/indian-express-tamil/media/member_avatars/2025/03/15/2025-03-15t100634324z-sundar.jpg )
/indian-express-tamil/media/media_files/2025/06/17/O57UnQI0c0dVpnt17nC0.jpg)
முருகனின் அறுபடை வீடுகளை காண அரிய வாய்ப்பு: பக்தர்களைப் பரவசப்படுத்தும் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!
இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு 22-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக, மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடல் வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை கோயில்களில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளின் கோபுரங்களுடன் மாதிரி கோயில்கள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி கோயில்களில், அறுபடை வீடுகளின் தெய்வம் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளார். அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்களை மாதிரி அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் மூலவர் கையில் பிடித்தபடி காட்சியளிக்கிறார். திருப்பரங்குன்றம் முருகன் அமர்ந்தபடியும், பழனி முருகன் ராஜாங்க அலங்காரத்திலும் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு கோயிலின் சிறப்புகள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் தூண்கள், சிற்பங்கள் அச்சிடப்பட்ட பிளக்ஸ் ஒட்டப்பட்டு கோயில் போல் தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாதிரி அறுபடை வீடுகளை 22-ம்தேதி வரை பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை,மாலையில் இரு மணி நேரம் பூஜை செய்யவும், பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (ஜூன்16) அறுபடை வீடு கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், 2-வது நாளாக இன்று ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சவர் முருகனை கண்டு தரிசித்தனர். பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்து முன்னணி ஈடுபட்டுள்ளது. இதனிடையே, அறுபடை திடலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறை, மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.
மாதிரி அறுபடை வீடுகளில் வழிபட வரும் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடுகிறார்கள். முருக பக்தர்கள் மாநாடு 22-ம் தேதி பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை நடக்கும். மாலை 6 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி மற்றும் திருப்புகழ் பாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
செய்தி: சோ.மீனாட்சி சுந்தரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.