/indian-express-tamil/media/media_files/2025/05/07/jOv7uzPGmQVH0pDKSqZg.jpg)
மழை மற்றும் வெயில் என எந்த காலநிலை மாற்றமாக இருந்தாலும் கொசுக்களின் தொல்லை எப்போதுமே அதிகமாக இருக்கும். இவற்றை இயற்கையான முறையில் விரட்ட முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான வழிமுறையை மருத்துவர் சிவா கூறுகிறார்.
இதற்காக சில செடிகளை பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். அதன்படி, துளசி செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசு தொல்லையை கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார். ஏனெனில், துளசியில் இருக்கும் யூஜினால், லினலூல் மற்றும் கேம்போர் ஆகியவை கொசுக்களின் வாசனை உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக துளசி செடி இருக்கும் இடங்களில் கொசுக்கள் வருவதில்லை.
அடுத்தபடியாக, எலுமிச்சை புல்லை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவா தெரிவித்துள்ளார். எலுமிச்சை புல்லில் சிட்ரோனெல்லா என்ற எண்ணெய் இருக்கிறது. இதன் காரணமாக மனிதர்களின் வாசனையை கொசுக்களால் உணர முடியாது. எனவே, இவற்றையும் உபயோகப்படுத்தலாம்.
கொசுக்களின் இனப்பெருக்கத்தையே தடுக்கும் ஆற்றல் வேப்பமரத்திற்கு இருப்பதாக மருத்துவர் சிவா தெரிவித்துள்ளார். வேப்பிலையின் வாசனை, கொசுக்களுக்கு விரும்பத்தகாத சூழலை உருவாக்கும். இதனால், வேப்பிலை சாறை சிறிதளவு சருமத்தில் தடவிக் கொள்ளலாம். மேலும், வேப்பிலையை எரித்தாலும் கொசுக்கள் வராது.
இதேபோல், சாமந்தி செடிக்கும் கொசுக்களை விரட்டும் ஆற்றல் இருக்கிறது. இதில் இருந்து வெளியாகும் வாசனை கொசுக்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று மருத்துவர் சிவா தெரிவித்துள்ளார். எனவே, சாமந்தி செடியை வீட்டைச் சுற்றி வைப்பதன் மூலம் கொசுக்களும் வராது, பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
இது தவிர புதினா செடி இருக்கும் இடத்திலும் கொசுக்கள் இருக்காது. இதில் இருக்கும் மென்தாலின் காரணமாக, மனிதர்களின் வாசனையை கொசுக்களால் உணர முடியாது. எனவே, புதினா எண்ணெய்யையும் சிறிதளவு நம்முடைய சருமத்தில் தடவிக் கொள்வதன் மூலம் கொசுக்களை விரட்ட முடியும்.
நன்றி - Dr.Siva's Hale & Healthy Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.