சங்கர்
மென்பொறியாளர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கு மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை இந்தியாவின் பொருளாதாரத்தையே தலைகீழாக புறட்டிப் போடப் போகிறது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகளால், க்ரெடிட் கார்ட் மற்றும் இணைய பொருளதாரத்துக்கு இந்தியாவே மாறி விட்டது என்றே உறுதியாக நம்புகிறார்கள். அது போன்ற எண்ணத்திலேயே மணாலி வந்த பலருக்கு, டிஜிட்டல் பொருளாதாரத்தின் நிழல் கூட அந்த நகரங்களின் மீது படியவில்லை என்பது தெரிந்திருக்கும்.
மணாலி நகரம், இமாச்சலப் பிரேதசத்தின் குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மணாலி நகரத்தின் பெயர், மனுதர்மத்தை உருவாக்கிய மனுவின் ஆலயம் என்ற பெயரில் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. இதை கடவுளின் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கின்றனர். ஒன்பதாயிரத்துக்கும் குறைவான மக்களே இந்த ஊரில் வசிக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதப் பிரச்சினைகள் தலைத் தூக்கத் தொடங்கிய பிறகு, பல சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இடமாக மணாலி மாறியது. ஆப்பள், பியர் மற்றும் ப்ளம் பழங்களின் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. பிரிட்டிஷார்தான் முதன் முதலில் ஆப்பிள் விவசாயத்தை மணாலிக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
மணாலியில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு சாதாரண ஹோட்டல். அங்கிருந்து கிளம்பி, தெர்மல் வேர் உள்ளிட்ட சில உடைகளை வாங்கலாம் என்று கடை வீதிக்கு சென்றோம். அங்கே ஒரு கடையில் கூட க்ரெடிட் கார்ட், பே டிஎம் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கவில்லை. ’கையில் காசு கொடுங்கள். இல்லையென்றால் கிளம்பிச் செல்லுங்கள்’ என்பதை வெளிப்படையாக கூறினார்கள். டிஜிட்டல் எகானமி என்றால் முறைத்தார்கள். அனைவரும் பணத்தை கொடுத்து, தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, ஹோட்டலுக்கு திரும்பினோம். காலை 9 மணிக்கெல்லாம் தயாராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
காலை எழுந்த பிறகுதான், எங்களைப் போல மற்ற மாநிலங்களில் இருந்து கிளம்பி வந்தவர்களை பார்த்தோம். கர்நாடக மாநிலம் மங்களுரிலிருந்து ஐந்து பேர் வந்திருந்தனர். அவர்களில் இருவர் தம்பதியினர். இதே போல ஐதராபாத், மும்பை, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்தும் தம்பதியினராக ஏராளமானோர் வந்திருந்தனர். மொத்தம் 24 பேர். 15 மோட்டார் சைக்கிள்கள். காலையில்தான் எங்களால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை பார்க்க முடிந்தது. சிலருக்கு புத்தம் புதிய பைக் வழங்கப்பட்டிருந்தது. வெறும் 74 கிலோ மீட்டர் மட்டுமே ஓடிய ஒரு பைக்கும் வழங்கப்பட்டிருந்தது. புதிய பைக்குகளை பரிசோதித்துப் பார்க்கக் கூட எங்களுக்கு நேரம் இல்லை. காலை உணவு முடிந்ததும் உடனடியாக கிளம்ப வேண்டியதாக இருந்தது.
அனைவருக்கும் என்ஃபீல்ட் புல்லட்டின் க்ளாசிக் வகை பைக்குகள் வழங்கப்பட்டன. அனைத்தும் 350 சிசி திறன் கொண்டவை. சிலருக்கு எலெக்ட்ரா பைக்குகள். 500 சிசி திறன் கொண்ட பைக்குகள் வேண்டுமென்றால் அதற்கான விலை கூடுதலாக இருக்கும். சில ட்ராவல் நிறுவனங்கள், என்ஃபீல்டின் புதிய வகை பைக்குகளான இமாலயன் பைக்குகளை வழங்கின. அதன் விலை 350 சிசி பைக்குகளை விட அதிகம். அதனால் அதன் வாடகையும் அதிகம். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட 350 சிசி திறன் கொண்ட பைக்குகளே பட்டையை கிளப்பின. அது குறித்து பின்னால் பேசுவோம்.
கிளம்புவதற்கு முன்னதாக பயணத்தின் விதிமுறைகள் அனைத்தையும் விளக்கினார்கள். ரோட் கேப்டன் என்று ஒருவர் அனைவருக்கும் முன்னால் செல்வார். அவரை பின்பற்றியே மற்றவர்கள் அனைவரும் செல்ல வேண்டும். சாலைகளில் முந்தக் கூடாது. பேக்அப் வாகனம் ஒன்று பின்னால் வந்து கொண்டிருக்கும். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.' என்பது விளக்கிச் சொல்லப்பட்டது. எங்களோடு பைக் பயணத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலும், அமெச்சூர்களே. பைக் ஓட்டுவதில் நிபுணர்கள் யாரும் கிடையாது.
வந்தவர்களில் பலர், ஏராளமான உடைகளை பெரிய பெரிய பெட்டிகளில் எடுத்து வந்திருந்தனர். சிலர், வீட்டை காலி செய்து வரும் அளவுக்கு லக்கேஜ்களை எடுத்து வந்திருந்தனர். அனைத்து லக்கேஜ்களும் மேக்ஸ் லோட் வாகனத்தில் ஏற்றப்பட்டன.
பைக் ஓட்டிகள் அனைவரும், காலில் ஷு, கையில் க்ளவுஸ், ஜெர்கின், ட்ரைவ் செய்வதற்கென ஒரு பேன்ட், தலையை முழுவதும் மூடும் ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து விண்வெளி பயணத்துக்கு செல்வது போல தயாராக நின்றனர். அந்த உடைகளோடு அவர்களை பார்ப்பதே பரவசமாக இருந்தது. கூடுதலாக எங்களோடு வந்திருந்தவர்கள் ஹெல்மெட்டில் பொருத்தக் கூடிய செனா என்ற கருவி ஒன்றை எடுத்து வந்திருந்தனர். இந்த செனா என்பது, ஒரு தகவல் தொடர்பு கருவி. குறிப்பாக பைக் பயணத்துக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கருவி. இதை ஹெல்மெட்டில் பொருத்திக் கொண்டால், ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்பில் இருக்கலாம். முதலில் செல்பவர், இந்த இடத்தில் திருப்பம் வருகிறது, இந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது, இந்த இடம் கடினமானது என்று பின்னால் வருபவர்களுக்கு அறிவிப்பு கொடுத்துக் கொண்டே செல்வார். இதன் விலை 24 ஆயிரம் ரூபாய்.
இது போன்ற பைக் பயணத்தின்போது, நம்மால் கேமராவை கையில் வைத்துக் கொண்டு புகைப்படமோ, வீடியோவோ எடுக்க இயலாது. ஆனால் நாம் காணும் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும் என்று நமக்கு தோன்றுவது இயல்பானது. இதற்காகவென்றே, தண்ணீர் புகாத வகையில் தயாரிக்கப்பட்ட, ஹெல்மெட் அல்லது பைக்கின் ஹேண்டில்பாரில் பொருத்தக் கூடிய கேமரா ஒன்று சந்தையில் இருக்கிறது. இதை ஹெல்மெட்டில் பொருத்தி, ஒரு பட்டனை ஆன் செய்தால், மெமரி இருக்கும் வரை, அனைத்துக் காட்சிகளையும் முழுமையாக 4கே தெளிவில் காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்யும்.
சீனாவில் தயாரித்த மலிவான கேமராக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தாலும், கோ ப்ரோ என்ற நிறுவனம் தயாரிக்கும் 40 ஆயிரம் மதிப்புள்ள கேமராக்களும் சந்தையில் இருந்தன. ஒரு நாள் கூத்துக்காக 40 ஆயிரம் செலவழிக்க முடியாது என்பதால், அந்த கேமரா வாங்கும் திட்டத்தை கைவிட்டேன். ஆனால் என்னோடு சென்னையில் இருந்து வந்த நண்பர்கள் மூன்று பேர் கோ ப்ரோ கேமரா வைத்திருந்தனர்.
கிளம்பியதும் வாகனங்கள் அனைத்தும் ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டது. அனைத்து பைக்குகளின் டாங்குகளும் நிரப்பப்பட்டன. பைக்குகளின் பின்னால் இருந்த ஸ்டாண்டில், இரண்டு ஐந்து லிட்டர் ப்ளாஸ்டிக் கேன்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் பெட்ரோல் முழுவதும் நிரப்பப்பட்டது. பழக்கமில்லாத பைக்கை ஓட்டத் தொடங்கியபோது தொடக்கத்தில் ஏற்பட்ட தடுமாற்றம், பெட்ரோல் பங்க் வரை சென்றதும் நீங்கியது.
பயணம் தொடங்கியதும் ஒரு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர்களுக்கு சாதாரணமாக ஊட்டியில் பயணம் செய்வது போன்ற உணர்வு மட்டுமே ஏற்பட்டது. சாலைகள் செம்மையாக இருந்தன. ஒரு இடத்தில் போக்குவரத்துத் துறையின் சோதனைச் சாவடி இருந்தது. அந்த சாவடியில் நாங்கள் செல்லும் பைக்குகளின் எண்களை பதிவு செய்ய வேண்டும். வாகனப் பதிவை முடித்து விட்டு கிளம்பிய பிறகுதான் பயணத்தின் உண்மையான தன்மை என்ன என்பதே புரிந்தது.
மணாலி நகரமே 6276 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நாங்கள் அதை விட உயரமான மலைகளின் மீது பயணிக்கத் தொடங்கினோம். அந்த மலைப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தையும் அமைப்பது, "பார்டர் ரோட் ஆர்கனைசேஷன்" என்ற இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவு. இதில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், ராணுவத்தின் பொறியியல் பிரிவில் இருந்து பணியாற்றுபவர்கள். 1960ம் ஆண்டு, மே மாதம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் எல்லைப்புறங்களில் சாலைகள் அமைப்பதை, குறிப்பாக மலைப்பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடங்கிய பின்னர், இந்திய எல்லைப்புறங்களில் மட்டுமல்லாமல், பூட்டான், மியான்மர் (பர்மா), தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் சாலை அமைக்கும் பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2004ம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்கியபோது இந்த நிறுவனம் தமிழகத்தில் பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மலைப்பகுதிகளில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனமாக இந்நிறுவனம் திகழ்கிறது. மணாலி முதல், சர்ச்சு என்ற பகுதி வரை அமைக்கப்பட்ட சாலைக்கான திட்டம், ப்ராஜெக்ட் தீபக். சர்ச்சு முதல் லே வரை அமைக்கப்பட்ட மலைப்பாதைக்கான திட்டத்தின் பெயர் ப்ராஜெக்ட் ஹிமான்க்.
சாலைகளை அமைக்கும் இந்த பார்டர் ரோட் ஆர்கனைசேஷன் நிறுவனம், இந்தியாவுக்காக ஒரு போரை வென்று கொடுத்திருக்கிறது என்ற செய்தி உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
பயணம் தொடரும்...
படங்கள் : ஏ.சுஜாதா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.