ஸ்வேதா சர்மா
இந்த ஆண்டு இந்தியாவின் நாஸ் ஜோஷி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட லெஹங்கா சோலி உடையணிந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக பன்மைத்துவ அழகி பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து மூன்று முறை உலக பன்மைத்துவ அழகி பட்டம் வென்ற இந்தியாவின் முதல் திருநங்கை என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
இந்த வெற்றி மூலம் பெண்களுடன் போட்டியிட்டு சர்வதேச பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு பாலியல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜோஷி, முடிவாக தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது வாழ்க்கைப் பயணத்தை இந்தியன் எக்ஸ்பிர டாட் காம் உடன் பகிர்ந்துகொண்டார்.
எனது குழந்தைப் பருவம் ஒரு கொடுங்கனவாக இருந்தது. இதுவரை நான் மேற்கொண்ட பயணம் என்பது என்னுடைய உணர்ச்சிகள், கடின உழைப்பு மற்றும் உற்சாகம் ஆகியவை எல்லாம் ஒப்பிடுகையில் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு குறைந்தது அல்ல. மேலும், நான் வாழ்வதோடு மட்டுமல்லாமல், உலகிற்கு ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டுள்ளேன்.
குழந்தை பாலியல் வன்கொடுமை முதல் விபச்சாரியாக இருப்பது வரை; அழுக்கில் இருந்து புகழ் வெளிச்சம் வரை நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இன்று நான் எனது குடும்பம், அரசு அல்லது அரசு சாரா அமைப்புகளின் எந்த ஆதரவும் இல்லாமல் அனைத்திலும் சாதித்துள்ளேன். இந்தியா மாற்றுப் பாலினத்தவர் மீது ஒவ்வாமை கொண்ட ஒரு நாடு; அது ராமாயணம், மகாபாரதம், முகலாய சகாப்தம், கஜுராஹோ கோயில்கள் ஆகியவற்றில் மூன்றாம் பாலினத்தவர் பற்றி குறிப்பிட்டிருப்பதை மறந்துவிட்டது. எங்கள் அரசாங்கத்தால் நாங்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக கருதப்படுகிறோம். நாங்கள் பிறந்த நாளிலிருந்து இறக்கும் வரை நாங்கள் அனைவரும் கடந்து செல்லும் வலி மற்றும் அதிர்ச்சியான சொல்லப்படாத கதைகளைப் பற்றி அரசாங்க அமைப்புகளுக்குச் சொல்ல வேண்டும். அது நாங்கள் மட்டுமல்ல, எங்களுடன் சேந்ததற்காக எங்களுடைய குடும்பமும் சமூகத்தால் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும்தான்.
நீங்கள் இந்த ஆண்டு முன்றாவது முறையாக உலக பன்மைத்துவ அழகி பட்டம் வென்றிருக்கிறீர்கள் - இதை எப்படி உணர்கிறீகள்?
நான் ரொம்ப பெருமையாக உணர்கிறேன். இந்த பட்டத்தின் மூலம் உலகத்தைப் பாதிக்கும் தீமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும், குரல் கொடுக்கும் பொறுப்பும் சக்தியும் வந்திருக்கிறது. நான் அடுத்த ஓராண்டில் மாற்றுப்பாலினத்தவர்கள் வளர்ச்சிக்காகவும், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் பணியாற்ற விரும்புகிறேன். மேலும், குடும்ப வன்முறைகளுக்கு எதிராகவும் பணியாற்ற விரும்புகிறேன்.
போட்டியாளராக உங்களை எப்படி தயார் செய்தீர்கள்?
கடந்த ஒரு வருடமாக நான் பாலின சமத்துவம் குறித்த ஒரு திட்டத்தில் பணியாற்றி வருகிறேன். அதன் ஒரு பகுதியாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு சங்கங்களுக்கு சென்று மூன்றாம் பாலினத்தைப் பற்றி அவர்களை உணரவைக்கிறேன். அதே நேரத்தில், நான் எனது சருமம், உடல், உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தி பயிற்சி செய்தேன். மேலும், நான் போட்டிகளில் பங்கேற்பதற்கும் எனது தேவைகளையும் ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு நிபுனர்களைப் பெற்றிருக்கிறேன்.
இந்த ஆண்டு போட்டியில் நீங்கள் நட்பான அழகி என்ற பட்டத்தையும் சிறந்த உடை அலங்காரப் பிரிவிலும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய ஒப்பனை அலங்காரம் பற்றி கூற முடியுமா?
நட்பான அழகி பட்டம் மிகவும் மரியாதைக்குரிய போட்டியாளருக்கு வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் நான் வென்ற விருது இது. தேசிய உடைக்கான விருதுக்காக நான் லெஹங்கா சோலி அணிந்தேன். அது எனது ஸ்டைலாக இருந்தது.
ஆழமான நீல நிறத்தில் இருந்த வெல்வெட் நூல் விசுவாசத்தைக் குறிக்கிறது, மேலும், அதில் பயன்படுத்தப்பட்ட பண்டைய டப்கா மற்றும் கை எம்பிராய்டரி நுட்பம் நமது கைவினைஞர்களுக்கான ஒரு இடமாகவும் இருந்தது. நான் இந்திய தெய்வங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக கிரீடம் அணிந்திருந்தேன். அதில் கவர்ச்சியைச் சேர்க்க, கிரீடத்தில் தங்க மயில் இறகுகள் சேர்க்கப்பட்டன. அதே நேரத்தில் சிவப்பு பொட்டு இந்திய பெண் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக இருந்தது. இந்தியப் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல, நாங்கள் அன்பின் தெய்வம் என்பதை உலகுக்குக் காண்பிப்பதே இந்த யோசனையின் நோக்கமாகவும் இருந்தது, அதனால், நம்மை தற்காத்துக் கொள்ளும்போது நாமும் சக்தியாக இருக்க முடியும் என்று இது உணர்த்துகிறது.
உங்கள் பார்வையில் இந்தியாவின் LGBTQ சமூகத்திற்கான விஷயங்கள் எவ்வளவு மாறியுள்ளன?
பிரிவு 377 ரத்து செய்யப்பட்ட பின்னர், லெஸ்பியன், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் இருபாலின மக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். ஆம், இது இன்னும் சட்டப்பூர்வமாகவில்லை, ஆனால், இந்த சமூக மக்களிடையே திருமணங்கள் நடப்பதை நான் பார்க்கிறேன். ஆனால், மாற்றுப் பாலினத்தவர்கள் முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் அது மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கு போய்விட்டது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாற்றுப்பாலினத்தவர் மசோதா மாற்றுப்பாலினத்தவர் நலன் குறித்து பேசுகிறது என்பது நமது நாட்டில் உள்ள மாற்றுப்பாலின மக்களை கேலி செய்வதாக உள்ளது. அதில், ஒரு மாவட்ட நீதிபதி எங்கள் பாலினம் குறித்து முடிவெடுப்பார் என்று உள்ளது. நமது அரசாங்கம் ஆச்சாரமாக இருக்கிறது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பதாக நான் பார்க்கவில்லை. நான் அந்த கமிட்டியில் திருநங்கை, திருநம்பி இருவருமே இருக்க வேண்டும் என்று கோருகிறேன்.
உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?
நான் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதியை அதிகரிக்க வேலை செய்ய இருக்கிறேன். மேலும், நான் திருநங்கைகளை வண்ணமயமான புடவைகள், அதிக அலங்காரம், ஒரு பெரிய பொட்டு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தும் நம் நாட்டு மக்களின் ஒரே மாதிரியான மனநிலையை மாற்றுவதற்கு வேலை செய்ய திட்டமிட்டுள்ளேன். நான் ஒரு ஒற்றைத் தாய். நான் எனது எட்டு மாத பெண் குழந்தையை மிகுந்த கண்ணியத்துடன் வளர்த்துவருகிறேன். குழந்தை வளர்வதற்கு எனது பெற்றோர்களும் உதவுகிறார்கள்.