நாகையில் இருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் கப்பல் சேவையை கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செரியபாணி என்ற பெயரில் கடந்தாண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த 'செரியபாணி' என்ற பயணிகள் கப்பல், நாகையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 13-ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சிவகங்கை என்ற புதிய கப்பல் செல்ல உள்ளது. இந்த பிரமாண்ட பயணிகள் கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகள் மற்றும் மேல் தளத்தில் 25 இருக்கைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழ் அடுக்கு இருக்கைகளுக்கு ரூ.5000 மற்றும் ஜிஎஸ்டி மற்றும் மேல் அடுக்கு சிறப்பு வகுப்பிற்கு ரூ.7000 வரை வசூலிக்கப்படுகிறது. அந்தமானில் தயாரான சிவகங்கை பயணிகள் கப்பல் மே 10-ம் தேதி நாகை துறைமுகம் வருகிறது. இதையடுத்து நாகையில் இருந்து இலங்கைக்கு மே 13-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து பொதுமக்கள் விமானத்தில் தான் இலங்கை செல்ல வேண்டி உள்ளது. இனி நாகையில் இருந்து கப்பல் மூலமாகவே பொதுமக்கள் இலங்கை சென்று வரலாம். இந்த கப்பல் நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும், பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் இலங்கையில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம்.
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளதால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டும் போதுமானது. நாகை-காங்கேசன் இடையே நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“