Madhya pradesh govt action against milk adulteration: மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள மொரேனா மாவட்டத்தில் வசிக்கும் தேவேந்திர குர்ஜார் மற்றும் ஜெய்வீர் குர்ஜார் செயற்கை பாலை விற்று வந்தது அம்பலமாகியுள்ளது . இதில் இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்திலுள்ள பல பால் உற்பத்தியாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அது என்ன செயற்கை பால் ?
பசுவிலிருந்து பால் கறப்பதை நாம் படத்திலோ அல்லது நிஜ வாழ்விலோ பார்த்திருப்போம். ஆனால் , செயற்கை பால் மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. அந்த பாலை குளுக்கோஸ், யூரியா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பால் பவுடர் மற்றும் தண்ணீரை கலந்து தயாரிக்கின்றனர் . இதனால் கிடைக்கும் மூலப் பொருட்கள் செயற்கை சீஸ் மற்றும் மாவா.
இந்த செயற்கை பாலை தயாரிக்க சராசரி ஒரு லிட்டருக்கு ஆறு ரூபாய் செலவாகும். விற்கும் போது ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் என்ற கணக்கு வைத்தாலும் லாபத்தின் விகிதம் 70 முதல் 75% வரையில் கிடைக்கிறது .
மத்திய பிரதேசம் சிறப்புப் படை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் படோரியா இதைப் பற்றி தெரிவிக்கையில், " விசாரணையின் போது இந்த இரு சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் குற்றம் செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்கள் என்பதால் இன்னும் ஆழமான விசாரணை தேவைப்படுகிறது.தேவைப்பட்டால் வருமான வரி துறைக்கு இந்த வழக்கை மாற்றுவோம் " என்றார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் மற்றும் உணவு கலப்படம் தடுப்பு சட்டதின் கீழுள்ள பிரிவுகளின் மீது இந்த ஆறு பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது .
சம்பல் பிராந்தியத்தில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட பெரிய பால்பண்ணைகளை சிறப்புப் படை மற்றும் உணவுத் துறையால் கூட்டாக சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து செயற்கை பால் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன . மாநிலத்தின் பிற பகுதிகளிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக கடந்த ஆறு நாட்களில் மட்டும் 65 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.டி.எஃப் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அசோக் அவஸ்தி கூறுகையில், “சம்பலில் தினசரி பால் உற்பத்தி வெறும் 11 லட்சம் லிட்டர் தான், ஆனால் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் , 19 லட்சம் லிட்டர் இடைவெளி போலித்தனமான செயற்கை பாலால் நிரப்பப்படுகிறது. இந்த செயற்கை பாலால் புற்றுநோய் மற்றும் பலதரப்பட்ட நீடித்த நோய்கள் வர வழிவகுக்கும் .
மிகவும் அபாயகரமான விஷயம் என்பதால் மத்தியபிரதேச அரசாங்கம் கலப்படம் செய்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரித்துள்ளது .ஏனெனில்,தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒரு கடுமையான சட்டமாகும். தவறு செய்வதற்கு முன்னே ஒரு மனிதனை பல மாதம் தடுப்பு காவலில் வைக்க முடியும் . செயற்கை பால் விற்பனை பற்றிய தகவல்களுக்கு ஹெல்ப்லைன் நம்பரை மாநிலத்தில் உள்ள 52 மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது அந்த அரசாங்கம்.
மத்திய பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் கூறுகையில் "இந்த சட்டவிரோதமான தொழிலை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்று காட்டமாக தெரிவித்தார்".
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.