/indian-express-tamil/media/media_files/2025/03/31/SMEYStfBxo2oudO5bqij.jpg)
தொடர் தும்மலுக்கு அலர்ஜிக் ரைனிட்டிஸ் (Allergic rhinitis) எனும் பிரச்னையே காரணம். அதாவது ஒவ்வாமையின் விளைவால் மூக்கின் உள்ளே உள்ள சவ்வில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறிக்கும் பிரச்னை இது. பலருக்கும் இந்த ஒவ்வாமையானது மூக்கின் உள்சவ்வு அழற்சியோடு மட்டும் நிற்காமல், சைனஸ் என்கிற பாதிப்பையும் ஏற்படுத்தும். மூக்கைச் சுற்றியுள்ள காற்றறைகளில் ஏற்படும் ஒவ்வாமையாலும் தும்மல் வரலாம்.
தூசி அல்லது நெடியின் காரணமாக தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும். ஆனால் அதுவே 50, 60 என அடுக்கடுக்காக தும்மல் வந்தால், அது அலர்ஜியின் காரணமாக வந்ததாக இருக்கலாம்.
சைனஸ் பிரச்னைகளில் பினிசம், சீல் பினிசம், சிராய் ஃபினிசம் என பல்வேறு நிலையில் உள்ளன. அதீத உடல் உஷ்ணம் காரணமாக இது ஏற்படும். இதேபோல், மழைக்காலங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சைனஸ் தொல்லை இருக்கும். காலையில் ஏற்படும் அடுக்கு தும்மல், தலை பாரம், முகம் வீக்கமாக இருத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகள். 12-14 வயது இருந்தே இந்த பிரச்னை வரக்கூடும் என்கிறார் மருத்துவர் சாலை ஜெயகல்பனா.
சைனஸ் பிரச்னை- நீர்முத்திரை:
சைனஸ் பிரச்னை உடலின் தோன்ற தொடங்கும் போதே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும் என்கிறார் மருத்துவர் சாலை ஜெயகல்பனா.
எண்ணெய் குளியல்:
அடுக்குத் தும்மல் பிரச்னை உள்ளவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். குளிர்ச்சியான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். வெப்பத்தைக் கொடுக்கக் கூடிய எண்ணெய் குளியல் முறைகளை மேற்கொள்ளலாம். அதாவது, சுக்கு தைலம், அரக்கு தைலம் ஆகியவற்றை தலைக்கு தேய்த்து மிதமான வெந்நீரில் வாரத்திற்கு இருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ளும்போது உடல் விரைந்து குளிர்ச்சியாகும்.
ஆவிபிடித்தல்:
மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆவிபிடித்தல் மற்றொரு சிறந்த தீர்வு. அதீத சளிப் பிரச்னைக்கும் ஆவி பிடித்தல் தீர்வு கொடுக்கும். கொதிக்கும் தண்ணீரில் தைலம் அல்லது நீராவி மாத்திரையை போட்டு தலையை துண்டால் மூடி ஆவிபிடிக்க தும்மல் உள்ளிட்ட அனைத்து சளிப்பிரச்னைகளும் தீரும் என்கிறார் மருத்துவர் சாலை ஜெயகல்பனா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.