பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore: இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி, இந்த ஆண்டின் நவராத்திரி விழா அக்டோபர் 15ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டி உள்ளது.
இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று முதல் தொடங்கியது. இந்த கண்காட்சி அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு பல்வேறு சாமி சிலைகள், பண்டிகைகளையும் இல்ல விழாக்களையும் குறிக்கும் விதமான பொம்மைகள் என பல்வேறு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தசாவதாரம் செட், விநாயகர் செட், அத்திவரதர், தர்பார் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட், கருட சேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர் தசரா, வாசு தேவர் உள்ளிட்ட செட் மற்றும் இந்தாண்டு புது வரவாக சந்திராயன் விண்கல செட் மற்றும் மருதமலை கோவில் முழுமையான தோற்றத்தை அறிமுக படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாமல்லபுரம் செட், உழவர் சந்தை செட், ஜல்லிக்கட்டு, தஞ்சாவூர் தலையாட்டு பொம்மைகள், துலாபாரம், அரசியல் தலைவர்கள், மரபாச்சி பொம்மைகள், நடை வண்டி, சமையல் செட், விநாயகர் கிரிக்கெட் டீம் மற்றும் கொலு பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
இதில் இடம்பெற்றுள்ள சந்திராயன் விலை செட்டின் விலை ரூ. 2999 ஆகும். மற்ற கொலு பொம்மைகளின் விலை 110 ரூபாயில் இருந்து உள்ளது. மேலும் இந்நாட்களில் பொருட்களுக்கு ஏற்ப தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. கண்காட்சி தொடங்கிய முதல் நாளே ஏராளமான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“