விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 'சரவணன் மீனாட்சி' தொடரின்மூலம் 'மைனா'வாக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை திறனால் பல ரசிகர்களை தன் வசமாக்கிக்கொண்டவர் நந்தினி. இவரை நந்தினி என்பதைவிட 'மைனா நந்தினி' என்பதுதான் அனைவர்க்கும் பரீட்சையம். அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தோடு இணைந்திருப்பார்.
Advertisment
இவரை இப்போது பார்க்கும்போது, 'ஆரம்பத்தில் மாநிறமாகத் தெரிந்தவர், இப்போது எப்படி இந்த அளவிற்கு நிறம் மாற்றம் இவருக்கு வந்தது?' என்கிற கேள்வி எழாமல் இருக்காது. அந்த அளவிற்கு மிகப் பெரிய நிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான விளக்கத்தை அவருடைய யூடியூப் பக்கத்தில் அவரே பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தன்னுடைய இந்த சேஞ்ஓவருக்கு இருந்த ரகசியத்தையும் பகிர்ந்திருக்கிறார் மைனா நந்தினி.
"எப்போதும் வெளிப்புறத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, நாம் உட்கொள்ளும் உணவுகளில் கவனம் செலுத்தினாலே போதும். ஆரோக்கியமான உடல் மற்றும் சருமம் நிச்சயம் கிடைக்கும்" என்று தொடங்கும் நந்தினி தொடர்ந்து ஏபிசி ஜூஸ் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.
"6 கேரட், 1 பீட்ருட், 1 இன்ச் இஞ்சி ஆகியவற்றைத் தோல் சீவி எடுத்துக்கொள்ளுங்கள். அதனோடு அரை ஆப்பிள் மற்றும் சிறிதளவு புதினா எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்கு சுத்தம் செய்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை வடிகட்டி எடுத்தால் ஜூஸ் ரெடி. நான் தண்ணீர், சர்க்கரை போன்றவற்றை சேர்க்க மாட்டேன். உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த ஜூஸை இரண்டு நாள்கள் இடைவெளி விட்டு வாரம் இரண்டு முறை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். கேரட் அதிகமாக எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அதனால்தான் வாரம் இரண்டுமுறை மட்டுமே இதனை உட்கொள்ளவேண்டும். இஞ்சி மற்றும் புதினா இரண்டும் செரிமானத்திற்கு சிறந்தது. அதனால் இதனையும் சேர்த்துக்கொள்ளலாம். புதினா பிடிக்காதவர்கள் சேர்த்துக்கொள்ளவேண்டாம்" என்கிறார் நந்தினி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"