சங்கர்
நீரோடையை கடந்த படபடப்பு மெல்ல குறைந்தது. மீண்டும் பயணத்தை தொடங்கினோம். சாலையின் கடுமையான தன்மை பயண வேகத்தை வெகுவாக தாமதப்படுத்தியது. சில கிலோ மீட்டர்கள் கடந்ததும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நின்று கொண்டிருந்தன. என்னவென்று முன்னே நடந்த சென்று பார்த்தால், ஒரு பெரிய அருவியில் இருந்து சாலையின் மீது நீர் பாய்ந்து கொண்டிருந்தது. நீரோடையில் இருந்து வரும் நீரை ஜேசிபி இயந்திரம் மூலமாக ஒதுக்கி விடும் பணி நடந்து கொண்டிருந்தது. இதையும் கடக்க வேண்டுமா என்று பெரும் மலைப்பு ஏற்பட்டது. ஜேசிபி இயந்திரத்தின் பணி முடிந்ததும், நான்கு சக்கர வாகனங்கள் நீரோடையை கடக்கத் தொடங்கின. ஏற்கனவே இது போன்ற பயணத்துக்கு வந்த அனுபவம் உள்ள பைக் ஓட்டிகள் சர்வ சாதாரணமாக நீரோடையை கடந்தனர். எங்கள் அனைவருக்கும் பயம். ரோட் கேப்டன் துணிச்சல் கொடுத்தார். ஒவ்வொருவராக துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கடந்தோம். ஒரு சிலர் தடுமாறியபோது, அருகில் இருந்தவர்கள் உதவி செய்தனர்.
இது போல மேலும் இரண்டு ஓடைகளை கடக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக தட்டுத் தடுமாறி லே நகரை வந்தடைந்தோம். வருகையில் முழுமையாக இருட்டியிருந்தது. வெறும் 85 கிலோ மீட்டரை கடப்பதற்கு அத்தனை நேரம் ஆகியிருந்தது.
லே நகரில் கால் வைத்ததுமே பரவசமாக இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அழகு நிறைந்த மாநிலம் அது. லே நகரம், 45 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. இந்தியாவிலேயே கட்ச் நகருக்கு அடுத்தபடியாக பெரிய மாநிலம் லே தான். லே நகரம் 11,562 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா மட்டுமே இந்த மாவட்டத்தை வாழ வைக்கிறது. லே நகரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் என்ஃபீல்ட் புல்லட்டுகள்தான். மணாலியில் இருந்து தொடங்கும் பைக் பயணத்தைப் போல, லே விலிருந்து தொடங்கும் பைக் பயணங்கள் மிக அதிகம். இதனால் நகரெங்கும் ஒரே புல்லட்டுகள்தான்.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே பல வெளிநாட்டவர்களை பார்க்க முடிந்தது. என்னவென்று விசாரித்தபோது, அவர்கள் அனைவரும், மலையேறுவதற்காக வந்தவர்கள் என்பது தெரிந்தது. வயதில் இளையவர்கள், முதியவர்கள் என்று பலர் வந்திருந்தனர். இஸ்ரேல் நாட்டவர்கள் அதிகமாக வருகை தந்திருந்தனர். கோடைக்காலத்தில் பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் மலையேறுவதற்காக வருகிறார்கள் என்றால், மைனஸ் 20 டிகிரி குளிர் அடிக்கும் பனிக்காலத்திலும் மலையேறுவதற்கு வெளிநாட்டவர்கள் வருவார்கள் என்று தெரிவித்தனர். உணவு விடுதிகளும், ஹோட்டல்களும் கோடைக்காலத்தில் மட்டுமே திறந்திருக்கும் என்றும், கோடைக்காலம் முடிந்ததும், பெரும்பாலான மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று தெரிவித்தனர். புத்த மதத்தினரே லே மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் புத்த மதத்தோடு ஒப்பிடுகையில் குறைவே.
லே மக்கள் உள்ளுர் மொழியான லடாக்கி மொழியிலேயே பேசுகின்றனர். இந்தியை குறைவாகவே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை கணக்கு அறிவு கூட இல்லை. இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கினால் கூட, மொத்த பணத்தை கேல்குலேட்டர் மூலமாகத்தான் கணக்கிடுகிறார்கள்.
இரவு உணவை முடித்ததும் மறுநாள் பயணத்துக்காக விரைவில் உறங்கச் சென்றோம். மறுநாள் காலை, நாங்கள் வந்திருந்த இமாச்சல பிரதேச பதிவெண்கள் கொண்ட பைக்குகளுக்கு பதிலாக, ஜம்மு காஷ்மீர் பதிவெண் கொண்ட பைக்குகள் வழங்கப்பட்டன. புதிய பைக்குகளை பரிச்சயத்துக்காக சிறிது தூரம் ஓட்டிப் பழகினோம். மறு நாள் மோட்டார் வாகனத்தில் பயணிக்கக் கூடிய உலகின் மிக உயரமான பகுதியான கார்துங்லா பாஸ் என்ற இடத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து நூப்ரா பள்ளதாக்கு சென்று தங்குவதாக திட்டம்.
ஜம்மு காஷ்மீருக்கு எங்களுக்கு புதிதாக ஒரு ரோட் கேப்டன் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் உள்ளுரைச் சேர்ந்தவர். மிக மிக திறமையாக பைக் ஓட்டக் கூடியவர். அவர் முன்னால் செல்ல நாங்கள் புதிய பைக்குகளில் பயணத்தை தொடங்கினோம். இந்த பயணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், உரிய நேரத்தில் கிளம்புவது. ஒரு மணி நேர தாமதம் என்றால் கூட செல்லும் பாதையில் புதிய தடைகள் உருவாகி, பாதையே இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. அன்று லே விலிருந்து கிளம்ப 11 ஆகி விட்டது. அந்த தாமதத்துக்காக பெரும் சிக்கலில் சிக்கினோம்.
லே நகரிலிருந்து கார்துங்லா என்ற இடம் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நல்ல வெயில் அடித்ததால் யாரும் மழை கோட்டை அணிந்து கொள்ளவில்லை. வெறும் ஜெர்க்கின் மட்டுமே.
கார்துங்லாவை நெருங்கியதுமே மேகம் இருட்டிக் கொண்டது. லேசாக தொடங்கிய தூறல், மலை உயரத்துக்கு செல்ல செல்ல, பனி மழையாக பெய்யத் தொடங்கியது. ஜெர்க்கினின் மீது மெல்ல மெல்ல பனி விழத் தொடங்கியது. உடல் நனையாமல் ஜெர்க்கின் காப்பாற்றினாலும் கையில் அணிந்திருந்த க்ளவுஸ் நனைந்து விரல்கள் மரத்துப் போகத் தொடங்கின. ஷு நனைந்து கால் பாதங்களும் ஈரமாகின. கால் விரல்கள் மரத்துப் போயின. பனி காரணமாக பாதையும் சரியாக தெரியவில்லை. எங்களில் மூன்று பேரைத் தவிர எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கால் விரல்கள் மரத்துப் போய் வலிக்கத் தொடங்கியது. எனது உடல் குளிர் தாங்காமல் நடுங்கத் தொடங்கியது. எங்கள் முன்னால் பைக்கில் சென்றவர்கள் கடுமையாக தடுமாறினார்கள். கை விரல்கள் மரத்துப் போனதால் க்ளட்சை பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. போய் சேருவோமா இல்லையா என்ற சந்தேகமும் வலுத்தது.
ஒரு வழியாக தடுமாறி கார்துங்லா பாஸ் என்ற இடத்தை வந்தடைந்தோம். எங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தவித்துக் கொண்டிருக்கும்போதே, எங்களது ரோட் கேப்டன் மீண்டும் அதே வழியாக திரும்பிச் சென்று, எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் அழைத்து வந்தார். அந்த இடத்தில் ஒரு சிறு உணவகம் இருந்தது. பைக்கில் வந்த அனைவரும் அந்த உணவகத்தில் டீயும் நூடுல்ஸும் சாப்பிட்டோம். பனியிலிருந்து தப்பினாலும் எனக்கு உடல் நடுக்கம் போகவேயேல்லை. தொடர்ந்து நடுங்கிக் கொண்டே இருந்தேன். டீ கோப்பையைக் கூட கையில் பிடிக்க முடியவில்லை. அந்த நடுக்கம் நீங்க நீண்ட நேரம் ஆனது. பைக் ஓட்டிகள் அனைவரும், அந்த உயரமான இடத்தில் தவறாமல் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் காலையில் விரைவாக கிளம்பியிருந்தால் அந்த பனி மழையை தவிர்த்திருக்க முடியும். தாமதத்தினால்தான் அப்படி சிக்கிக் கொண்டோம். மீண்டும் கார்துங்லாவிலிருந்து கிளம்பி, நுப்ரா பள்ளத்தாக்கு என்ற இடத்தை வந்தடைந்தோம். இந்த இடத்திலும் டென்ட்டில் தங்கினோம். இரவு சூடான சப்பாத்தி பரிமாறப்பட்டது.
மறுநாள், ஒரு புத்தர் கோவிலுக்கு சென்றோம். செல்லும் வழியில் தலாய் லாமா ஒரு இடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். தலாய் லாமாவை பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உலகமே வணங்கும் புனிதரின் தரிசனம் பயணத்தை செழுமைப் படுத்தியது. புத்தர் கோவிலை முடித்து விட்டு மீண்டும் லே திரும்பினோம். அனைவரையும் பயணக் களைப்பு அழுத்தியது.
மறுநாளும் பைக் ஓட்ட வேண்டுமே என்பதே பெரும் மலைப்பாக இருந்தது. எப்படி ஓட்டப் போகிறோம் என்ற பயத்தோடே விடியலை எதிர்கொண்டோம். எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
பயணம் தொடரும்…
படங்கள் : ஏ.சுஜாதா