இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை- புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் எனும் எம்.எஸ். சுவாமிநாதன். அவரது மறைவால், கேரளாவில் உள்ள சிறிய கிராமம் இப்போது பிரபலம் ஆகியுள்ளது.
கேரளாவின் அழகான சிறிய கிராமம் மான்கொம்பு. எம்.எஸ். சுவாமிநாதன் தந்தை எம்.கே. சாம்பசிவன் ஐயர் இந்த கிராமத்தில் தான் பிறந்தார், கொட்டாரம் குடும்பம் என்று அழைக்கப்படும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இங்கு இன்னும் வசித்து வருகின்றனர்.
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம், கேரளாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் குட்டநாடு பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.
சுவாமிநாதன் 1925 இல் பிறப்பதற்கு முன்பு, அவரது தந்தை நெல் வயல்களைக் கொண்ட கிராமத்தை விட்டு வெளியேறி, அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த கும்பகோணத்தில் பொது மருத்துவராக பணியாற்றினார்.
தமிழ் பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தின் முதல் மருத்துவர் சாம்பசிவன் ஐயர் தான். கொட்டாரம் குடும்பம் கும்பகோணத்தை பூர்விமாகக் கொண்டது, பிறகு அங்கிருந்து மாங்கொம்புவில் குடியேறி விவசாயம் செய்தனர்.
‘அன்றைய காலத்தில் நாங்கள் நெல் வயல் உட்பட பெரும் நிலப்பரப்பு கொண்ட விவசாயிகள். சாம்பசிவன் மருத்துவம் படித்த பிறகு, வெளியூர் செல்ல விரும்பினார். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்’, என்று கொட்டாரம் குடும்பத்தைச் சேர்ந்த எம் கே பரமேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.
கும்பகோணத்தில் கொசு ஒழிப்புப் பணியை முன்னெடுத்த சாம்பசிவன், நகரின் முதல் நகராட்சித் தலைவரானார்.
சுவாமிநாதன் கும்பகோணத்தில் பிறந்தார், ஆனால் அவருக்கு 11 வயதாக இருந்தபோது, அவர் தனது தந்தையை இழந்தார். பின்னர் சித்தப்பா எம்.கே.நாராயணசுவாமி தான், சுவாமிநாதனை வளர்த்தார், அவரும் ரேடியாலஜி படித்துவிட்டு கும்பகோணத்தில் குடியேறினார்.
சுவாமிநாதன் மான்கொம்பு கிராமத்துடன், அங்கு வாழ்ந்த தனது உறவினர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார்.
அவரது தந்தை பிறந்த பாரம்பரிய நாலுகெட்டு அமைப்புடைய வீடு, இன்றும் கிராமத்தில் உள்ளது. இப்பகுதியில் இவர்களது குடும்பம் இன்னும் நெல் விவசாயம் செய்து வருகிறது. மேலும் சுவாமிநாதனுக்கும் அவரது பரம்பரைச் சொத்தில் பங்கு இருந்தது. அவர் மான்கொம்புக்கு பயணம் செய்தபோது, தனது உறவினர்களுடன் வசித்து வந்தார்.
கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தின் பாரம்பரிய சொத்தில் தேவசம் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோயிலும், மாநில அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பள்ளியும் அடங்கும்.
தற்போது அவிட்டம் திருநாள் அரசு மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 2012 ஆம் ஆண்டு தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடியது, இதில் சுவாமிநாதன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது சுவாமிநாதன் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தில், அவர் தனது எம்பி உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிக்கு ரூ 50 லட்சம் வழங்குவதாக அறிவித்தார், என்று பள்ளியின் அப்போதைய பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ஜெயன் சம்பகுளம் நினைவு கூர்ந்தார்.
சுவாமிநாதன் மற்றும் அவரது ஆராய்ச்சி அறக்கட்டளை அவரது முன்னோர்கள் பல தலைமுறைகளாக உழைத்த குட்டநாடு பகுதியை புதுப்பிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குட்டநாடு பகுதியின் ஈரநில அமைப்பின் மறுமலர்ச்சி மற்றும் அங்குள்ள மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் 1,840 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்குப் பின்னால் அவர் இருந்தார்.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, சுவாமிநாதன் பல ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு வழிகாட்டினார்.
Read in English: Kerala’s Mankombu – a farming village inextricably linked to M S Swaminathan by name and familial ties
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.