navarathri : இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பண்டிகைகளின் பெரிய பட்டியலில் இது முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு உலக அளவில் அதிக மக்கள் கூடும் விழாவாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் கொலு வைத்தால், கொல்கத்தாவில் பந்தல்கள் அமைக்கிறார்கள். ஆந்திராவில் மலர் தாம்பாளத்தை சுற்றி நடனமாடினால், குஜராத்தில் மண் பானையை சுற்றி நடனமாடுகிறார்கள்.இப்படியாக நவராத்திரி திருவிழா தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.
பண்டைய காலத்தில் பல்வேறு விதமான நவராத்திரி வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த பல்வேறு வகையான வழக்கங்களை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் எல்லாம் தலையாயது ஒன்பது நாட்களும் விரதம் இருப்பது.இந்தியா முழுவதும் சில நவராத்திரிப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் சாரதா மற்றும் வசந்த நவராத்திரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு மாநிலங்களில் வித விதமான முறையில் இந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாடு:
தமிழ் நாட்டில் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை திதிக்கு அடுத்தநாள் வரும் பிரதமை திதியன்று நவராத்திரி விழவை கும்பபூஜையுடன் (கலச பூஜை) தொடங்குகிறார்கள். முதல் மூன்று நாள் துர்காவையும், அடுத்த மூன்று நாள் லக்ஷ்மியையும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். அதுமட்டுமில்லை வீட்டில் கொலு பொம்மைகளை வைப்பது தமிழ்நாடு பாரம்பரியம் ஆகும்.
கர்நாடகா:
மைசூர் தசரா திருவிழா (நவராத்திரி) உலகப்புகழ் பெற்றது. மைசூர் அரசர்கள் ஆட்சியில் தசரா எனப்படும் நவராத்திரி விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக பெற்றது. இப்போதும் இந்தப்பாரம்பரிய திருவிழா அதிகம் பொலிவிழக்கவில்லை.ஒவ்வொரு வருடமும் ஜம்பூ சவாரி என்ற யானைகள் ஊர்வலம், வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள் என்று கர்நாடகாவே கோலாகலப்படும்.
கேரளா:
கேரளாவில் நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அதாவது விஜயதசமியும் அதற்கு முந்தைய 2 தினங்களான அஷ்டமியும், நவமியும் கேரளாவில் முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன.அஷ்டமி தினத்தன்று சரஸ்வதி தேவி முன்பாக புத்தகங்களை வைத்து வணங்கி பின்பு விஜயதசமி தினத்தன்று எடுத்து படிக்கும் வழக்கமும் கேரளாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.