உடலின் குறை என்றுமே பலவீனம் ஆகாது என்பதை உணர்த்தி பல பெண்களுக்கு முன்னுதாரனமாக வெளிப்பட்டிருக்கிறாள் மும்பை சேர்ந்த 15 வயது சிறுமி.
மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமி மாஹி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 4 சகோதரிகளில் இளையவளான மாஹிக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. பார்வை குறைபாடு குழைந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் இயங்குவது பற்றி அறியாத அவளின் பெற்றோர், மும்பையின் தாதார் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் அவளை சேர்த்தார்.
பாலியல் துன்புறுத்தல் செய்தவனை தாக்கிய மும்பை சிறுமி
6ம் வகுப்பில் பயின்று வரும் மாஹியை அவளின் தந்தை தினமும் ரயில் மூலம் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இதே போல் டிசம்பர் 17ம் தேதி தாதார் ரயில் நிலையத்தில் அவளும், அவளின் அப்பாவும் வீட்டிற்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நேரம் இரவு 8 மணியளவில் இருந்ததால், கூட்டமும் அதிகமாக இருந்தது.
சரியாக 8.12 மணியளவில், ஒரு ரயில் வர, அந்த ரயிலில் ஏறுவதற்காக மகளின் கையை பற்றிக் கொண்டார் மாஹியின் தந்தை. முன்னாள் தந்தை செல்ல, அவரை பின் தொடர்ந்தே சென்ற மாஹி, ஒரு விநாடியில் யாரொ ஒருவரின் கை அவளின் மீது படுவதை உணர்ந்தால். மாஹியின் பின்னால் ஏறிய இளைஞர் அவளை தவறான தொடுதலால் பாலியல் துன்புறுத்தல் செய்வதை உணர்ந்து விழித்து கொண்டாள்.
கண் சிமிட்டும் வினாடியில் மின்னல் போல் செயல்பட்ட மாஹி, இளைஞரின் கையை இறுக்கி பிடித்து முறுக்கினால். அப்படியே அந்த இளைஞர் கீழே விழ, தனது அப்பாவிடம் கொடூரன் செய்ததை கூறினாள். கோபத்தில் மாஹியின் தந்தை அந்த இளைஞரை ஓங்கி அறைந்தார். சில நொடிகளிலேயே மாஹிக்கு ஆதரவாக பொதுமக்கள் திரண்டனர். பின்னர் ரயில்வே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சுமார் 5 மாதங்களாக தற்காப்பு கலையில் தீவிர பயிற்சி பெற்று வருகிறாள் மாஹி. இந்த பயிற்சியில் சுற்றி நடப்பதின் மீதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டதே துடுக்காக செயல்பட வைத்தது என்றும் சிறுமி தெரிவிக்கிறாள்.
தனக்கு ஒரு தவறு நிகழ்கிறது என்று அறிந்ததும் கலங்காமல், துணிச்சலுடன் செயல்பட்ட மாஹிக்கு அவளின் பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அவளுக்கும் தந்தைக்கும், கைத்தட்டி சிறப்பு பாராட்டு கொடுக்கப்பட்டது.
அந்த பாராட்டு விழாவில் பேசிய மாஹி, “யாரையும் பாலியல் துன்புறுத்தல் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. நான் திருப்பி அடிப்பேன் என அவன் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான். இதோடு நான் அமைதியாக இருக்கப்போவது இல்லை. அவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை எவ்வளவு முறை கோர்ட்டுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் செல்வேன்” என அனைவரையும் ஊக்குவிக்குவித்தாள்.
மீடூ போன்ற புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், உடலின் குறைபாடு ஒரு குறையே இல்லை என உலகிற்கே உணர்த்தியிருக்கிறாள் இந்த 15 வயது சிறுமி.