சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதாவை தெரியாத சின்னத்திரை ரசிகர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த சீரியல் அவரை பாப்புலர் ஆக்கியது. தற்போது ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. பட்டதாரியான அவர், மாடலிங்கும் செய்துகொண்டிருந்தார். கன்னட சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான மேக மந்தரன் என்ற சீரியல் தான் இவருக்கு முதல் தொடர். அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து 5 கன்னட சீரியல், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு 2011ல் விஜயஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
Advertisment
பின்னர் விஜய்டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை ரச்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி இரண்டு சீசன்களிலும் இவரே நடித்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு படத்திலும் அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான பாரதி ராஜா என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.
ஒரு சில படங்களில் நடித்த பின் மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தொடர்கள், ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்தார். ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார். கலர்ஸ் தமிழில் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கலர்ஸ் தமிழின் அம்மன்-மாங்கல்ய சந்தோசம் சீரியல் மகா சங்கமத்தில் அம்மன் கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பியுள்ள அவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ரச்சிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தெலுங்கிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ரச்சிதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி , ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனது கணவருடன் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம் ரச்சிதா. வீட்டில் அதிகமாக சேட்டை செய்வாராம்.
சீரியல்களில் இவரது உடை அலங்காரம், புடவை கலெக்ஷனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ரச்சிதாவுக்கு புடவை என்றால் கொள்ளை பிரியமாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"