scorecardresearch

மோட்டார் சைக்கிள் டைரி – 8 : வாழ்வின் தேடல்.

மணாலி – லே லடாக் மோட்டார் சைக்கிள் பயணத்தில் போது என்ன கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்பதை விவரிக்கிறார், சங்கர்.

மோட்டார் சைக்கிள் டைரி – 8 : வாழ்வின் தேடல்.

சங்கர்

மறுநாள் அடுத்த பைக் பயணத்துக்கு அலுப்போடு தயாரானபோதே தகவல் வந்தது. அன்று பைக் கிடையாது என்று. எங்கள் அனைவருக்குமே அப்பாடா என்று இருந்தது. என்னதான் பைக் ஓட்டுவதில் ஆர்வம் இருந்தாலும், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கரடு முரடான சாலையில் பைக் ஓட்டியது சோர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்த உணர்வையெல்லாம் கணக்கில் கொண்டுதானோ என்னவோ, நடுவில் ஒரு நாள் பைக்குக்கு ஓய்வு கொடுத்திருந்தார்கள் ட்ராவல்ஸ் நிறுவனத்தினர்.

அன்று இரண்டு டெம்போ ட்ராவலர் வாகனத்தில் பேங்காங் லேக் என்ற ஒரு பெரும் ஏரியை பார்ப்பதற்காக சென்றோம். பேங்காங் லேக், லே நகரிலிருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. சாலைகளின் தன்மை காரணமாக, அந்த இடத்தை அடைவதற்கு ஆறு மணி நேரம் பிடிக்கும் என்றார்கள்.

எங்கள் டீம்

பேங்காங் ஏரிக்கு செல்லும் பாதை நாங்கள் இது வரை கடந்து வந்த பாதையை விட மிக மோசமாக இருந்து. அந்தப் பாதையிலும் ஏராளமானோர் பைக்கில் வந்தபடிதான் இருந்தனர். ஆனால் அவர்களெல்லாம் தனிப்பட்ட முறையில் பைக்கில் வருபவர்கள். ட்ராவல்ஸ் நிறுவனங்கள், பேங்காங் லேக்குக்கு பைக் பயணங்களை ஏற்பாடு செய்வதில்லை.

பேங்காங் லேக்குக்கு செல்லும் வழியில் சாங் லா என்றொரு இடம் இருந்தது. அந்த இடம் 17,590 அடி உயரத்தில் அமைந்திருந்தது. அந்த இடத்தில் இறங்கி அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மீண்டும் பயணம் தொடர்ந்தது. கடுமையான மேடு பள்ளங்களோடும் ஏற்ற இறக்கங்களோடும் பயணம் சவாலாகவே இருந்தது. கரடு முரடான சாலைகளில் பைக் ஓட்டி விட்டு, அந்த சாலையை வாகனத்தில் அமர்ந்து அனுபவிப்பதும் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.

பேங்காங் லேக்கை வந்து அடைந்ததுமே, அந்த ஏரி கண்களை கொள்ளை கொண்டது. மிக மிக விரிவான பரப்பளவில் இருந்தது. நீல நிறத்தில் தண்ணீர் இருந்தது. பேங்காங் லேக் மொத்தம் 604 சதுர கிலோ மீட்டர்களை கொண்டது. இந்தியா மட்டுமல்லாமல், சீனா மற்றும் திபெத்திலும் இந்த ஏரி பரந்து விரிந்திருக்கிறது. ஏரியின் பரப்பளவில் 60 சதவிகிதம் சீனாவில் இருக்கிறது. நீர் பார்ப்பதற்கு அத்தனை தெளிவாகவும் அழகாகவும் இருந்தாலும், அது முழுக்க உப்பு நீரால் நிறைந்தது.

நீல நிறத்தில் ஏரி

இமயமலையில் பனி உருகி வழிந்தோடும் நீரோடைகளில் எல்லாம், தண்ணீர் அமிர்தம் போல குடிக்க சுவையாக இருந்தாலும், இமயமலையின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரி உப்பு நீரால் நிறைந்துள்ளது இயற்கையின் வினோதங்களில் ஒன்று. கோடைக் காலம் முடிந்ததும் உப்பு நீரால் அமைந்த ஏரியாக இருந்தாலும், இது முழுக்க முழுக்க உறைந்து விடும்.

அமீர் கானின் 3 இடியட்ஸ் படத்தின் இறுதிக் காட்சிகள் அந்த ஏரியில் படமெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் போல, நாற்காலிகள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை அமைத்திருந்தார்கள். அதில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதற்கு 50 ரூபாய் கட்டணம். வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஆர்வத்தோடு அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஏரியை ஆசைத் தீர தரிசனம் செய்து விட்டு, அங்கே இருந்த உணவகங்களில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்.

மீண்டும் லே நகருக்கு ஆறு மணி நேர பயணம். மாலை 6 மணிக்கு வந்தடைந்தோம். இன்னமும் இருட்டாமல் இருந்ததால் சிலர் கிளம்பி ஷாப்பிங் சென்றார்கள். மறு நாள் காலையில் கிளம்புகையில், அந்த ஹோட்டலை நிர்வாகத்தினர் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வெள்ள நிறத்தில் லடாக்கி மொழியில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஒரு ஷாலை போர்த்தி மரியாதை செய்தார்கள். லடாக்கியர்களின் பாரம்பரிய பிரிவு உபச்சாரம் என்று கூறினார்கள். அந்த ஹோட்டலில் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தேன். லே நகரில், சொல்லிக் கொள்ளும்படி பெரிய கல்லூரிகள் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் டெல்லிக்கு சென்றே படிப்பை தொடர்கிறார்கள் என்றார். ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அங்கிருந்து இளைஞர்கள் லே நகரக்கு வந்து தஞ்சமடைந்தார்கள் என்றும், ஸ்ரீநகரில் இளைஞர்கள் நிம்மதியாக வாழ்வை நடத்துவது மிகவும் சிரமம் என்று தெரிவித்தார். கோடைக்காலம் நான்கு மாதங்கள் ஹோட்டலை திறந்து வைத்திருந்து விட்டு, குளிர்காலத்தில் அனைவரும் வீட்டில்தான் இருப்பார்கள் என்றார்.

பிரிவு உபச்சாரம்

அவரின் அன்பான பிரிவு உபச்சாரத்தை ஏற்றுக் கொண்டு லே நகரிலிருந்து மீண்டும் எங்கள் பழைய பைக்கில் கிளம்பினோம். அன்று இரவு சோ கார் லேக் என்ற மற்றொரு ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு, அதன் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த ஒரு கேம்ப்பில் தங்கினோம். பேங்காங் லேக்கைப் போல சோ கார் லேக் பெரிதாக பரவசப்படுத்தவில்லை. அதுவும் ஒரு உப்பு நீர் ஏரி. அன்று கேம்ப்பில் தங்கிய இடம்தான் இது வரை தங்கியதிலே அதிக குளிர் உள்ள இடம். 14,862 அடி உயரத்தில் அந்த ஏரி அமைந்துள்ளது. சூரியன் மறைய மறைய குளிர் தாங்க முடியாத அளவுக்கு சென்றது. எடுத்து வந்திருந்த தெர்மல் உள்ளாடைகளை அணிந்து கொண்டு, காலுக்கு உல்லன் சாக்ஸ் மற்றும் கையுறைகளை அணிந்த பின்பும் குளிர் வாட்டி எடுத்தது.

குளிர் காய்வதற்கு தண்ணீர் பாட்டில்கள் வந்த அட்டைகளை எரித்தோம். அது சிறிது நேரத்தில் தீர்ந்து விட்டது. பின்னர் கேம்ப்பில் பணியாற்றுபவர்கள், அந்தப் பகுதிகளில் விவசாயிகளால் பராமரிக்கப்படும் யாக் என்ற எருமையின் காய்ந்த சாணத்தை தந்தார்கள். அது சிறிது நேரம் எரிந்ததும், நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. அப்போதும் குளிர் தாங்க முடியாத வகையில் இருந்தது. விரைவாக இரவு உணவு உண்டு கம்பளியை போர்த்திக் கொண்டு படுக்கச் சென்றோம்.

மறுநாள் ஏற்கனவே நதிக்கரையோரம் தங்கியிருந்த ஜிஸ்பா நோக்கி பயணம். நாங்கள் இங்கே வருகையில் கடக்க சிரமப்பட்ட நீரோடைகளில் நீர் குறைந்து காணப்பட்டதால் சிரமம் இல்லாமல் எளிதாக கடந்தோம்.

ஜிஸ்பாவில் முகாமில் தங்கினோம். கடைசி இரவு என்பதால், ஜிஸ்பா கேம்ப்பில் அசைவ உணவோடு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு வரை, ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது. மறுநாள் ரோத்தங் பாஸ் வழியாக மணாலி அடைய திட்டம். பயண தூரம் வெறும் 138 கிலோ மீட்டர்கள் மற்றும், நாங்கள் ஏற்கனவே கடந்து வந்த பாதை என்பதால், சர்வ சாதாரணமாக கடக்கப் போகிறோம் என்று நினைத்தே பயணத்தை தொடங்கினோம்.

இமயமலை பயணத்தை நம்மால் எப்போதும் கணிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டதால் அனைவரும் ரெயின் கோட்டை அணிந்து கொண்டோம். ரோத்தாங் பாஸ் என்ற இடத்தை நெருங்க நெருங்க, கடுமையான பனி மூட்டம். இரண்டு அடி பக்கத்தில் நிற்கும் நபர் கூட தெரியாத அளவுக்கு கடுமையான பனி மூட்டம். வாகனங்கள் அனைத்தும் இரண்டு இண்டி-கேட்டர்களையும் போட்டபடி, 20 கிலோ மீட்டர் வேகத்தில் நத்தை போல நகர்ந்து கொண்டிருந்தன. இதன் நடுவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் மைல் கணக்குக்கு நின்று கொண்டிருந்தன. இமாச்சல பிரதேச காவல்துறையினர், பொறுமையாக வாகனங்களை நிறுத்தி நிறுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். மழை வேறு பெய்யத் தொடங்கியிருந்தது. மழை நீர் சாலைகளில் வழிந்து ஓடியதால் பயணம் இன்னும் கடினமாகியது.

தனியாக வலம் வரும் கிரண்

ஒரு வழியாக மணாலி வந்து சேர்ந்தபோது, அப்பாடா என்றே இருந்தது. நனைந்த ஷுக்களை கழற்றி வீச வேண்டும் என்று தோன்றியது. வந்து இறங்கிய சில மணி நேரங்களிலேயே டெல்லி செல்ல பேருந்து என்பதால், உடைமைகளை எடுத்து பேக் செய்தோம். பேருந்து எங்களை பத்திரமாக டெல்லியில் வந்து இறக்கியது. விமானத்தில் சென்னை வந்து இறங்கி அனைவரும் விடை பெற்றோம்.

சென்னைக்கு வந்து, மீண்டும் புல்லட்டை எடுத்து சென்னை சாலைகளில் பயணித்தபோது, மனது அந்த மேடு பள்ளங்களை நினைத்து ஏங்கியது என்னவோ உண்மை. அடுத்த ஆண்டு வராமலா போய் விடப் போகிறது ?

இந்தப் பயணக் கட்டுரைகளை படித்தவர்களில் சிலருக்கு இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ இந்த பைக் பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற ஆசை வரலாம். அப்படி செல்பவர்கள் என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கூறுகிறேன்.

முதலில் தேவை ஒரு நல்ல ஜெர்க்கின். மழையிலும் பாதுகாக்கும் வகையில் இருந்தால் சிறப்பு. பைக் ஓட்ட நல்ல கையுறைகள். இதுவும் தண்ணீர் புகாமல் இருத்தல் நல்லது. குறைந்தது 10 ஜோடி சாக்ஸ்கள். நீங்கள் செல்லும் இடம் எங்கேயும் துவைத்து காய வைக்க முடியாது. சாக்ஸ்களை தினமும் மாற்ற வேண்டியது அவசியம். தெர்மல் வேர் நிச்சயம் வேண்டும். பல இடங்களில் குளிர் தாங்க முடியாத வகையில் இருக்கும். சென்னையில் தெர்மல் வேர் விலை மிக அதிகம். டெல்லி அல்லது மணாலியில் வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல தரமான ஷு அவசியம். தண்ணீர் புகாமல் இருப்பது மிகவும் நல்லது.

நீங்கள் தங்கும் பல கேம்ப்புகளில் ஜெனரேட்டரை இயக்கித்தான் மின்சாரம் என்பதால் இரவு 11 மணிக்கு அதை அணைத்து விடுவார்கள். அதனால் ஒரு டார்ச் நல்லது. ஒரே நேரத்தில் பலவற்றை சார்ஜ் செய்யும் மல்டி ப்ளக் தேவைப்படும். வெந்நீர் வைத்துக் கொள்ள ஏற்ற வகையில் இரண்டு லிட்டர் பிடிக்கும் தெர்மோஸ் ப்ளாஸ்க் வேண்டும்.

அந்த குளிர் பிரதேசத்தில் உங்களால் தினமும் குளிக்க முடியாது. ஆகையால் போதுமான உள்ளாடைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் வித விதமான உடைகளை எடுத்துச் சென்றாலும், எப்போதும் அதன் மீது ஜெர்க்கின் மற்றும் ரெயின் பேன்ட் அணிந்திருப்பீர்கள். ஆகையால், விதவிதமான உடைகள் உங்கள் சுமையைத்தான் அதிகரிக்கும். இரண்டு அல்லது மூன்று செட் உடைகள் போதுமானவை.

ட்ராவல்ஸ் நிறுவனமே ஹெல்மெட்டை வழங்குவதால் இங்கேயிருந்து ஹெல்மெட்டை தூக்கிச் செல்ல வேண்டியதில்லை.

மிக முக்கியமான மற்றொரு பொருள், மாத்திரைகள். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகளுக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்ச்சு மற்றும் சோகார் லேக் போன்ற உயரமான பகுதிகளில் தங்கும்போது, காற்றில் பிராணவாயு குறைவால், மூச்சடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கெனவே இருக்கும் ஒரு மாத்திரை டையமாக்ஸ். இந்த மாத்திரையை கை வசம் வைத்திருந்து, தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள். எங்களோடு வந்தவர்களில் டையமாக்ஸ் பயன்படுத்தியவர்களும் இருந்தார்கள். பயன்படுத்தாதவர்களும் இருந்தார்கள். ஆனால் மாத்திரை கைவசம் இருப்பது அவசியம்.

ஸ்பனிஷ் தம்பதிகள்

குளிர் காரணமாக முகத்திலும், உதட்டிலும் வெடிப்பு ஏற்படும். இதற்கான கோல்ட் க்ரீம் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கோல்ட் க்ரீம் பயன்படுத்தினாலும் மூக்கின் நுனியில் வெடிப்புகள் ஏற்படும். உங்கள் நிறமே கருப்பாக மாறத் தொடங்கும். மூக்கை வேகமாக சிந்தினால், மெல்லிய ரத்தக் கசிவு ஏற்படும். இவையெல்லாம் குளிர் தன்மையால் ஏற்படக் கூடியவை. பயப்படால் இருந்தீர்கள் என்றால், எல்லாம் ஊர் திரும்பியதும் சரியாகி விடும்.

இந்த கடும் குளிரை சமாளிக்க ஒரே வழி, போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுதான். குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு லிட்டராவது தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரோடு சேர்த்து எலேக்ட்ரால் அல்லது க்ளுக்கோஸ் அருந்தினால், நல்லது.

இந்த பொருட்கள் அனைத்தையும் விட, இந்த பிரயாணத்துக்கு மிக மிக அவசியமானது, மனத் துணிவு. அது இருந்தால் எத்தகைய சிரமங்களையும் எளிதாக தாண்ட முடியும்.

இந்த பயணத்தின் உண்மையான கதாநாயகன் யார் தெரியுமா ? ராயல் என்ஃபீல்ட் புல்லட்தான். ராயல் என்ற அதன் பெயருக்கு ஏற்ப ராயலாக எங்களை வழிநடத்திச் சென்றது. கரடு முரடான சாலகள் என்றாலும், ஏற்ற இறக்கங்கள் என்றாலும், மேடு பள்ளங்கள் என்றாலும் சளைக்காமல் எங்களை ஒரு இடத்தில் கூட கைவிடாமல் அழைத்துச் சென்றது. நாங்கள் மணாலிக்கு பத்திரமாக திரும்பி வந்ததற்கு முக்கிய காரணம், இந்த ராயல் என்ஃபீல்ட் புல்லட்தான் என்றால் மிகையாகாது. சென்னை திரும்பியதும், அது வரை நான் அலட்சியமாக பார்த்து வந்த எனது சொந்த புல்லட் புதிய பரிமாணத்தில் எனக்கு தெரியத் தொடங்கியது என்றால் அது மிகையாகாது.

இந்த கட்டுரைத் தொடரை படித்தவர்களுக்கு ஒரு கேள்வி எழக் கூடும். இத்தனை சிரமப்பட்டு, நமது சொந்தப் பணத்தை செலவழித்து எதற்காக இப்படி ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதே.

சோ கார் லேக் அருகே தங்கியிருந்தபோது, ஒரு ஸ்பானிய தம்பதியினரை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் பைக்கில் வருகிறோம் என்றால் அவர்கள் சைக்கிளில் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தியா வந்து, சிம்லா முதல் லே வரை சைக்கிளில் பயணிக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கான டென்ட்டை அவர்களே கொண்டு வருகிறார்கள். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதாகவும், 2014ம் ஆண்டு கார்துங்லாவில் முழங்கல் அளவு பணியில் 4 கிலோ மீட்டர் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றதாகவும் கூறினார்.

சங்க்லா பாஸில் எங்கள் குழுவினர்

வரும் வழியில் ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது, ஒரு புல்லட் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நபர் ஹெல்மெட்டை கழற்றியதும் பார்த்தால் ஒரு பெண். அவர் தனியாக வந்திருந்தார். அவர் பெயர் கிரண். எங்கிருந்து வருகிறீர்கள் என்றதும், ஐதரபாத்திலிருந்து கிளம்பியதாகவும், கிளம்பி 15 நாட்கள் ஆகின்றன என்றும் கூறினார். எதற்காக இப்படி பயணிக்கிறீர்கள் என்றால், நான் ஒவ்வொரு ஆண்டும் இது போல நீண்ட பைக் பயணத்தை மேற்கொள்வதாகவும், கடந்த ஆண்டு கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை, தனியாக பைக் பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் முதலாளித்துவ பண்புகளை வளர்க்க பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்தை வைத்து நடத்துவதாக தெரிவித்தார்.

அந்த ஸ்பானிய தம்பதியினரையும், கிரணையும் இது போன்ற பயணத்தை மேற்கொள்ள வைத்தது எது ? புதிய அனுபவங்களுக்கான தேடல்தான். இந்த தேடல் நம்மை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு நம்மை புதுப்பிக்கிறது.

லே பைக் பயணம், எங்கள் குழுவில் இருந்த அனைவரையுமே புதுப்பித்து, தங்கள் மீதான் நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது என்பதை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புதிய பயணத்தை தொடங்குங்கள். வாழ்க்கைக்கு ஒரு புதிய வண்ணம் கிடைக்கும்.

இந்த பயணம் நிறைவு பெற்றது.

படங்கள் : ஏ.சுஜாதா

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Motorcycle dairy search of life

Best of Express