிர்ச்சி.

டென்ட்டுக்குள் இரண்டு நபர் படுக்கக் கூடிய கட்டில். அதன் மீது படுக்கைகள், போர்த்திக் கொள்ள இரண்டு கம்பளிகள், ஒரே ஒரு மின் விளக்கு. சார்ஜிங் செய்ய ஒரு ப்ளக் பாயின்ட் என்று இருந்தது.

டெண்ட் கொட்டகைக்குள் நாங்கள்

இந்த டென்ட்டுகளில் தங்குவதற்கு ஒரு டென்ட்டுக்கு 1500 முதல் 2500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். நாங்கள் மொத்த பயணத்துக்குமாக சேர்த்து ஒரு பேக்கேஜாக பணம் கட்டியிருந்ததால் நாங்கள் யாரும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்த பயணத்தில் நாம் மிகவும் கவனமாக எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு பொருள் என்னவென்றால் பவர் பேங்க். செல்போன் இல்லாத ஒருவரும் லே லடாக் பயணத்துக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. செல்போன்கள், கேமராக்கள், சார்ஜபிள் டார்ச்சுகள் உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் எடுத்து வருவார்கள். தங்குமிடங்களில் சார்ஜ் செய்வதற்கான வசதிகள் பெரும்பாலான நேரங்களில் கிடைக்காது. இது தவிரவும், குளிர் பிரதேசத்தில் சார்ஜ் வேகமாக இறங்கும். இதனால் பவர் பேங்குகளை இரண்டு அல்லது மூன்று எடுத்துச் செல்வது அவசியம். மேலும், தங்கும் ஒவ்வொருவரும் பல்வேறு கேட்ஜெட்டுகளை எடுத்து வருவார்கள். டென்ட்டில் இருக்கும் ஒரே ஒரு ப்ளக் பாயின்ட்டில் அனைவரும் சார்ஜ் செய்வது சாத்தியமல்ல. இதனால் ஒரு எக்ஸ்டெஷ்ன் பாக்ஸ் எடுத்து வந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

அந்த டென்ட் ஒரு நதிக்கரையின் அருகில் அமைந்திருந்தது என்று கூறியிருந்தேன். இதன் காரணமாக அந்த முகாம் அமைந்திருந்த இடத்துக்கு மின் வசதி கிடையாது. வெறும் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மட்டுமே. அந்த மின்சாரமும், மாலை 6 மணிக்கு இயக்கப்பட்டு இரவு 12 மணிக்கு நிறுத்தப்படும். இதன் காரணமாக, கேட்ஜெட்களை சார்ஜ் செய்வது விரைவாக செய்து முடிக்கப்பட வேண்டும். இதற்கு பின்பு தங்கிய டென்ட்டுகளிலும் இதே நிலைதான்.

அந்த டென்ட்லேயே அட்டாச்ட் டாய்லெட் பாத்ரூம் உருவாக்கியிருந்தார்கள். ஒரு வெஸ்டர்ன் டாய்லெட். குளிப்பதற்கு ஒரு பைப். வசதியான டென்ட்டுக்கள் நுழைந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. எங்கள் உடைமைகள் இருந்த வாகனத்தில் இருந்து பெட்டிகளை இறக்கி, அனைவரும் ஒரு ஒரு டென்ட்டுக்கு சென்றோம். நானும் குழந்தைகள் நல மருத்துவரும் ஒரு டென்ட். நாங்கள் டென்ட் வந்து சேர இரவு 7.30 ஆகியிருந்தது. ஆனால் சூரிய வெளிச்சம் சற்றும் மறையவில்லை. காலை 5 மணிக்கு சூரியன் உதித்தாலும், இரவு 8 மணி வரை சூரிய வெளிச்சம் இருப்பதை அங்கேதான் முதல் முறையாக அனுபவித்தோம். இரவு 8 மணி வரை நன்றாக வெளிச்சம் இருந்ததால், காலத்தை கடந்தது போல ஒரு உணர்வு இருந்தது.

டெண்ட் அமைந்துள்ள இடம்

டென்ட்டில் எங்கள் பொருட்களை இறக்கி வைத்த பிறகு, உடைகளை மாற்றிக் கொண்டு, அங்கே உணவு உண்பதற்காக உருவாக்கி வைத்திருந்த ஒரு பெரிய டென்ட்டில் தேநீர் வழங்கப்பட்டது. குளிர் தாங்க முடியாத அளவுக்கெல்லாம் இல்லை. சூடான தேநீர் மிகவும் இதமாக இருந்தது. ஒரு நாள் பயணம் முடித்த காரணத்தால், வட இந்தியாவில் இருந்து எங்களோடு பயணித்தவர்களோடு சற்று நெருக்கம் ஏற்பட்டது. தேநீர் அருந்துகையில் அவர்களோடு உரையாடினோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே நோக்கம், லே லடாக்குக்கு பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அன்று பைக்கில் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம்.

மனிதர்களிடையே எப்போதும் இருக்கும் குழு மனப்பான்மை என்ற குணத்தை தவிர்க்கவே முடியாது. வந்த முதல் நாள் முதலாகவே வட இந்தியர்களோடு எங்களால் நெருக்கம் பாராட்ட முடியவில்லை. மங்களுரிலிருந்து வந்திருந்த, துளு மற்றும் கன்னடம் பேசுபவர்களோடு எங்களுக்கு நெருக்கம் ஏற்பட்டது. உணவு மற்றும் சிற்றுண்டி அருந்துகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பேரும், மங்களுரைச் சேர்ந்த ஐந்து பேரும்தான் ஒரு குழுவாக இருந்தோம். மற்ற இந்தி பேசுபவர்களோடு நாங்கள் சரளமாக சிரித்துப் பேசினாலும் கூட, அவர்களோடு அதிக நெருக்கம் காட்ட ஏதோ ஒன்று தடுத்தது. இயல்பான மனித குணம்தானே அது ? ஒரு நாளில் மாறி விடுமா என்ன ?

இரவு குளிரில் உறக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. நன்றாக உறங்கினால்தான் மறுநாள் முழுவதும் பைக் ஓட்ட முடியும் என்பதால், சற்று நேரம் அரட்டை அடித்து விட்டு, இரவு உணவுக்கு விரைந்தோம். இரவு உணவு ரொட்டி, சப்ஜி மற்றும் பருப்பு கிடைத்தது. அரசி சோறும் வைத்திருந்தார்கள். இந்த பேக்கேஜில் நீங்கள் கட்டிய 45 ஆயிரத்துக்கு உங்களுக்கு இரவு உணவும், காலை உணவும் வழங்கப்படும். மதியம் எங்கே உணவு அருந்துவோம் என்பதை சரியாக நிர்ணயிக்க முடியாது என்பதாலும், தனித்தனி குழுவாக இருப்போம் என்பதாலும் மதிய உணவு நம் செலவு.

இரவு நன்றாக உறக்கம். காலையில் எழுந்ததும் கேம்புக்கு அருகில் சுழித்துக் கொண்டு ஓடும் பாகா நதியின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். நதி நளினத்தோடும் கோபத்தோடும் வேகமாக பெரும் இரைச்சலோடு ஓடியது. தண்ணீரில் கால் வைத்துப் பார்த்தால் ஐஸை விட குளிராக இருந்தது. தண்ணீர் கடுமையான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால், யாரும் குளித்துப் பார்க்கலாம் என்ற விபரீத முடிவுகளில் இறங்கவில்லை.

கேம்ப்பில் சூடாக டீ வழங்கினார்கள். எங்கள் குழுவோடே பயணித்த மெக்கானிக், அனைத்து வாகனங்களிலும், நட் போல்டுகளை சரி பார்த்தார். சிலர் பைக்கில் சில பிரச்சினைகளை கூறினர். அவற்றை சரி செய்தார். வாகனங்களை எடுத்து ஓட்டிப் பார்த்து பிரச்சினைகள் சரியாகி விட்டதா என்று கூறி, மீண்டும் சில ரிப்பேர்கள் செய்யப்பட்டன. காலை உணவு 8.30 மணிக்கு தயாராகும் என்று கூறப்பட்டது. 8.30 மணிக்கு ப்ரெட் டோஸ்ட் மற்றும் ஜாம் வழங்கப்பட்டது. வேண்டும் என்று கேட்போருக்கு முட்டை ஆம்லெட் வழங்கப்பட்டது.

பயணம் தொடங்குவதற்கு முன்னால் அறிவிப்பு செய்யப்பட்டது. இன்று மொத்த பயண தூரம் 85 கிலோ மீட்டர். நாம் சர்ச்சு என்ற இடத்தை அடையப் போகிறோம். பயணம் சற்றே கடினமாக இருக்கும் என்றனர். முதல் நாள் 130 கிலோ மீட்டர்களை கடினமான சாலையில் கடந்திருந்த எங்களுக்கு வெறும் 85 கிலோ மீட்டர் என்றதும் அட… இவ்வளவுதானா என்றிருந்தது. அந்தப் பயண தூரத்தை ஏன் அவ்வளவு குறைவாக வைத்திருக்கிறார்கள் என்பதை வெகு சீக்கிரமே புரிந்து கொண்டோம்.

பயணம் தொடரும்…

படங்கள் : ஏ.சுஜாதா

×Close
×Close